2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

வாகனம் பழுதடைவு; தபால் விநியோகத்தில் தாமதம்

Suganthini Ratnam   / 2015 பெப்ரவரி 05 , மு.ப. 08:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மட்டக்களப்பு அஞ்சல் திணைக்களத்தில் சேவையிலிருந்த தபால் விநியோகத்துக்கான  வாகனம் பழுதடைந்துள்ளதால், நாளாந்த தபால் விநியோகத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தபாலதிபர்கள் தெரிவிக்கின்றார்கள்.

இந்த வாகனம் பழுதடைந்துள்ளதால் மட்டக்களப்பு மாவட்டத்தின் வடக்குக்கான தபால் விநியோகம் கடந்த இரண்டு மாதகாலமாக சீர்குலைந்துள்ளதாக  தபாலதிபர்கள் தெரிவிக்கின்றனர்.

மட்டக்களப்பு – திருகோணமலை வீதியில் தன்னாமுனை தொடக்கம் வாகரைவரையுள்ள 8 அஞ்சல் அலுவலகங்களுக்கும் 8 தபால் விநியோக உப அஞ்சல் அலுவலகங்களுக்குமான தபால் விநியோகமே சீர்குலைந்துள்ளது.

மட்டக்களப்பு மத்திய அஞ்சலகத்திலிருந்து தற்சமயம் மாற்று ஏற்பாடாக இலங்கை போக்குவரத்துச் சபை பஸ்களிலேயே மட்டக்களப்பு வடக்கு மார்க்கத்திற்கான தபால் பொதிகள் அனுப்பி வைக்கப்படுகின்றன.

ஆயினும், குறித்த தபால் பொதிகள் தமது தபாலகங்களுக்கு பகல் 11 மணிக்குப் பின்னரே வந்து சேர்வதால் அன்றைய தினம் விலாசதாரர்களுக்குரிய தபால்களை விநியோகிக்க முடியாமல் அடுத்த நாளே விநியோகிக்க முடிவதாகவும் தபாலதிபர்கள் தெரிவிக்கின்றனர்.

அதேவேளை தபால் பொதிகளை அனுப்பி வைக்கும் இலங்கைப் போக்குவரத்துச் சபை பஸ் வண்டிகள் பகலளவில் திரும்பி வருவதால் அன்றைய தினம் பகல் வேளைக்குப் பின்னர் தபாலகங்களில் சேரும் அஞ்சல்களை தாம் அனுப்பி வைக்க முடியாமல் அடுத்த நாளே தாமதமாகி அனுப்ப முடிவதாக அஞ்சலதிபர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனிடையே அஞ்சல் நிலைய உத்தியோகத்தர்கள் தபால் பொதிகளை அனுப்பி வைப்பதற்காகவும் தபால் பொதிகளைப் பெறுவதற்காகவுதம் தினமும் இலங்கைப் போக்குவரத்துச் சபை பஸ்களை எதிர்பார்த்த வண்ணம் வீதியில் காத்துக் கிடப்பதை அவதானிக்க முடிகின்றது.

நாடெங்கிலும் அன்றைய தினம் வந்து சேரும் கடிதங்கள் அன்றைய தினமே விநியோகிக்கப்பட வேண்டும் என்ற பணிப்புரை உள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X