2026 ஏப்ரல் 12, ஞாயிற்றுக்கிழமை

'புதிய தீர்வை ஏற்க மாட்டோம்'

Kogilavani   / 2016 ஜூன் 30 , மு.ப. 04:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

க.ஆ.கோகிலவாணி, சுதர்ஷினி சாமிவேல்

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினைக்கு உரிய தீர்வு பெற்றுக்கொடுக்கப்படாமல், பேச்சுவார்த்தையும் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், அப்பிரச்சினைக்கான தீர்வாக முதலாளிமார் சம்ளேனம் முன்வைத்துள்ள தீர்வை தாம் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை' என, கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் பிரதான தொழிற்சங்கங்களான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், இலங்கைத் தேசிய தோட்டத் தொழிலாளர் யூனியன் என்பன கூறியுள்ளன.

'பாதகமாக அமையும்'- இ.தொ.கா

'பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை தொடர்பில் முதலாளிமார் சம்மேளனம் முன்வைத்துள்ள தீர்வு, தோட்டத் தொழிலாளர்களுக்குப் பாதகமாகவே அமையும்' என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் முத்து சிவலிங்கம் தெரிவித்தார்.

'புதிய தீர்வின்படி முதல் 12 நாட்களுக்கு நாளொன்றுக்கு 720 ரூபாய் வீதமும் ஏனைய நாட்களுக்கு கொழுந்தின் விலை அடிப்படையிலும் சம்பளம் வழங்கப்படும் என குறிப்பிட்டுள்ளனர். இது சாத்தியமற்ற ஒரு விடயமாகும்.

முதல் 12 நாட்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தைத் தவிர்த்து, ஏனைய நாட்களுக்கு வழங்கப்படும் சம்பளம் கேள்விக்குறியாகி விடும். காரணம் கொழுந்து அல்லது இறப்பர் உற்பத்தியில் வீழ்ச்சி ஏற்படும் காலங்களில், கொடுப்பனவு மிகக் குறைந்த அளவிலேயே வழங்கப்படும்.

தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் முதலாளிமார் சம்மேளனம்,  தனியாக முடிவெடுக்க முடியாது. அவர்கள், பேச்சுவார்த்தையின் ஊடாகவே தீர்மானத்தை முன்வைக்க வேண்டும். புதிய தீர்மானத்தில் எமக்கு உடன்பாடில்லை' என அவர் மேலும் தெரிவித்தார்.

'தொழிலாளர்களே பாதிப்படைவர்'

'பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் முதலாளிமார் சம்மேளனம் முன்வைத்துள்ள தீர்வைத் தாம் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை' என லங்காத் தோட்டத் தொழிலாளர்  சங்கத்தின் பொதுச்செயலாளர் எஸ்.இராமநாதன் கூறினார்.

இது தொடர்பில் மேலும் கூறிய அவர்,

'12 நாட்களுக்கு நாளொன்றுக்கு 720 ரூபாய் படியும் மீதமுள்ள நாட்களுக்கு கொழுந்தின் நிறைப்படியும் சம்பளம் வழங்கப்படுமென முதலாளிமார் சம்மேளனம் தீர்மானித்துள்ளது. கூட்டொப்பந்தம் காலாவதியாகிய பின்பு, முதலாளிமார் சம்மேளனத்துக்கும் பிரதான தொழிற்சங்கங்களுக்கும் இடையில் நடைபெற்ற முதற்கட்ட பேச்சுவார்த்தையில், முதலாளிமார் சம்மேளனம் இதே முறைமையை முன்வைத்தது. இதனால் தொழிலாளர்களே பாதிப்படைவர் எனக் கருதி நாங்கள் இதனை நிராகரித்தோம்.

முதலாளிமார் சம்மேளனமானது, நாங்கள் முன்வைத்த கோரிக்கைகளுக்கு ஓரளவு இணங்கி வந்திருந்தாலும் சில விடயங்களில் திருத்தம் செய்ய வேண்டிய தேவையுள்ளது' என அவர் கூறினார்.

'தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்குவதில் முதலாளிமார் சம்மேளனமானது புதிய முறைகளை அறிமுகப்படுத்துமாயின் அது தொடர்பிலான வாத, விவாதங்கள் நடைபெற்று ஆலோசனைகளை பெற வேண்டும். தொழிலாளர்களுக்கும் விளக்கமளிக்க வேண்டும். இம்முறைமை தொடர்பிலான சாதக - பாதங்களை அறிந்த பின்னரே இம்முறைமை சிறந்ததா எனத் தீர்மானிக்க முடியும்.

அதேபோன்று 2003ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட கூட்டுஒப்பந்தத்தில் தொழிலாளர்களுக்கு கட்டாயமாக 25 நாட்கள் தொழில் வழங்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், முதலாளிமார் சம்மேளனம் கொண்டுவந்துள்ள புதிய முறைமையில் 12 நாட்களுக்கு மட்டுமே 720 ரூபாய் அடிப்படையில் சம்பளம் வழங்கப்படுமெனவும் ஏனைய நாட்களுக்கு தொழிலாளர்கள் எடுக்கும் கொழுந்தின் நிறைக்கு ஏற்ப சம்பளம் வழங்கப்படுமெனவும் கூறப்பட்டுள்ளது. இதனால், தொழிலாளர்களுக்கு மாதமொன்றுக்கு 12 நாட்கள் மட்டுமே வேலை வழங்கப்படவுள்ளது. இதனை ஏற்றுக்கொள்ள முடியாது' என அவர் கூறினார்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .