2025 மே 20, செவ்வாய்க்கிழமை

கொள்ளையிலீடுபட்ட இருவருக்கு கடூழியச் சிறை

எம். றொசாந்த்   / 2018 ஒக்டோபர் 23 , மு.ப. 07:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம் செப்பல் வீதியில் உள்ள வீடொன்றுக்குள் புகுந்து அங்குள்ளவர்களைத் தாக்கிவிட்டு நகை மற்றும் பணத்தைக் கொள்ளையிட்ட குற்றவாளிகளில் ஒருவருக்கு 2 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனையும் மற்றொருவருக்கு 10 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஒரு வருட கடூழியச் சிறைத் தண்டனையும் விதித்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்ற நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன் நேற்று (22) தீர்ப்பளித்தார்.

யாழ்ப்பாணம் செப்பல் வீதியிலுள்ள வீடொன்றுக்கு கடந்த 2017ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம்   சென்ற ஒருவர், தண்ணீர்த் தாகமாகவுள்ளதாகத் தெரிவித்து குடிதண்ணீர் கேட்டுள்ளார். அவருக்கு அந்த வீட்டின் உரிமையாளரால் குடிதண்ணீர் வழங்கப்பட்டது. அதனைக் குடித்துவிட்டு போத்தல் ஒன்றைத் தருமாறு அவர் கேட்டுள்ளார். வீட்டின் உரிமையாளர் போத்தல் ஒன்றை வழங்கியுள்ளார். அந்தப் போத்தலால் வீட்டின் உரிமையாளரையும் அவரது மனைவியையும் தாக்கிய கொள்ளையர், அவர்களிடமிருந்த நகை மற்றும் பணத்தைக் கொள்ளையிட்டுத் தப்பித்தனர்.

குறித்தசம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்டவர்களால் முறைப்பாடு வழங்கப்பட்டது.

அதனடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்த யாழ்ப்பாணம் பொலிஸார் சந்தேகநபர்கள் இருவரைக் கைது செய்தனர். அத்துடன் சந்தேகநபர்கள் இருவராலும் நகைக் கடை ஒன்றில் விற்பனை செய்யப்பட்ட நிலையில் கொள்ளையிடப்பட்ட நகைகளையும் பொலிஸார் மீட்டனர்.

அதன் பின்னர் சந்தேகநபர்கள் இருவரும் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு குறிப்பிட்ட காலப்பகுதிக்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றால் விளக்கமறியலில் வைக்கப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் சந்தேகநபர்களுக்கு எதிராக கொள்ளை மற்றும் இருவரைத் தாக்கியமை  உட்பட நான்கு பிரிவுகளில் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் பொலிஸார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அதனடிப்படையில் விசாரணைகள் இடம்பெற்று வந்தன.

இந்த நிலையில் முதலாவது சந்தேகநபரை நான்கு குற்றச்சாட்டுக்களிலும் குற்றவாளியாகக் கண்ட நீதிமன்று, அவருக்கு 2 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது.

அத்துடன், இரண்டாவது சந்தேகநபரை முதலாவது சந்தேகநபருக்கு உதவிய குற்றத்துக்காக 10 ஆண்டுகள் ஒத்திவைக்கப்பட்ட ஒரு ஆண்டு கடூழியச் சிறைத் தண்டனையை மன்று வழங்கியது.

அத்துடன் 2 குற்றவாளிகளும் தலா 4 ஆயிரம் ரூபாய் தண்டப்பணத்தைச் செலுத்த வேண்டும் எனவும் தவறின் ஒரு மாத சிறைத் தண்டனையை அனுபவிக்க நேரிடும் என்று நீதிமன்று உத்தரவிட்டது.

அத்துடன், சான்றுப்பொருளாகச் சமர்ப்பிக்கப்பட்ட நகைகளை உரிய நடைமுறைகளின் அடிப்படையில் பாதிக்கப்பட்டவர்களின் கையளிக்க பதிவாளருக்கு நீதிமன்று கட்டளையிட்டது.

இதேவேளை, முதலாவது குற்றவாளிக்கு எதிராக கொலை மற்றும் கொள்ளை தொடர்பான மற்றொரு குற்றச்சாட்டு வழக்கு நிலுவையில் உள்ளது. ஆனைக்கோட்டைப் பகுதியில் மூதாட்டி ஒருவரைக் கொலை செய்து அவரது காதுகள் இரண்டையும் அறுத்தெடுத்து தோடுகளைக் கொள்ளையிட்ட சம்பவத்திலேயே அந்தக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு, யாழ்.நீதிவான் நீதிமன்றில் வழக்கு விசாரணைகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X