2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

கூடாரங்கள் அமைக்க முடியாது

Gavitha   / 2021 பெப்ரவரி 24 , பி.ப. 12:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம். செல்வராஜா

 

மடுல்சீமைப்பகுதியின் சிறிய உலக முடிவு மலைப்பகுதியிலும் பதுளை - நாராங்கலை மலை உச்சிப் பகுதிகளிலும் உல்லாசப் பயணிகள் செல்வதற்கும், கூடாரங்கள் அமைத்து தங்குவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பதுளை மாவட்ட அபிவிருத்தி இணைப்புக் குழுவின் கூட்டம், பதுளை அரச செயலகத்தில், நேற்று முன்தினம் (23) நடைபெற்றது.

இதன்போதே, இந்த முடிவு எடுக்கப்பட்டது என, இணைப்புக் குழுத் தலைவரும், பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சுதர்சன தெனிபிட்டிய தெரிவித்தார்.

இதன்போது, கடந்த 6ஆம் திகதி, தினுர விஜயசுதந்தர என்ற நபர், சிறிய உலக முடிவைப் பார்க்கச் சென்று, 1200 அடி பள்ளத்தில் விழுந்து, பலியானார் என்றும் இவர் தனது நண்பர்கள் 12 பேருடன் மலை உச்சிக்கு சென்று கூடாரம் அமைத்து தங்கியிருந்துள்ளார் என அவர் குறிப்பிட்டார்.

 கடுங்குளிரான காலநிலையால், அவர்களுக்கு மலை உச்சியில் இருக்க முடியாமல் கீழிறங்கினர் என்றும் இதன்போதே, 1,200 அடி பள்ளத்தாக்கில், தினுர விஜயசுந்தர விழுந்து உயிரிந்தார் என்றும் அவர் கூறினார்.

இதைத் தொடர்ந்து, எடுக்கப்பட்ட முடிவுக்கமைய, உல்லாசப் பயணிகள் எவரும், சிறிய உலக முடிவு மலைப்பகுதியில் கூடாரங்கள் அமைத்து தங்கியிருப்பதற்கு பூரணத் தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும் அத்துடன் இத்தகையக் கூடாரங்கள் அமைத்து உல்லாசப் பயணிகள் தங்குவதால், அப்பகுதியெங்கும் சூழலும் மாசடைந்து வருவதாகவும் இதன்போது  அவர் தெரிவித்தார்.

அத்துடன், பதுளை - நாராங்கலை மலைப்பகுதிக்கு உல்லாசப் பயணிகள் செல்வதற்கும் கூடாரங்கள் அமைத்து தங்குவதற்கும் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன என்றும் மேலும், இந்நாராங்கலை மலைப்பகுதியில் 64 வகையிலான மரங்கள், 24 வகையிலான செடி, கொடிகள், 22க்கு மேற்பட்ட மூலிகை வகைகள் நிறைந்து காணப்படுகின்றமையால், அவற்றைப் பாதுகாக்கவேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

உல்லாசப் பயணிகளாக, மலையுச்சிக்குச் செல்வோர், வனப் பகுதிக்கு சேதம் விளைவிப்பதுடன், அங்குள்ள புனிதமான சூழலை மாசடையவும் செய்கின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.

அத்துடன், நாராங்கலை மலை உச்சியிலிருந்து 142 நீர் ஊற்றுக்கள் காணப்படுகின்றன என்றும் இந் நீரூற்றுக்களிலிருந்து வெளியேறும் நீர், மொரகொல்ல ஓயா, அம்பகா ஓயா, பதுளை ஓயா, உமா ஓயா ஆகிய ஆற்றுகளுடன் சங்கமமாகின்றன என்பதை, பல்கலைக்கழகப் பேராசிரியர் குழுவினர், சூழலியலாளர்கள் ஆகியோர் மேற்கொண்ட ஆய்வுகளிலிருந்து தெரியவந்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .