2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

'புதிய ஜனாதிபதியை நம்புகிறோம்'

Suganthini Ratnam   / 2015 ஜனவரி 25 , மு.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்  

தற்போது இந்த நாட்டில் ஜனநாயக ஆட்சி மலர்ந்துள்ளது. ஜனநாயகத்தைக் கொண்டு நடத்தக்கூடிய  புதிய ஜனாதிபதி தெரிவாகியுள்ளார்.  இந்த புதிய ஜனாதிபதியை  தாங்கள் நம்புகின்றோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்  கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்தார்.

மட்டக்களப்பு, மண்டூர் அக்கடமியின் வருடாந்த பரிசளிப்பு விழா மண்டூரில்  சனிக்கிழமை (24) மாலை  நடைபெற்றது.  இங்கு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

'இலங்கையில் புரையோடிப்போயுள்ள தேசியப் பிரச்சினையான இனப்பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டும் என்பதற்காக சிறுபான்மையின மக்களின் அமோக வாக்குகளால் புதிய ஜனாதிபதி வெற்றி பெற்றுள்ளார் என்பதை இலங்கை மாத்திரமின்றி, சர்வதேசமே உன்னிப்பாக அவதானித்துள்ளது.

எமது சமுதாயம் கடந்தகால ஆயுத மற்றும் அஹிம்சைப் பேராட்டங்களினால் கல்வி, உயிர், உடைமைகள் போன்ற அனைத்தையும் இழந்துநிற்கின்றது. இழந்த உயிர்களை விட,  ஏனையவைகளை மீட்டெடுக்கவேண்டுமாக இருந்தால்,  நாம் கல்விக்கு முன்னுரிமை வழங்கவேண்டும். அதற்காக வேண்டி எமது எதிர்கால சந்ததியை  கல்வியில் சிறந்தமுறையில் வளர்த்து எடுப்போமாக இருந்தால், கடந்த காலங்களில் இழந்தவைகளை பெறுவதில் கஷ்டங்கள் இருக்காது.  அந்த வகையில், எமது பிரதேசத்தில் கல்வியை  சிறந்த முறையில் வளர்தெடுப்பதற்காக பல அரசியல்வாதிகள் பாடுபட்டுக்கொண்டிருக்கின்றார்கள்.

கடந்தகால போராட்ட காலத்தில் உயிரைத் தியாகம் செய்த எத்தனையோ இளைஞர்கள் சிறையில் வாடிக்கொண்டிருக்கின்றார்கள். இவ்வாறு சிறையில் வாடும் இளைஞர்களை விடுவிக்கவேண்டும் என்று  நாம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளோம். சிறையிலுள்ளவர்களின் விபரங்களை அரசு எம்மிடம் கோரியுள்ளது.  மிக விரைவில் அவர்கள் அனைவரும் விடுவிக்கப்படுவார்கள் என்று நாம் எதிர்பார்க்கின்றோம்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X