George / 2016 ஜூன் 02 , மு.ப. 09:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பா.திருஞானம்
பெருந்தோட்ட பாடசாலைகளின் அபிவிருத்திக்காக உலக வங்கியின் உதவியையும் கோரியுள்ளதாக இராஜாங்க கல்வி அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
இதற்கமைவாக ஒரு சில அபிவிருத்தி வேலைத்திட்டங்களை உலக வங்கி முன்னெடுக்க உத்தேசித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இது தொடர்பிலான கலந்துரையாடல் கல்வி அமைச்சின் கேட்போர் கூடத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது. இக்கலந்துரையாடலில், இராஜாங்க கல்வி அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன், அமைச்சின் செயலாளர் திஸ்ஸ ஹேவாவிதான, உலக வங்கியின் சார்பாக டொக்டர். ஹர்ச அத்துருபான உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இச்சந்திப்பு தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை கூறினார்.
இது தொடர்பில் மேலும் கூறிய அவர், 'பெருந்தோட்டப் பாடசாலைகளில் அபிவிருத்தி தொடர்பாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அதிக கவனம் செலுத்தி வருகின்றார். அதனடிப்படையில், நாங்கள் உலக வங்கியின் அதிகாரிகளை சந்தித்து எமது தேவைகள் தொடர்பாக விளக்கமளித்தோம்.
விசேடமாக பாடசாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகள், கணித, விஞ்ஞான, ஆங்கில, கணினி பாடங்களுக்கான ஆசிரியர் பற்றாக்குறை தொடர்பாக விரிவாக எடுத்துக்கூறினோம்' என்றார்.
'கடந்த காலத்தில் கல்வி அமைச்சில் இருந்த சில அதிகாரிகள் இலங்கையின் கல்வி அபிவிருத்திக்கு உலக வங்கியின் அனுசரணை தேவையில்லை என கூறியதாக உலக வங்கியின் அதிகாரிகள் இதன்போது எனக்கு சுட்டிக்காட்டினர்.
அதன் காரணமாகவே பல வேலைத்திட்டங்களை உலக வங்கி முன்னெடுக்க முன்வரவில்லை என்பதையும் அவர்கள் எமக்கு கூறினர். தற்போது அவ்வாறான ஒரு நிலைமை இல்லை என்பதை நான் அவர்களுக்கு எடுத்துரைத்தேன். பெருந்தோட்டப் பாடசாலைகளில் தற்போது நிலவி வரும் பௌதிக வளப்பற்றாக்குறை தொடர்பிலும் அவர்களுக்கு கூறினேன்' என்றார்.
மிக விரைவில் ஒரு சில அபிவிருத்தி வேலைத் திட்டங்களை முன்னெடுக்க உத்தேசித்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளதாகவும் கல்வி இராஜாங்க அமைச்சர் மேலும் கூறினார்.
11 Apr 2026
11 Apr 2026
11 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 Apr 2026
11 Apr 2026
11 Apr 2026