Kogilavani / 2016 ஓகஸ்ட் 24 , மு.ப. 04:22 - 0 - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன்
'கழிவுகளைக் கொட்டுவதற்கு நிரந்தரமான இடமின்றி, பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ள, ஹட்டன் - டிக்கோயா நகரசபைக்கு, கழிவுகளைக் கொட்டுவதற்கான நிரந்தர இடமொன்று பெற்றுத்தரப்படும்' என பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் நவீன் திசாநாயக்க உறுதியளித்துள்ளார்.
சேகரிக்கப்படும் குப்பைகளை மீள்சுழற்சிக்கு உட்படுத்தி, கூட்டுப்பசளைத் தயாரிக்கும் திட்டத்தை உருவாக்குவது தொடர்பிலான கலந்துரையாடலொன்று, ஹட்டன், டைனிங் விருந்தகத்தில், அமைச்சர் நவீன் திசாநாயக்க தலைமையில் திங்கட்கிழமை (22) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அமைச்சர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'ஹட்டன் - டிக்கோயா நகரசபைக்கு உட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள், ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியிலுள்ள குடாஓயா பகுதியிலேயே கொட்டப்பட்டு வருகின்றன. இப்பகுதியில் ஒரு நாளைக்கு 6 தொன் குப்பைகள் சேர்கின்றன' என்றார்.
'அங்கு குப்பைகள் கொட்டுவதனால், சுற்றாடலும் பொதுமக்களும் மாத்திரமன்றி, சுற்றுலாப் பயணிகளும் பெரும் பாதிப்புக்களை எதிர்கொள்கின்றனர். இதுவரை காலமும் பதவியிலிருந்த ஹட்டன்- டிக்கோயா நகரசபைத் தலைவர், குப்பை கொட்டுவதற்காக வேறோர் இடத்தைத் தெரிவுசெய்ய முற்;பட்டப் போதிலும், அது சாத்தியப்படவில்லை. அரசியல் தலைமைகள் முறையாக நடவடிக்கை எடுக்காமையினால், இத்திட்டம் நிறைவேற்றப்படவில்லை.
இதற்காக, ஹட்டன் - குடாஓயா பகுதியில், பொதுமக்கள் வசிக்காத, சுற்றாடலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தாத இடமாக மூன்றரை ஏக்கர் நிலம் தெரிவு செய்யப்பட்டுள்ளது. தோட்டக் கம்பனியுடன் கலந்துரையாடிவிட்டு, இவ்விடத்தை நிரந்தரமாகப் பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்வேன்' என அவர் இதன்போது உறுதியளித்தார்.


அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .