2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

'முதலமைச்சர் பதவி அம்பாறை மாவட்டத்துக்கே வழங்கப்படவேண்டும்'

Administrator   / 2015 ஜனவரி 28 , மு.ப. 05:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

கிழக்கு மாகாணசபையில் முஸ்லிம் காங்கிரஸுக்கு கிடைக்கவுள்ள முதலமைச்சர் பதவியை அம்பாறை மாவட்டத்துக்கே வழங்கவேண்டும் என்று  மட்டக்களப்பு மாநகரசபையின் முன்னால் உறுப்பினர் என்.கே.றம்ழான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பில் வெள்ளிக்கிழமை (28) அவர் விடுத்துள்ள அறிக்கையில்  தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

'கிழக்கு மாகாணத்தில் மூன்று மாவட்டங்கள் உள்ளடங்குகின்றன.  கிழக்கு மாகாணம் பிரிக்கப்பட்டு நடத்தப்பட்ட முதலாவது கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டம் முதலாவது முதலமைச்சர் என்ற பதவியை வகித்தது. அந்;த முதலமைச்சர் ஒரு தமிழ் இனத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், மட்டக்களப்பு மாவட்டம் முதலமைச்சர் என்ற மகுடத்தை முதலில் சூடிக்கொண்டது.

அதற்கு பின்னர் நடைபெற்ற இரண்டாவது கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் சுழற்சிமுறையில் முதலமைச்சர் பதவியை வழங்குவது என்ற தீர்மானத்துக்கு அமைய, முதலாவது முதலமைச்சர் பகுதியை திருகோணமலை மாவட்டத்துக்கு வழங்கியதன் மூலமாக கிழக்கு மாகாணத்தில் இன்னுமோர் மாவட்டமும் முதலமைச்சர் பதவியை பெற்றுக்கொண்டது.

அடுத்தபடியாக தற்போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்குரிய சுழற்சிமுறையிலான இரண்டாம் பகுதியான முதலமைச்சர் பதவி கிழக்கு மாகாணத்தில் எஞ்சியிருக்கும் மூன்றாவது மாவட்டமான அம்பாறை மாவட்டத்துக்கே  வழங்கவேண்டும் என்பது நியாயமானது.

அதற்கப்பால் இன்றைய சூழ்நிலையில் கிழக்கு மாகாணத்திலேயே  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கான அதிக வாக்குகள் காணப்படுகின்றன. அதற்கு அடுத்தபடியாக அதிகமான கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களையும் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் அம்பாறை மாவட்டமே கொண்டுள்ளது. அது மாத்திரமின்றி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கான அதிகபட்ச சவாலும் அம்பாறை மாவட்டத்தில் காணப்படுகின்றது. அத்தோடு முஸ்லிம் காங்கிரஸின் பலத்தை சிதைத்து பலவீனப்படுத்த மேற்கொண்ட அனைத்து சதிகளையும் இந்த முதலமைச்சர் காலப்பகுதியில் இல்லாமல் செய்யவேண்டிய சந்தர்ப்பமும் தற்போது ஏற்பட்டுள்ளது.

தற்போதைய ஆட்சி மாற்றம் என்பது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு கிடைத்துள்ள அரிய வாய்ப்பாகும். அம்பாறை மாவட்டத்துக்கு கிடைக்கும் முதலமைச்சர் பதவியை சாதகமாக பயன்படுத்தி, கட்சியை கட்டியெழுப்புவதற்கு பாரிய பங்களிப்பை செய்யமுடியும் என்பதுடன் முஸ்லிம் காங்கிரஸின் கோட்டையை சிதைத்து கட்சியையும்  முஸ்லிம்களையும் பலவீனப்படுத்துவதற்கு அதிகார வர்க்கத்தினரோடு கைகோர்த்துக்கொண்டு செயற்பட்ட சுயநல அரசியல்வாதிகளை இந்த முதலமைச்சர் பதவியைக்கொண்டு ஓரம் கட்டுவதற்கும் கட்சியிலிருந்து விலகியிருக்கும் கட்சியின் மூத்த போராளிகளை மீண்டும் கட்சியோடு இணைத்துக்கொள்வதற்கும் குறித்த முதலமைச்சர் பதவி மிக முக்கியமானதாக அமையும்.

குறித்த முதலமைச்சர் பதவி அம்பாறை மாவட்டத்துக்கு கிடைக்கக்கூடாது என்பதில் ஒரு சிலர் அம்பாறை மாவட்ட முஸ்லிம்களை கபடத்தனமாக பயன்படுத்தி, முதலமைச்சர் பதவியை பெற்றுக்கொள்வதற்கு கட்சித் தலைமைக்கு சில அமைப்புக்களின் பெயரில் வேண்டுகோள் கடிதங்களை அனுப்பி முதலமைச்சர் பதவியை தட்டிப்பறிப்பதற்கு சதிகளை மேற்கொண்டு வருகின்றார்கள். இவர்கள் கட்சியில் பொறுப்புவாய்ந்த உயர்பதவிகள் வகிக்கின்றார்கள் என்பதற்காக கட்சித்தலைமை ஏமாரக்கூடாது. அம்பாறை மாவட்ட மக்களின் உணர்வுகளை நன்கு புரிந்துகொண்டு இது விடயத்தில் முடிவெடுக்கவேண்டும்.

இவர்கள் கட்சியின் பொறுப்புவாய்ந்த பதவிகளில் மட்டுமல்லாது, கடந்த காலத்தில் தனக்கு கிடைத்த மாகாண அமைச்சுப் பதவியை முறையாக பயன்படுத்தி மட்டக்களப்பு மாவட்டத்திலிருக்கும் மூன்று முஸ்லிம் பிரதேசங்களையும் இணைத்துக்கொண்டு முஸ்லிம் காங்கிரஸை வளர்த்தெடுக்க முடியாது. முஸ்லிம் காங்கிரஸுக்கு மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்த வாக்குகளையும் இன்று இழந்து கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக மாறுவதற்கு காரணமானவர்கள் எவ்வாறு கிழக்கு மாகாணத்திலுள்ள மூன்று மாவட்டங்களையும் இணைத்துக்கொண்டு கட்சியை வளர்தெடுக்கப்போகின்றார்கள்

எனவே கிழக்கு மாகாணசபைக்கான முதலமைச்சர் பதவி மூலம் எதிர்வரும் கிழக்கு மாகாணசபையில் அதிகபட்சமான ஆசனங்களை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பெற்றுக்கொள்வதற்கும் அம்பாறை மாவட்டத்துக்;கு இன்றுவரையும் வழங்கப்படாத கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை உங்களது காலப்பகுதியில் வழங்கி மறைந்த மாபெரும் தலைவர் மர்ஹூம் எம்.எச்.அஸ்ரபின் கனவை நனவாக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்படுகின்றது' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X