2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

பேரவை உறுப்பினர்கள் இருவரை நீக்கவும் : மாணவர் ஒன்றியம் கோரிக்கை

Administrator   / 2015 ஜனவரி 26 , பி.ப. 02:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ.ஹுஸைன்

கிழக்குப் பல்கலைக்கழக பேரவையில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்கள் இருவரை உடனடியாக நீக்குமாறு அப்பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது.

கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கடந்த காலத்தில் இடம்பெற்ற பல மோசடிகளைக் கண்டும் காணாமலும் மாணவர் நலனில் அக்கறைசெலுத்தாத இருவரையே நீக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கிழக்குப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் திங்கட்கிழமை (26) ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 2015ஆம் ஆண்டிற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள பேரவை உறுப்பினர்களின் பெயர் பட்டியலில் கடந்த வருடம் பேரவையிலிருந்து அதிகாரத் துஸ்பிரயோகம் செய்து பல முறைகேடுகள் இடம்பெறக் காரணமாக இருந்த உறுப்பினர்கள் இருவர் மீண்டும் தெரிவாகியுள்ளனர்.

குறிந்த இரு உறுப்பினர்களும் பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு எதிரான செயற்பாடுகளை நிர்வாகம் மேற்கொண்டபோது அதற்கு ஆதரவாகவும் செயற்பட்டவர்களாவர்.

அதேவேளை, இவர்களில் ஒருவர் வர்த்தக முகாமைத்துவப் பீடத்தின் வருகை தரு விரிவுரையாளராகவும் பேரவை உறுப்பினராகவும் எவ்வாறு செயற்படமுடியும்? பேரவை இடம்பெறும் வேளையில் குறிந்த பேரவை உறுப்பினர் மது அருந்துவதாக எமக்கு கிடைத்த தகவலை அடுத்து நாங்கள் அவரை கண்காணிக்கத் தொடங்கினோம். அது உண்மை என்பதையும் அறிந்து கொண்டோம். ஒரே நேரத்தில் இரு வேலைகள் செய்வதுடன் உபவேந்தருக்கு விசுவாசமாகவும் செயற்பட்டார்.

கடந்த பேரவையில் அங்கம் வகித்த அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் மறைமுகமாக கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கு விநியோகஸ்;தராகவும் வழங்குனராகவும் தொழிற்பட்டார் என்பதாக அறிந்தோம். இவர் இங்கு இடம்பெற்ற மோசடிகளை அறிந்தும் அறியாமல் தொழிற்;பட்டார் என்பதையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

கிழக்குப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினால் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்ட 156 பக்கங்களை கொண்ட முறைகேடுகள் தொடர்பான அறிக்கையில் குறித்த முறைகேடுகள் இடம்பெற்ற காலப்பகுதியிலும் இவர்கள் பேரவையின் உறுப்பினர்களாக செயற்பட்டனர். எனவே இருவரையும் 2015ஆம் ஆண்டுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள பேரவை உறுப்பினர்களின் பெயர் பட்டியலிலிருந்து நீக்குமாறு மாணவர் ஒன்றியம் வலியுறுத்துகின்றது.

கிழக்குப் பல்கலைக் கழகத்தின் கௌரவம், சமூக அபிவிருத்தி, மாணவர் கல்வி மற்றும் நலன் என்பவற்றுக்கு மேலாக எமது கலாசாரப் பாரம்பரியத்தை உறுதிப்படுத்துவதாக எமது பல்கலைக்கழகப் பேரவை அமைய வேண்டுமே தவிர பேரவை உறுப்பினர்களின் தனிப்பட்ட நலன்களை அடைவதற்காக செயற்படுவதை நாம் ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம்.

எமது பல்கலைக்கழகப் பேரவைக்கு சமூக சேவை ஆர்வலர்கள் மற்றும் புத்திஜீவிகளின் பங்களிப்பு அவசியமே தவிர அரசியல் மயப்பட்டதாகவோ சுயநலத்தன்மை கொண்டதாகவோ அமையக் கூடாது.

பேரவையின் புதிய பெயர்ப் பட்டியலைத்தயார் படுத்தியர்கள் யார்? கடந்த காலத்தில் பேரவைக்கு நியாயமாகவும் நேர்மையாகவும் கடமையாற்றிய பேரவை உறுப்பினர்களைத் தவிர்த்து இந்த இரு நேர்மையற்றவர்களை தெரிவு செய்ததன் காரணம் என்ன? முறைகேடுகள் இடம்பெற்ற வேளையில் பேரவையின் உறுப்பினர்களாக இருந்தவர்களின் பெயர்களை சிபாரிசு செய்தது யார்? சிபாரிசு செய்த இவர்களின் தூரநோக்கம் என்ன?

குறித்த இருவரையும் உடனடியாக நீக்க நடவடிக்கை எடுக்குமாறு உரிய தரப்பினரின் கவனத்திற்கு கொண்டு வருவதோடு பல்கலைக்கழக அபிவிருத்தியில் பங்களிப்புச் செய்யக்கூடியவர்களை எந்த விதமான இன, மத வோறுபாடுமின்றி நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கிழக்கு மாகாணம் 03 மாவட்டங்களை உள்ளடக்கிய போதிலும் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகம் திருகோணமலையில் இருந்தும் கடந்த காலங்களில் பேரவை உறுப்பினர்கள் எவரும் திருகோணமலையில் இருந்து தெரிவு செய்யப்படாத நிலையில் முன்னைய பேரவையின் உறுப்பினர்கள் இருவருக்கும் பதிலாக நியமிக்கப்படுபவர்களில் ஒருவர் திருகோணமலை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் அமைய வேண்டும்.

அவ்வாறு இரு உறுப்பினர்களையும் புதிய பேரவையில் இருந்து நீக்காதவிடத்து மாணவர்களின் தொடர்போராட்டம் மூலமாக அவர்களை நீக்க வேண்டிய நிலை ஏற்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

சம்மந்தப்பட்ட உறுப்பினர்களே உங்களுக்கு ஓர் வேண்டுகோள் நீங்களாக பேரவையில் இருந்து விலகிக்கொள்வது பின்னர் வரப்போகும் போராட்டங்களையும் கடந்த காலங்களில் பேரவை பற்றிய பல இரகசியங்கள் வெளிவராமல் தடுப்பதற்கும் உதவியாக இருக்கும் என கூறிக்கொள்கின்றோம்.

எமது இந்த கோரிக்கையினை அதிமேதகு ஜனாதிபதி அவர்களினதும் கௌரவ உயர் கல்வி அமைச்சர் ஆகியோரின் கவனத்துக்கும் கொண்டுவருகின்றோம் என கிழக்குப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அனுப்பிய ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X