2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

கிழக்கின் சில பகுதிகளில் மிதிவெடி அபாயம்

Suganthini Ratnam   / 2013 நவம்பர் 05 , மு.ப. 04:49 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ.ஹுஸைன்


மட்டக்களப்பு மாவட்டத்தின் கரடியனாறு, திருப்பெருந்துறை, ஈரலக்குளம், கல்மடு, கொக்கட்டிச்சோலை, முறுத்தானை ஆகிய பகுதிகளிலும் திருகோணமலை மாவட்டத்தின் இறால்குளிப் பகுதியிலும் மிதிவெடி அபாயம் உள்ளதென்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக யுனிசெப் நிறுவனத்தின் கண்ணிவெடிச் செயற்பாட்டுத் திட்ட அதிகாரி ரீ.யதார்த்தனி தெரிவித்தார்.

மிதிவெடி அபாயக் கல்வி சம்பந்தமான அறிவூட்டல் நிகழ்ச்சிகளை கல்வி அமைச்சு, தேசிய கல்வி நிறுவகம் மற்றும் யுனிசெப் ஆகியன இணைந்து நடத்திவருகின்றது.

இது தொடர்பான அறிவூட்டல் பயிற்சிநெறியொன்று மட்டக்களப்பு சர்வோதய பயிற்சி நிலையத்தில் நேற்று திங்கட்கிழமை (04) நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். 

கிழக்கு மாகாணத்தில் இன்னமும் மிதிவெடிகள் உள்ளதாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள கல்வி வலயங்களைச் சேர்ந்த கல்வி அதிகாரிகள் சுமார் 30 பேர் இந்தப் பயிற்சிநெறியில் கலந்துகொண்டனர்.

இதேவேளை, வடக்கு, கிழக்கு மாகாணங்கள் மற்றும் அதனை அண்மித்த மிதிவெடி அபாயம் உள்ள  பிரதேசங்களில் கல்வி பயிலும் தரம் 6 தொடக்கம் தரம் 9 வரையான பாடசாலை மாணவர்களை இலக்காகக் கொண்டு வாழ்க்கைத் தேர்ச்சியும் குடியுரிமைக் கல்வியும் என்ற பாடப்பரப்பை உள்ளடக்கியதாக கைந்நூல் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது.

மிதிவெடிகளினதும் மற்றும் இன்ன பிற வெடி பொருட்களினதும் அபாயங்களிலிருந்தும் மாணவர்களைக் காப்பதற்கான அறிவூட்டல் கல்விக்காகவே இந்தக் கைந்நூல் தயாரிக்கப்பட்டுள்ளது என கல்வி அமைச்சின் கண்ணிவெடி இடர் பாதுகாப்புப் பிரிவின் செயற்றிட்டப் பணிப்பாளர் இஸட்.தாஜுதீன் தெரிவித்தார்.

மாணவர்கள் இயல்பாகவே கூடி விளையாடுவதில் பெரிதும் ஆர்வம் காட்டுபவர்கள். இதன்போது மிதிவெடிப் பகுதிகளிலும் சென்று ஏதேச்சையாக விளையாடும் வாய்ப்பும் ஏற்பட்டுவிடக் கூடும்.  அதுபோலவே பாடசாலை விடுமுறை நாட்களிலும் வேறு தேவைகளுக்காக மிதிவெடி அடங்கலான பேராபத்து விளைவிக்கும் பொருட்களை எதிர்கொள்ளும் சந்தர்ப்பமும் ஏற்பட வாய்ப்புண்டு எனவும் அவர் கூறினார்.

மிதிவெடியும் வெடிக்காத நிலையிலுள்ள யுத்தத்திற்குப் பயன்படுத்திய பொருட்களும் கூட உயிரிழப்பை ஏற்படுத்தக் கூடியவை.
சிலவேளைகளில் இப்பொருட்களினால் அங்கங்களைக் கூட இழக்க நேரிடலாம். அதன் காரணமாக சிறார்கள் பாடசாலைக்குச் செல்வதையும் படிப்பதையும் நண்பர்களுடன் சேர்ந்து கூடி விளையாடி மகிழ்வதையும் நிரந்தரமாகவே இழக்க வேண்டி ஏற்;படலாம் எனவும் அவர் கூறினார்.

மேலும், மிதிவெடியின் பாதிப்பிற்கு உள்ளானவர்கள் மற்றையவர்களில் வாழ்நாள் பூராவும் தங்கியிருக்க வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டு விடுகின்றது. இது பாதிக்கப்பட்டவருக்கு மட்டுமல்லாமல் ஏனையவர்களுக்கும் பெரும் அசௌகரியத்தை உண்டு பண்ணிவிடும்.
பாதிக்கப்பட்டவரின் சொந்த வளர்ச்சிக்கும் ஏனையவரின் பொருளாளதார மேம்பாட்டிற்கும் பெரும் முட்டுக் கட்டையாகவும் இந்தப் பாதிப்பின் பின் விளைவு காணப்படும் எனவும் அவர் கூறினார்.

இந்தப் பின்னணியிலேயே மிதிவெடி இடர் பாதுகாப்புக் கல்விப்பாட விதானத்தில் வாழ்க்கைத் தேர்ச்சி குடியுரிமைக் கல்வி என சேர்த்து இப்பாடம் போதிக்கப்பபடுகின்றது என கல்வி அமைச்சின் கண்ணிவெடி இடர் பாதுகாப்புப் பிரிவின் செயற்திட்டப் பணிப்பாளர் இஸட்.தாஜுதீன்  தெரிவித்தார்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .