2025 மே 19, திங்கட்கிழமை

நுவரெலியாவுக்கு சிவப்பு அறிவிப்பு

R.Maheshwary   / 2022 செப்டெம்பர் 14 , பி.ப. 04:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

 ரஞ்சித் ராஜபக்‌ஷ

நுவரெலியா மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும், 2020-2022ஆம் ஆண்டு வரையான  மூன்று வருட காலப்பகுதிக்கான மதிப்பீட்டு வரி செலுத்தாதவர்களின் சொத்துக்கள் அடுத்த வாரத்தில் மாநகர சபையால் கையகப்படுத்தப்படும் என நுவரெலியா மாநகரசபையின் மாநகர ஆணையாளர் தெரிவித்தார்.

வீட்டுகள், கடைகள், சுற்றுலா விடுதிகள் மற்றும் காணிகளுக்கு பல்வேறு காரணங்களுக்காக குறிப்பிட்ட நபர்கள் மாநகரசபைக்கு செலுத்த வேண்டிய மதிப்பீட்டு வரியை செலுத்தாமல் உள்ளதால்,  மூன்று வருட காலப்பகுதியில் மாநகர சபையின் வருவாய்த் திணைக்களம் 8 கோடி ரூபாயை இழந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில், நுவரெலியா நகரின் பல இடங்களில் சிவப்பு அறிவிப்புகளை காட்சிப்படுத்தி, மதிப்பீட்டு வரி செலுத்தாதவர்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கி, பொதுமக்களுக்கும் வர்த்தகர்களுக்கும் மாநகர ஆணையாளர் சுஜீவா போதிமான்ன எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்கள்,  மூன்று வருடங்களாக ஏற்பட்ட பல்வேறு பிரச்சினை மற்றும் அனர்த்த நிலைமைகளுக்கு முகங்கொடுத்து ஏற்பட்ட பொருளாதார சிரமங்களினால் மாநகர சபைக்கு செலுத்த வேண்டிய வரிகளை செலுத்த முடியாமல் போனதாகத் தெரிவித்தனர்.

.எனவே, மாநகர சபையால் தமது சொத்துகள் கையகப்படுத்தப்பட்டால், சிரமத்திற்கு ஆளாக நேரிடும் என்றனர்.

 

மதிப்பீட்டு வரி செலுத்தாதவர்களின் சொத்துக்களை மாநகர சபை கையகப்படுத்துவதாக வெளியிடப்பட்ட விடயம்  தொடர்பில் கருத்து தெரிவித்த நுவரெலியா மாநகரசபையின் மேயரும் நிதிக்குழு தலைவருமான சந்தன லால் கருணாரத்ன,

 

பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்களின் பிரச்சினைகள் தொடர்பில்   எழுத்துப்பூர்வமாக அறிவிக்கப்பட்டால், அனைத்து தரப்பினருடனும் விவாதித்து, நிலுவைத் தொகை மதிப்பீட்டு வரியை செலுத்த,  சிறிது கால அவகாசம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X