2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

'சிறுபான்மையினத்துக்காக சில நடவடிக்கைகளை ஜனாதிபதி மேற்கொண்டுள்ளார்'

Suganthini Ratnam   / 2015 ஜனவரி 29 , மு.ப. 09:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

புதிய ஜனாதிபதி, சிறுபான்மையினம் நசுக்கப்படக்கூடாது என்பதற்காக சில நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றார். அதை நாங்கள் பாராட்டவேண்டியவர்களாக உள்ளோம். இருந்தபோதிலும், இந்த நாட்டில் புரையோடிப்போயுள்ள முக்கிய பிரச்சினையான இனப்பிரச்சினைக்கான தீர்வு கிடைக்குமா என்பது தொடர்பில் நாங்கள் ஆராயவேண்டியுள்ளது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா தெரிவித்தார்.

கொக்கட்டிச்சோலை படுகொலையின் 28ஆவது நினைவுதினம், நேற்று புதன்கிழமை கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்தில் நடைபெற்றது. இதில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

'இந்த நாட்டில் நல்ல சமாதானம் இன்று ஏற்பட்டுள்ளது. பல பிரச்சினைகள் எமக்கு இருந்தாலும், இன்று உள்ள அரசாங்கம் அனைத்து மக்களையும் ஓரளவு சமனாக நடத்தும் வாய்ப்பை ஏற்படுத்திவருகின்றது.

இதுபோன்று நாங்கள் சென்றுகொண்டிருப்போமானால், நல்ல எதிர்;காலத்தை எதிர்நோக்கலாம். இந்த நாட்டில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு புதிய அரசாங்கத்தை ஏற்படுத்துவதற்கான சந்தர்ப்பத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்படுத்திக்கொடுத்தது. சிறுபான்மை கட்சிகள் அனைத்தும் அந்த சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்கொடுத்தது.

ஒட்டுமொத்தமாக சிறுபான்மையினம் கடந்தகால ஆட்சியில் நசுக்கப்பட்டது. இதன் காரணமாகவே சிறுபான்மையினம் ஒன்றுபட்டு இந்த ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியது.

இன்று எமது பிரச்சினைகளை அரசாங்கத்துக்கு தெளிவுபடுத்துகின்றபோது, பல விடயங்களை தீர்க்கக்கூடிய நிலையிருக்கின்றது. நாங்கள் அவர்களுக்கு அடிபணியவேண்டிய அவசியம் இல்லை. காரணம் அவர்களிடம் அடிபணிந்து நாங்கள் அமைச்சு பதவிகளை பெறவில்லை. அமைச்சு பதவி எங்களது கோரிக்கைகளை பெறுவதற்கு சிலவேளைகளில் தடையாக இருக்கலாம். அதனால்; நாங்கள் அமைச்சு பதவிகளை ஏற்கவில்லை.

அரசாங்கத்தின் அனைத்து விடயங்களுக்கும் கையை உயர்த்தும் நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இல்லை. பாதகமான விளைவுகளை தடுப்போம். சாதகமானவற்றுக்கு ஆதரவு வழங்குவோம்.

இன்று நல்ல சூழ்நிலையில் இந்த அரசாங்கம் சென்றுகொண்டுள்ளது. அண்மையில் இந்த நாட்டின் ஜனாதிபதி மற்றும் பிரதமரை சந்தித்து எமது கோரிக்கைகளை முன்வைத்தபோது, அதற்கு அவர்கள் பச்சைக்கொடி காட்டியுள்ளனர்.
சிறையில் வாடும் எமது இளைஞர்கள், தமது மக்களின் காணிகள் உட்பட பல பிரச்சினைகளை கருத்தில்கொண்டு குழுக்கள் அமைக்கப்பட்டு ஆராயப்பட்டுவருகின்றன. பறிபோன நிலங்களை பெற்றுக்கொடுப்பதற்காக விசேட குழுக்களை அமைக்கவுள்ளனர்.

ஆகவே, புதிய ஜனாதிபதி, சிறுபான்மையினம் நசுக்கப்படகூடாது என்பதற்காக சில நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றார். அதனை நாங்கள் பாராட்டவேண்டியவர்களாக இருக்கின்றோம்'என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X