2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

வரவு -செலவுத்திட்டத்தை ஆதரிக்குமாறு வேண்டுகோள்

Suganthini Ratnam   / 2015 பெப்ரவரி 08 , மு.ப. 06:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

–வடிவேல் சக்திவேல்  

கிழக்கு மாகாணசபையில் முன்மொழியப்படவுள்ள வரவு -செலவுத்திட்டத்தை அரசியல் கட்சி வேறுபாடின்றி ஆதரிக்குமாறு உறுப்பினர்களிடம்  கிழக்கு மாகாணத்தின் புதிய  முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பில் ஞாயிற்றுக்கிழமை (08)  அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

'கிழக்கு மாகாணத்தின்  2015ஆம் ஆண்டுக்கான  வரவு - செலவுத்திட்டம் கடந்த 10.02.2015 அன்று சபையில் முன்மொழியப்படவுள்ளது. கடந்த வருடம் டிசெம்பர் மாதம் முன்னாள் முதலமைச்சரினால் வரவு -செலவுத்திட்டம் சபையில் சமர்ப்பிக்கப்பட்டபோதிலும், ஏற்பட்ட முரண்பாடு காரணமாக இரண்டு தடவைகள் சபை அமர்வு ஒத்திவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. தற்போது ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தை அடுத்து புதிய முதலமைச்சரினால் தயாரிக்கப்பட்ட வரவு -செலவுத்திட்டம் 10.02.2015 அன்றயதினம்  சபையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

நீண்டகாலத்தின் பின்னர் எமது நாட்டில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தை அடுத்து மைத்திரி  யுகத்தில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட முதலாவது வரவு -செலவுத்திட்டம் அதிக பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டுள்ளமை வரலாற்று நிகழ்வாக கருதமுடியும். அங்குள்ள பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் வரவு  -செலவுத்திட்டத்தை ஆதரித்துள்ளதை முன்மாதிரியாக கொள்ளவேண்டும்.

அதேபோன்று, கிழக்கு மாகாண மக்களின் வாழ்க்கைத்தர மேம்பாட்டு நலனை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள எமது வரவு -செலவுத்திட்டத்துக்கும்  மக்கள் பிரதிநிதிகள் அரசியல் வேறுபாடு மற்றும் தனிப்பட்ட நிகழ்ச்சிநிரலை புறந்தள்ளிவிட்டு, அங்கிகாரம் வழங்கவேண்டும் என்று அன்பாய் வேண்டிக்கொள்கிறேன். இதன் மூலம் ஏனைய மாகாணசபைகளுக்கு கிழக்கு மாகாணசபை முன்மாதிரியாகத் திகழவேண்டும் என்று எதிர்பார்க்கின்றேன்.
ஓர் ஆண்டுக்கான  வரவு -செலவுத்திட்ட முன்மொழிவு என்பது அந்த வருடத்தின் மக்கள் மேம்பாடு மற்றும் பிரதேச அபிவிருத்தியை உள்ளடக்கியதாகும். கடந்தகால போர்ச்சூழல் மற்றும் அரசியல் வேறுபாடு உள்ளிட்ட இன்னோரன்ன காரணங்களினால் பாதிக்கப்பபட்ட கிழக்கு மாகாணத்தில் அபிவிருத்தி எழுச்சியை ஏற்படுத்தும் நோக்குடன் புதிய வரவு -செலவுத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதனால்,  நாட்டில் நீதியான ஆட்சியை ஏற்படுத்தும் நோக்குடன் அனைவரும் பேதங்களை மறந்து ஒன்றிணைந்துள்ள நிலையில், கிழக்கு மாகாணத்திலும் புதிய ஆட்சி நிர்வாகம் மலர்ந்துள்ளது. இதன் அடிப்படையில் எமது ஒற்றுமையை தொடர்ந்தும் பறை சாற்றும் வண்ணம் வரவு -செலவுத்திட்டத்தை அங்கிகரிக்குமாறு அறைகூவல் விடுக்கின்றேன். புதிய வரவு -செலவுத்திட்டம், மொத்தத்தில் கிழக்கு மாகாண மக்களுக்கு புத்துணர்வை ஊட்டத்தக்கதாக தயாரிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்துக்கான  வரவு -செலவுத்திட்டம் உரிய காலத்தில் அங்கிகரிக்கப்படாததனால், எமது மாகாணத்தில் உள்ள அரசாங்க ஊழியர்களினது ஊதியத்தை  வழங்குவதில் பல்வேறு சிரமங்கள் எதிர்நோக்கப்பட்டன. அத்துடன், சுகாதாரத்துறை உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளுக்கான செலவுகளைக் கூட மேற்கொள்ள முடியாதிருந்தமை வேதனை அளிக்கிறது.
எனவே, பல்லின மக்களை உள்ளடக்கிய மற்றும் சகல வளங்களையும் தன்னகத்துள் கொண்டுள்ள கிழக்கு மாகாணத்தில் வேறுபாடுகளை துறந்து மக்கள் நலத்திட்டங்களை முன்னெடுக்க அனைத்து கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X