2025 மே 03, சனிக்கிழமை

வெளிநாட்டவர்கள் வடக்கிற்கே செல்கின்றனர்: முரளிதரன்

Suganthini Ratnam   / 2014 பெப்ரவரி 17 , மு.ப. 08:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்

வெளிநாட்டவர்கள் அனைவரும் வடக்குக்குத்தான் செல்கின்றனர். டேவிற் கெமெரன் வந்தாலும் சரி, அமெரிக்கர்கள் வந்தாலும் வடக்குக்குத்தான் செல்கின்றனரென மீள்குடியேற்றப் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

கிழக்கு மக்களைப் பற்றி கதைப்பதற்கு அவர்களில் யாரும் இல்லையெனவும் அவர் கூறினார். 

வடமாகாணசபைத் தேர்தல் நடைபெற்று எவ்வளவு காலமாகிவிட்டது. ஆனால், வடமாகாண முதலமைச்சர் கிழக்கு மக்களைப் பற்றி இதுவரைக்கும் ஒரு அறிக்கையை வெளியிடவோ  அல்லது கருத்துக்களையோ தெரிவிக்கவில்லையெனவும் பிரதியமைச்சர் கூறினார்.

மட்டக்களப்பு, அரசடித்தீவு கிராமத்தில் சனிக்கிழமை (15) நடைபெற்ற அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

'தற்போதைய நிலையில் தமிழ் மக்களின் மனதில் மாற்றங்கள் வந்தால்தான் எதிர்காலத்தில் தலைநிமிர்ந்து நிற்கமுடியும். ஏனெனில், ஒரு தமிழ் அதிகாரியைத் தக்கவைப்பதற்கு மிகவும் கடினமாக போராட வேண்டியுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தனித் தமிழ்த்தொகுதி பட்டிருப்பு தேர்தல் தொகுதியாகும். மட்டக்களப்பை எவ்வாறு காப்பாற்றப் போகிறோமென்பது இந்த பட்டிருப்பு தொகுதி மக்களின் கையில் தங்கியுள்ளது. ஏனெனில், எதிர்காலத்தில் அதிகாரமுடைய நபர்களை உருவாக்க வேண்டும். அவ்வாறு உருவாக்காமல்விடின் ஒட்டுமொத்தத்தில் நட்டம் ஏற்படும். 

இவை அனைத்திற்கும் எதிர்ப்பு அரசியலிலிருந்து கொண்டு சாதிப்பதென்பது சாத்தியமற்ற விடயம். அரசாங்கத்துடன் இருந்துகொண்டு எமது மக்களுக்காக குரல் கொடுக்கலாம்.

அண்மையில் இந்தியாவிலிருந்து வந்த ஹரே கிருஷ்ணா அமைப்பின் சுவாமி மட்டக்களப்புக்கு வந்தபோது அவரைச் சந்தித்தேன். இதன்போது, அம்மான் நீங்கள் எவ்வாறு அரசாங்கத்துடன் இருந்துகொண்டு 13ஆவது திருத்தச் சட்டம் வேண்டுமென்று  நீங்கள் ஒருவர் மட்டும் மிகவும் துணிச்சலுடன் கதைக்கின்றீர்களென என்னிடம் அவர் கேட்டார்.

உண்மையில் 13ஆவது திருத்தச் சட்டம் தேவையென நாடாளுமன்றத்தில் கதைத்தது நான் மட்டும்தான். அதனைச் செய்ய வேண்டும். எதிர்க்கட்சிகள் கதைத்ததோ என்னவோ தெரியாது.

இது பற்றி எதிர்க்கட்சிகள் கதைத்தும் ஒன்றும் செய்ய முடியாது. அரசியலென்பது எமது உரிமை. அந்த வகையில் அரசாங்கத்தின் பக்கமிருந்து நான் கதைத்துள்ளேன்.

இதுபோன்று எதிர்காலத்தால் தமிழ் மக்களின் அபிவிருத்திகளுக்கு வளங்களை எடுத்தியம்பக்கூடிய நபர்களை உருவாக்க வேண்டும். இதற்கு தந்திரங்களைப் பயன்படுத்த வேண்டும். இவற்றை விடுத்து எதிர்ப்பு அரசியலுக்கு போயிருந்தால் வெறுமனே அறிக்கை அரசியலாகத்தான் போய்விடும்.

தற்போதிருக்கின்ற அபிவிருத்தியையும் உரிமைப் போராட்டத்தையும்  ஒன்றாக நோக்குவோம்.  தமிழ் அரசியல் கட்சிகள் என்ன செய்கின்றன? அபிவிருத்தி வேண்டாம். உரிமை மட்டும்தான் வேண்டுமெனக் கத்திக்கொண்டு திரிகின்றார்கள். இவற்றுக்கு உரிமைக்காக ஒருவரிடமும் அபிவிருத்திக்காக இன்னொருவரிடமும் ஏன் போகவேண்டும்? இவ்விரண்டையும்  பெறுவதற்கு ஏன் நாங்கள் ஒருவரிடம் போகக்கூடாது.

இவ்வாறு தமிழ் மக்களின் உரிமைகளையும் அபிவிருத்திகளையும் ஒருமித்து கேட்குமிடத்துத்தான் உரிய அபிவிருத்திகளையும் உரிமைகளையும் பெற்றுக்கொள்ள முடியும்.

இவற்றில் தமிழ் மக்கள் தீர்க்கமான முடிவுகளை எடுக்க வேண்டும்.  நான் எனக்கென்று நான் உங்களிடம் ஒருபோதும் எதுவும் கேட்கவில்லை. நான் இருக்கும்வரையும் மக்களுக்குரிய நீண்டகால அபிவிருத்தி வேலைத்திட்டங்களை மேற்கொண்டு வருகிறேன். இதனை தற்போது மக்கள் உணர்ந்துள்ளார்கள்.

படுவான்கரைப் பகுதியின் எல்லைப்புறக் கிராம மக்களுக்கு அம்பாறை மாவட்டத்திலிருந்து குடிநீர் வழங்கும் திட்டம் தற்போது ஆரம்பிக்கப்படவுள்ளன. அதேபோல், வவுணதீவு குடிநீர் திட்டத்தினூடாக படுவான்கரை கரையோர மக்களுக்கு குடிநீர் வழங்கப்படவுள்ளன. இந்த பல்லாண்டு அபிவிருத்தித் திட்டங்களுக்கு பல மில்லியன் ரூபா நிதியை பெற்றுக்கொடுத்துள்ளேன்.

தற்போதைய இந்த காலம்தான் அபிவிருத்திக்கான நிதியை பெறக்கூடியதாகும். எதிர்வரும் மே மாதம் மண்முனை பாலம் பொதுமக்களின் பாவனைக்குத் திறக்கப்படவுள்து. அடுத்து மண்டூர் பாலம் மற்றும் கிரான், பாலங்கள் கட்டுவது பற்றி சிந்திக்கிறோம்.

அரசாங்கத்தின் பக்கமிருந்து பல விடயங்களைச் சாதிக்கலாம். அவற்றுக்கு பல உதாரணங்களைக் காட்டலாம். உள்நாட்டு அலுவல்கள் அமைச்சராக இருந்தவர் ஒரு தமிழர். அதுபோல் சிறந்தவர்களை நாடாளுமன்றத்திற்கு அனுப்பினீர்களாக இருந்தால் அவர்கள் உரிமையினையும் காப்பாற்றி அபிவிருத்திகளையும் கொண்டு வந்திடுவார்கள்' என்றார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X