2026 ஏப்ரல் 16, வியாழக்கிழமை

குதிரை பந்தயத்திடலில் வாழும் மக்களுக்கு பிறிதொரு இடத்தில் வீடுகள்

Kogilavani   / 2015 டிசெம்பர் 29 , மு.ப. 03:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பா.திருஞானம்

நுவரெலியா நகர மத்தியிலுள்ள குதிரை பந்தயத் திடலில் வாழ்;ந்து வருகின்ற 46 குடும்பங்களுக்கு, வேறொரு இடத்தில் வீடுகளை அமைத்துக் கொடுப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

மேற்படி குதிரை பந்தயத் திடலில், 46 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 200 பேர், 46 தற்காலிக வீடுகளில் வாழ்ந்து வருகின்றனர். சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை நெருக்கடிமிக்க சூழலிலேயே வாழ்ந்து வருகின்றனர்.

ஆங்கிலேயரின் ஆட்சிக் காலத்தில் இக்குதிரை பந்தயத் திடல் அமைக்கப்பட்டது. குதிரைகளை பராமரிப்பதற்காக 150 வருடங்களுக்கு முன்னர், இங்கு வாழ்ந்து வரும் மக்களின் மூதாதையர்கள் அழைத்து வரப்பட்டனர். நான்கு தலைமுறைகளைக் கண்டுவிட்ட இக்குடும்பங்கள், இன்னும் எவ்வித அடிப்படை வசதிகளுமின்றியே வாழ்ந்து வருகின்றனர்.

ஆரம்பத்தில் இதன் நிர்வாகம் ஆங்கிலேயர்களது கைகளிலும் பின்னர் நுவரெலியா நகர சபையின் பொறுப்பிலும் இருந்தது. 2000ஆம் ஆண்டுக்கு பின்னர் விளையாட்டுத்துறை அமைச்சு இதன் நிர்வாகத்தைப் பொறுப்பேற்றது.

இந்நிலையில், இங்கு வாழ்ந்து வரும் மக்கள் இறப்பர் சீட் மூலம் வேயப்பட்ட குடிசைகளிலேயே வாழ்ந்து வருகின்றனர். சுத்தமான நீர், மலசலகூடம், மின்சாரம், போக்குவரத்து, சுகாதாரம், சிறுவர் பாரமரிப்பு போன்ற அடிப்படை வசதிகளின்றி இம்மக்கள் பல்வேறு சமூகப் பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளனர்.

மழை மற்றும் வெள்ள நிலைமைகளின் போது இவர்கள் நிர்க்கதிக்கு உள்ளாகின்றனர். இவ்விடயம் குறித்து இராஜாங்க கல்வி அமைச்சர் வே.இராதாகிருஸ்ணனின்; கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டதைத் தொடர்ந்து,  விளையாட்டுத்துறை அமைச்சின் அதிகாரிகளிடம் தொடர்புக்  கொண்டு கதைத்துள்ள இராஜாங்க அமைச்சர், இம்மக்களுக்கு வேறு இடத்தில் வீடுகளை நிர்மாணித்துக் கொடுப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.

இம்மக்களுக்கான வீடுகளை, நுவரெலியா - ஹாவெலிய பகுதியிலுள்ள ஆடைத்தொழிற்சாலை அமைந்துள்ள பகுதியில் இருக்கும் 3 ஏக்கர் காணியில் நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் மூலம் இவர்களுக்கான 46 வீடுகள் உள்ளடங்களாக 150 வீடுகள் அமைக்கப்படவுள்ளன. 46 வீடுகளை தவிர ஏனைய வீடுகள்; இதேபோல் பாதிப்புக்கு உள்ளாகியுள்ள யுனிக்கீவ் கிராம மக்களுக்கும் நகரத்தின் மத்தியில் தற்காலிகமாக தங்கி இருக்கும் குடும்பங்களுக்கும் பகிரந்தளிக்கப்படவுள்ளதாக தெரியவருகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .