2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

விசேட ஆராய்வுக் கூட்டம்

Thipaan   / 2015 ஜனவரி 24 , மு.ப. 06:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யுதாஜித்

மட்டக்களப்பு மாவட்டத்தின் கித்துள் மற்றும் உறுகாமம் குளங்களை இணைப்பதற்குரிய நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான விசேட ஆராய்வுக் கூட்டம் மட்டக்களப்பு மாவட்ட செலயகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (23) மாலை நடைபெற்றது.

மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம் சார்ள்ஸ் தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசா, கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான கே.துரைராசசிங்கம், கே.கருணாகரம் (ஜனா), இ.பிரசன்னா, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அத்துடன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன், மாவட்ட நீர்பாசனப் பணிப்பாளர் பொறியியலாளர் எஸ்.மோகன்ராஜ், உறுகாகம் பிரதேச  நீர்ப்பாசனப் பொறியியலாளர் செ.ஹேமகாந், ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர்; உ.உதயசிறிதர், மட்டக்களப்பு மேற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் கே.சத்தியநாதன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்தவரையில் வருடந்தோறும் 370, 000 ஏக்கர் கன அடி நீர் உபயோகம் இன்றி கடலுக்குச் செல்கிறது. இதில் ஒரு பகுதி நீரையேனும் சேமிக்கும் பொருட்டு கடந்த பல வருடங்களாக உறுகாமம், கித்துள் ஆகிய குளங்களை இணைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

அந்த அடிப்படையில் 4,500 மில்லியன் ரூபாய் உத்தேச மதிப்பீட்டின் அடிப்படையில் வேலைகள் ஆரம்பிக்கப்படவுள்ள இக் குளங்களின் இணைப்புக்கென இவ்வருட வரவு- செலவுத்திட்டத்தில் 60 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதன் ஆரம்பக்கட்ட வேலைகள் தொடர்பில் ஆராயும் வகையில் அமைந்த நேற்றைய மாவட்ட செயலகக் கூட்டத்தில், சமூகப் பொருளாதார ஆய்வுகளை மேற்கொள்ளல், இணைப்பினால் ஏற்படவுள்ள மேம்பாடுகள், ஏற்படும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுதல் உள்ளிட் பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டன.

உறுகாமம் மற்றும் கித்துள் குளங்கள் இணைப்பதன் மூலம் உருவாகும் இந்த பாரிய நீர்பாசன திட்டத்தின் மூலம் அதிக நீர் சேமித்து வைக்கப்படும். இதனால் சித்தாண்டி, கிரான், சந்திவெளி, மாவடிவேம்பு எனப் பல கிராமங்களின் வெள்ளப் பாதிப்பினைத் தடுக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முந்தானை ஆற்றுக்குக் குறுக்காக வான் மற்றும்; மண் அணை ஆகியவற்றை அமைப்பதன் மூலம் உறுகாகம் மற்றும் கித்துள் குளங்களை இணைத்து குளப்படுக்கையின் கொள்ளளவை 90 எம்சி எம் (72ஆயிரம் ஏக்கர் அடி) ஆக அதிகரிப்பதுடன், ஆற்றுப் பாய்ச்சல் அமைப்பிலிருந்து வாய்க்கால் பாய்ச்சல் அமைப்பாக மாற்றுவது இத்திட்டத்தின் நோக்கமாகும் இதன் மூலம் புதிய பயிர்ச்செய்கைக் காணிகளை அபிவிருத்தி செய்ய முடியும்.

இதன் மூலம் வெள்ளத்தணிப்பு, 25,000 ஏக்கர் வரையில் இரு போக வேளாண்மைச் செய்கையை உருவாகும், 2 லட்சத்துக்கு மேற்பட்டவர்களுக்கு குடிநீர் விநியோகம், உள்ளூர் மீன்பிடி, பால் உற்பத்திகளையும் அதிகரிக்க முடியும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X