2026 ஏப்ரல் 18, சனிக்கிழமை

சம்பள பிரச்சினையை தீர்க்க தொழிற்சங்கங்களுக்கிடையே ஒற்றுமை வேண்டும்

Sudharshini   / 2015 டிசெம்பர் 23 , மு.ப. 11:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

டி.சங்கீதன்

மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள பிரச்சினை தீர்க்கப்பட வேண்டுமானால் மலையக தொழிற்சங்கங்கள் அனைத்தும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். இல்லாவிட்டால் இதனை தீர்த்து வைக்கமுடியாது என கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் கூறினார்.

இராகலை, நடுக்கணக்கு தோட்டத்தில் கூட்டுறவு சங்கத்தின் ஒராண்டு பூர்த்தி நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு பேசும் பொழுதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

மலையகத்தில் பல பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் உள்ளன. இதற்கு முக்கிய காரணம் மலையக தொழிற்சங்கங்களிடம் ஒற்றுமை இன்மை என்பதை நாம் அனைவரும் புரிந்துக் கொள்ள வேண்டும்.தொழிற்சங்கங்கள் ஒற்றுமையாக செயற்பட்டால் பல விடயங்களை சாதிக்க முடியும். அதனை நாம் தற்பொழுது முற்போக்கு கூட்டணி ஊடாக செய்து வருகின்றோம்.

இந்த வரவு-செலவு திட்டமும் அதற்கு ஒரு சிறந்த உதாரணம். இதில் பல மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. அதற்கு காரணம் அனைத்து தரப்பினரும் ஒற்றுமையாக செயற்பட்டமையாகும். அதேபோல், நாங்களும் எமது கட்சி தொழிற்சங்க பேதங்களை மறந்து செயற்பட வேண்டும். ஒற்றுமையாக இருந்தால் எதனையும் சாதிக்க முடியும். சம்பள பேச்சுவார்த்தையில் ஒப்பந்தம் செய்கின்ற தொழிற்சங்கங்கள் இதனை உணரவேண்டும்.

எமது மக்களுடைய நன்மையை கருதி, ஒன்றுபட்டு செயற்பட நான் எந்த விட்டுக் கொடுப்பையும் செய்ய தயாராக இருக்கின்றேன். இன்று மக்களும் ஒற்றுமையாக செயற்படுவதையே விரும்புகின்றார்கள். தோட்டங்களில் அனைவரும் ஒற்றுமையாக செயற்படுவதன் காரணமாக பல பிரச்சினைகள் தீர்த்து வைக்கப்பட்டுள்ளன.

இல்லாவிட்டால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தொழிற்சங்க ரீதியாக பிரிந்து செயற்படுவதனால் குடும்பத்திலும் பல பிரச்சினைகள் ஏற்படுகின்றன. எனவே, இவற்றுக்கெல்லாம் முடிவுகட்ட வேண்டுமானால் அனைவரும் ஒற்றுமையாக செயற்பட முன்வர வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .