Editorial / 2018 ஜனவரி 26 , மு.ப. 10:55 - 0 - {{hitsCtrl.values.hits}}







எம். செல்வராஜா
சில தரப்பினருக்கு இடையில், ஊவா மாகாண சபைக்கு முன்பாக, நேற்றுக்காலை (25) ஏற்பட்ட கைகலப்பால், சபை வளாகமே பெரும் அல்லோலகல்லோலப்பட்டது. இதனால், அங்கு பெரும் பதற்றமான நிலைமையொன்றும் ஏற்பட்டிருந்தது.
இதனையடுத்து விரைந்து செயற்பட்ட பொலிஸாரும் கலகமடக்கும் பொலிஸாரும், நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து, மாகாண சபையின் வளாகத்தில் குழுமியிருந்த பொதுமக்களையும் ஆதரவாளர்களையும் அங்கிருந்து உடனடியாக அப்புறப்படுத்தினர்.
ஊவா மாகாண சபையமர்வு, நேற்றுக்காலை கூடவிருந்த நிலையில், சபையின் வளாகத்தில் பெருந்திரளான மக்கள் அங்கு குழுமியிருந்தனர். அவர்களில், அமைச்சர் செந்தில் தொண்டமானின் ஆதரவாளர்களும் இருந்தனர். இந்நிலையில், சபையமர்வில் கலந்துகொள்வதற்காக அமைச்சர் செந்தில் தொண்டமான் வருகைதந்தார்.
அவருடைய ஆதரவாளர்கள் அவரை வரவேற்றனர். அதன்பின்னர் அவ்விடத்திலிருந்து இரண்டொரு வார்த்தைகளைப் பேசிவிட்டு, அவர் அங்கிருந்து சபைக்குச் சென்றுவிட்டார்.
சற்றுநேரத்தின் பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.எம். ரட்ணாயக்கவின் வாகனத்தில் உறுப்பினர் ஆறுமுகம் கணேசமூர்த்தி மற்றும் உபாலி சேனாரட்ன ஆகியோர் வருகைதந்தனர். உறுப்பினர் ஆறுமுகம் கணேசமூர்த்தி, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸிலிருந்து, ஐக்கிய தேசியக் கட்சிக்கு அண்மையில் கட்சிதாவிய உறுப்பினராவார். சாம்பல் நிறத்திலான டிபெண்டர் ரக வாகனத்திலிருந்து உறுப்பினர் ஆறுமுகம் கணேசமூர்த்தி இறங்குவதற்கு முன்னரே, வாகனத்தை சுற்றிவளைத்தவர்கள், அவரை வாகனத்திலிருந்து வெளியே இழுத்தெடுப்பதற்கு கடும் பிரயத்தனத்தில் ஈடுபட்டனர்.
டிபெண்டர் வாகனத்தின் கதவைத் திறந்த ஒருவர், வாகனத்திலிருந்து வெளியில் அவரை இழுப்பதற்கு முயற்சித்தார். எனினும், வாகனத்துக்குள் இருந்தவர்கள் அதற்கு இடமளிக்கவில்லை. இதனால் இருதரப்பினருக்கும் இடையில் பெரும் இழுபறிநிலைமை தோற்றியது.
இதேவேளை, அவருடன் வந்திருந்த மற்றுமோர் உறுப்பினரான உபாலி சேனாரட்ன, உறுப்பினர் ஆறுமுகம் கணேசமூர்த்தியைக் காப்பாற்றுவதற்கு முயற்சித்ததுடன், கைகலப்பில் ஈடுபட்டிருந்த ஆதரவாளர்களை விலக்குவதற்கு முயற்சித்தார்.
அதன்போது, உறுப்பினர் உபாலி சேனாரட்னவும் தாக்குதல்களுக்கு உள்ளானார். தாக்குதல்களுக்கு இலக்கான அவ்விரு உறுப்பினர்களும் சபைக்கு சமுகமளித்து, சபையமர்பில் பங்கேற்றிருந்தனர். எனினும், வருத்தம் கடுமையானதால், அவ்விருவரும், இரண்டு அம்புலன்ஸ் வண்டிகளில் அழைத்துச் செல்லப்பட்டு, பதுளை அரசினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
சம்பவத்தைக் கேள்வியுற்றதும், அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ, நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் எம்.பி. ஆகியோரும் அவ்விடத்துக்கு விரைந்தனர்.
இந்நிலையில், தாக்குதல்களுக்கு உள்ளான உறுப்பினர்கள் ஒன்பது பேர், பதுளை அரசினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ச்சம்பவத்தால் சபையின் எதிர்க்கட்சித் தலைவரின் வாகனத்துக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது. ஊவா மாகாண சபையின் உறுப்பினர் ஆறுமுகன் கணேசமூர்த்தி, அரச வேலைவாய்ப்புகளை வாங்கித் தருவதாகக்கூறி, பதுளை மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர், யுவதிகள் பலரிடம் பணம் வசூலித்திருந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டு, அவருக்கு எதிராக, பொலிஸிலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அவ்வாறு முறைப்பாடுகளை மேற்கொண்டவர்களே, உறுப்பினர் ஆறுமுகம் கணேசமூர்த்தியின் மீது தாக்குதல் நடத்தியதாக மற்றுமொரு தகவல் தெரிவிக்கின்றது.
இதேவேளை, இருபக்கங்களிலும் தாக்கியவர்களைத் தேடி வலைவீசியுள்ளதாக, பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில், சபை அமர்வு ஆரம்பமானதும், மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க உரையாற்றுகையில், “ஊவா மாகாண சபைக்கு முன்னால் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தை, நான் வன்மையாகக் கண்டிக்கின்றேன். இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் இடம்பெறமாட்டாது. சம்பவத்தில் காயமுற்ற சபை உறுப்பினர்கள் விடயத்தில் பெரும் கவலையடைகின்றேன். சபை உறுப்பினர்களுக்கு பூரண பாதுகாப்பு வழங்கப்படும்” என்றார்.
2 hours ago
6 hours ago
18 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
18 Apr 2026