Gavitha / 2016 செப்டெம்பர் 04 , மு.ப. 10:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
-டி.ஷங்கீதன்
'ஊவா, சப்ரகமுவ மாகாண பாடசாலை மாணவர்களை நான் மறந்துவிடவில்லை. அந்த மாணவர்களை நுவரெலியா மாவட்டத்தில் உள்வாங்கக்கூடாது என்ற தீர்மானத்தை நான் தனியாக எடுக்கவில்லை. இது ஒரு கூட்டுத் தீர்மானமாகும்' என்று தெரிவித்த இராஜாங்க கல்வி அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன், மேற்படி மாகாணங்களில் இரு பாடசாலைகளை கணித, விஞ்ஞான பாடசாலைகளாக தரமுயர்த்த உடனடி நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளதாக தெரிவித்தார்.
மலையக கல்வி அபிவிருத்திக்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க 500 மில்லியன் ரூபாயையும் மேலதிகமாக வழங்கியுள்ளதாக அவர் மேலும் கூறினார்.
25 பாடசலைகளை அபிவிருத்தி செய்வது தொடர்பிலான கலந்துரையாடல், அண்மையில் கொழும்பு மீபேயில் அமைந்துள்ள தேசிய கல்வி நிறுவகத்தில் நடைபெற்றது. இக்கலந்துரையாடலில், அதிபர்கள் பாடசாலை கட்டட அபிவிருத்திக்கான பணிப்பாளர் டாக்டர் அபேசுந்தர, பெருந்தோட்ட பாடசலைகளுக்கான அபிவிருத்தி பணப்பாளர் திருமதி சபாரஞ்சனி ஆகியோர் கலந்துகொணடனர். இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் மேலும் கூறிய அவர்,
'வெளிமாவட்ட மாணவர்களை நுவரெலியாவுக்கு உட்பட்ட பாடசாலைகளுக்கு உள்வாங்கக் கூடாது என்ற தீர்மானம் தொடர்பில் பிழையான கருத்துக்கள் கூறி வருகின்றனர். குறிப்பாக, ஊவா மாகாணத்திலும், சப்ரகமுவ மாகாணத்திலும் இவ்வாறு பேசப்பட்டு வருகின்றது. இந்த தீர்மானத்தை நான் தனியாக எடுக்கவில்லை.
நுவரெலியாவில் நடைபெற்ற மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.
அந்;த கூட்டத்தில் அமைச்சர் நவீன் திசாநாயக்க, மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க, நாடாளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்டமான் முத்துசிவலிங்கம், எம்.திலகராஜ், கே.கே.பியதாச, மாகாண சபை உறுப்பினர்கள் என அனைவரும் கலந்துகொண்டிருந்ததுடன் இவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து கூட்டாகவே இந்த தீர்மானத்தை எடுத்தனர்.
ஊவா, சப்ரகமுவ மாகாணங்களில் அமைந்துள்ள பதுளை சரஸ்வதி தேசிய கல்லூரி, பசறை தேசிய கல்லூரி, இரக்குவானை சென் ஜோன் கல்லூரி, பலாங்கொடை கனகநாயகம் கல்லூரி ஆகிய நான்கு பாடசாலைகளை உடனடியாக அபிவிருத்தி செய்வதற்கு நான் நடவடிக்கை எடுக்கின்றேன்.
பாடசாலைகளுக்கு தேவையான பௌதிக வளங்கள், ஆசிரியர் பற்றாக்குறை என்பவற்றை உடனடியாக நிவர்த்திப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்வேன்' என்றார்.
அத்துடன் 2017ஆம் ஆண்டு வரவு-செலவு திட்டத்தில் மலையக பாடசாலை அபிவிருத்திக்காக 500 மில்லியன் ரூபாயை மேலதிகமாக ஒதுக்குவதற்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பணித்திருப்பதாகவும் அமைச்சர் மேலும் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .