2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

காணாமல் போன உறவுகளை கண்டுபிடிக்கக் கோரி ஆர்ப்பாட்டம்

Suganthini Ratnam   / 2015 ஜனவரி 30 , மு.ப. 05:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்,வா.கிருஸ்ணா,எஸ். பாக்கியநாதன்

காணாமல் போயுள்ள தமது  உறவுகளை கண்டுபிடித்துத்  தருமாறு கோரி கவனயீர்ப்பு  போராட்டம்  மட்டக்களப்பு நகரிலுள்ள காந்திபூங்காவில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மட்டக்களப்பு காந்திசேவா சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற  இந்த கவனயீர்ப்பு போராட்டத்தின் பின்னர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வழங்குவதற்கான மகஜரை  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான பொன். செல்வராசா, பா.அரியநேந்திரன் ஆகியோரிடம் மட்டக்களப்பு காந்தி சேவா சங்கத்தின் தலைவர் ஏ.செல்வேந்திரன் கையளித்தார்.

மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய  மாவட்டங்களில் 1985ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டுவரை காணாமல் போயுள்ள  தமது உறவுகளை கண்டுபிடித்துத் தருமாறு  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் பிரதமர்  ரணில் விக்கிரமசிங்கவையும் கோருவதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

இதன்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான பொன். செல்வராசா, பா.அரியநேந்திரன், கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான இரா.துரைரட்னம், எம்.நடராஜா, எஸ்.கிருஸ்ணப்பிள்ளை, பிரசன்னா இந்திரகுமார்,  மட்டக்களப்பு காந்திசேவா சங்கத்தின் தலைவர் ஏ.செல்வேந்திரன், சென்ஜோன்ஸ் அம்பியூலன்ஸ் சேவையின் மட்டக்களப்பு மாவட்ட தலைவர் ஏ.எல்.மீராசாகிபு, காணாமல் போனவர்களின் உறவினர்கள் உள்ளிட்ட பலர்  கலந்துகொண்டனர்.

'எனது பிள்ளையை கண்டுபிடித்துத் தரவும்', 'அரசே இதற்கு சரியான நடவடிக்கை எடு' உள்ளிட்டவை  எழுதப்பட்ட சுலோக அட்டைகளை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தாங்கியிருந்தனர்.

 அந்த மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

'காணாமல் போனோர் தொடர்பில் விசாரணை செய்வதற்கான புதிய விசாரணை ஆணைக்குழுவொன்றை அமைக்குமாறு  மட்டக்களப்பு காந்திசேவா சங்கம் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் சகல பிரதேச செயலாளர் பிரிவுகளிலுமிருந்தும் 2,200 க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் செய்யப்பட்டன. முறைப்பாடுகள் செய்யப்பட்டு பல மாதங்கள் கழிந்துவிட்டன.

9.6.2014வரையில் 332 பேரிடமே விசாரணைகள் இடம்பெற்றன. ஆனால், இதுவரையிலும் எவ்விதமான கண்டுபிடிப்புக்களோ அல்லது அத்தகைய குடும்பங்களுக்கு பொறுப்பான பதிலுரைகளோ அல்லது இழப்பீட்டுக்கான நிவாரண நடவடிக்கைகளோ செய்யப்படவில்லை. இவை மக்களையும் சர்வதேசத்தையும் ஏமாற்றுவதற்காக கடந்த அரசாங்கத்தினால் ஏற்படுத்தப்பட்ட போலியான நடவடிக்கை என்பதை நாம் உணர்கின்றோம்.

அதிமேதகு ஜனாதிபதி  அவர்களே, தங்கள் மேல் நம்பிக்கை வைக்கக்கூடிய விதத்தில் இந்த விசாரணைகளுக்கு புதிய ஆணைக்குழு அமைக்கவேண்டும்.

காணமால் போனவர்கள் உயிருடன் இருந்தால், அவர்களை மீட்டுத் தரவேண்டும். குற்றம் இழைத்தவர்கள் தண்டிக்கப்படவேண்டும். இவர்கள் கண்டுபிடிக்கப்படும்வரை பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்கவேண்டும். அந்தக் குடும்பங்களில் கல்வித்தகைமை உள்ளவர்களை அடையாளப்படுத்தி தங்கள் ஆட்சியில்; வேலைவாய்ப்புக்களை பெற்றுத்தரவேண்டும். வீடமைப்பு, சுகாதார வசதிகள், சுயதொழில் அபிவிருத்திகளில் முன்னுரிமை அளிக்கவேண்டும்.
இவ்வாறாவது செய்து இவர்களை ஆற்றுப்படுத்தவேண்டும். இல்லையேல், இறைவன் யாரையும் சும்மா விடமாட்டான். கடவுளின் தண்டனை நிச்சயம் கிடைக்கும். தங்ககளையாவது நம்பிக்கை கொள்ளும் விதத்தில் எங்களின்  வேண்டுகோளை ஏற்று ஆவண செய்யுங்கள்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X