2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

விவசாயிகளும் மீனவர்களும் ஆர்ப்பாட்டம்

Suganthini Ratnam   / 2014 மே 12 , மு.ப. 08:10 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ.ஹுஸைன்,எம்.எஸ்.எம்.நூர்தீன்


மட்டக்களப்பு மாவட்டத்தின் உறுகாமம் நீர்ப்பாசன திட்டத்தின் கீழ், விவசாயச் செய்கையில் ஈடுபடும் 13 விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகளும் மீனவர்களும்  செங்கலடியிலுள்ள நீர்ப்பாசன திணைக்களத்தின் உறுகாமம் பிரிவுக் காரியாலயத்திற்கு முன்பாக திங்கட்கிழமை (12) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மட்டக்களப்பு, உறுகாமம் நீர்ப்பாசன திட்டத்தின் கீழ், அங்கீகாரமின்றி மேற்கொள்ளப்படும் விவசாயச் செய்கையை  தடைசெய்ய வேண்டும்,  அத்துமீறியோருக்கான  நீர் வழங்கலை நிறுத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து  இவர்கள்   ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சிறுபோகச் செய்கைக்காக  பெப்ரவரி மாதம் 28ஆம் திகதி நடைபெற்ற ஆரம்பக் கூட்டத்தில் இம்முறை  13 விவசாய அமைப்புக்கள் இணைந்து 5,240 ஏக்கரில் வேளாண்மை செய்வதாகவும் இதற்கு நீர்ப்பாசன திணைக்களம் நீர் முகாமைத்துவம் செய்வதாகவும் தீர்மானிக்கப்பட்டது.

ஆனால்,  தற்போது 02 நாட்கள் மழை பெய்தவுடன் அங்கீகாரமின்றி  சுமார் 2,500 ஏக்கரில்  மேலதிகமாக விவசாயம்  செய்வதால், அங்கீரிக்கப்பட்ட ஏக்கரில் விவசாயம் செய்பவர்களுக்கு போதியளவு நீர் கிடைப்பதில்லை. இதனால், அங்கீகரிக்கப்பட்ட ஏக்கரில்  வேளாண்மைச் செய்கை பாதிக்கப்படும். இதனை தடுக்குமாறு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் கூறினர்.

இதேவேளை, உறுகாமம் குளத்தில் இலட்சக்கணக்கான மீன்குஞ்சுகள் விடப்பட்டு நன்னீர் மீன்பிடி முன்னெடுக்கப்படுகின்றது.  இந்த நிலையில் அத்துமீறி விவசாயம் செய்பவர்களுக்கு நீர் வழங்குவதால், மீன்களுக்கு போதியளவு நீரின்றி இறந்து போகும் நிலை ஏற்படுகிறது. இதனால், மீன்பிடி தொழிலை மேற்கொள்ளும் 350 குடும்பங்கள் பாதிக்கப்படும்  என மீனவர் சங்க பிரதிநிதி கூறினார்.

'உறுகாமத்தையும் கித்துளையும் இணைத்துவிட்டு புறன்வட்டைக்கு நீர் வழங்கு', 'எங்கள் வயிற்றில் அடிக்காதே', 'உறுகாமக்  காலபோக கண்டங்களை மறந்துவிடாதே', 'உறுகாமம் கித்துள் இணைப்பு எப்போது?', 'விடமாட்டோம் விடமாட்டோம் அத்துமீறிய வேளாண்மை எம்மை அழிக்க விடமாட்டோம்', 'மாவடியோடையை இழுத்தடிக்காதே', 'மேலதிக காணிக்கு அனுமதி வழங்கிய பணிப்பாளரே எங்கள் வாழ்வாதாரத்தை யோசித்தீரா?', 'யாரைக் கேட்டு நீரை அத்துமீறிப் பாய விட்டாய் பணிப்பாளரே?', 'நீர்ப்பாசன இலாகாவே அத்துமீறிய வேளாண்மையை ஆதரியாதே?', 'அத்துமீறலை ஆதரிக்கும் பணிப்பாளரே உடனடியாக மாற்றலாகிச் செல்', 'பாசம் பேசி மோசம் செய்யும்; பொறியிலாளரே காசுக்கு வளையாதே', 'அங்கீகரித்த விவசாயிகள் சாவதற்காக இந்த தீர்மானம்', 'அத்துமீறலை ஆதரிக்கும் பொறியியலாளரே உடனடியாக வெளியேறு' போன்ற வாசகங்கள் எழுதிய பதாதைகளை ஏந்தியவண்ணம் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷங்களை எழுப்பினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X