Sudharshini / 2016 ஜனவரி 05 , மு.ப. 02:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஞ்சித் ராஜபக்ஷ
சவூதிக்கு பணிப்பெண்ணாகச் சென்று நாடு திரும்பிய பெண், இதுவரை வீடுதிரும்பவில்லை என அப்பெண்ணின் உறவினர்கள் ஹட்டன் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.
ஹட்டன், டிக்கோயா தோட்டத்தை சேர்ந்த, இரண்டு பிள்ளைகளின் தாயான லெட்சுமணன் சிவகாமி என்பவர், கடந்த 2013ஆம் ஆண்டு பணிப்பெண்ணாக சவூதிக்குச் சென்றுள்ளார்.
இவர் 2015.10.08ஆம் திகதியன்று மீண்டும் நாடு திரும்பியபோதிலும் இதுவரை வீடு வந்த சேரவில்லை என அப்பெண்ணின் மாமனாரான பச்சைமுத்து என்பவர் பொலிஸில் முறையிட்டுள்ளார். அந்த முறைப்பாட்டில் அவர் மேலும் கூறியுள்ளதாவது.
'எனது மகன் மனநலம் குன்றியவன்;. ஹட்டன் பகுதியில் உள்ள வீடுகளில் கூலி வேலை செய்துதான் எனது குடும்பத்தை காப்பாற்றி வருகின்றேன். மிகவும் சிரமத்துக்கு மத்தியில்தான் வாழ்ந்து வருகின்றோம். மருமகள் தொடர்பாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்துக்குச் சென்று விசாரித்த போது, அவர் நாடு திரும்பியுள்ளதாக தெரிவித்தார்கள். எனினும் இன்னும் அவர் வீடு வந்து சேரவில்லை.
நானும் சுகவீனமுற்றுள்ளதால் எனது மகனையும் பேரப்பிள்ளைகளையும் பார்த்துக்கொள்ள முடியாதுள்ளது. இதனால் எனது மருமகள் எங்கு இருந்தாலும் வீட்டுக்கு வரவேண்டும். இவர் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் உடனடியாக தகவல் வழங்க வேண்டும்' என அவர் தனது முறைப்பாட்டில் கோரியுள்ளார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த குறித்த பெண்ணின் மகன், 'அப்பா மற்றும் தம்பியை எனது தாத்தா, பாட்டிதான் பார்த்துக்கொள்கின்றார்கள். நான் தற்போது 9ஆம் வகுப்பில் கல்வி பயில்கின்றேன். அவர்கள் இருவரும் சுகவீனமுற்றுள்ளதால் எம்மை பராமரிப்பதில் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். எனவே எங்கிருந்தாலும் எனது அம்மா வீட்டுக்கு வரவேண்டும்' என கோரியுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .