Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Editorial / 2018 ஒக்டோபர் 16 , மு.ப. 06:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.நிதர்ஷன், டி.விஜித்தா
ஜனாதிபதியுடனான சந்திப்பில், அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பிலான தீர்மானங்கள் மேற்கொள்ளப்படுவது சாத்தியம் இல்லை என்று தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன், அரசாங்கத்துடனான பேச்சுகளின் போது, பல்வேறு விடயங்கள் தொடர்பில் சுட்டிக்காட்டவுள்ளதாகவும் கூறினார்.
மேலும், அரசியல் கைதிகளின் விடுதலை பொய்த்துப் போகுமாயின், வரவு -செலவுத்திட்டத்துக்கு எதிராகச் செயற்படுவது தொடர்பிலான தகவல்கள் வெளியாகியிருக்கின்ற போதிலும், அதனை எதிர்ப்பது தொடர்பான முடிவு, இதுவரை எடுக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
யாழ்ப்பாணத்திலுள்ள அவரது அலுவலகத்தில், நேற்று (15) ஊடகவியலாளர் சந்திப்பொன்று நடைபெற்றது. இந்தச் சந்திப்பில், “அரசியல் கைதிகளின் விடுதலை உள்ளிட்ட தமிழ் மக்களின் முக்கிய பிரச்சினைகளுக்கான தீர்வை நிறைவேற்ற அரசாங்கம் தவறும் பட்சத்தில், வரவு - செலவுத்திட்டத்துக்கு எதிராகக் கூட்டமைப்பு செயற்பட வேண்டும் என்று, சிவில் அமைப்புகளும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரும் தெரிவித்துள்ளார்.
“வரவு- செலவுத்திட்டத்துக்கு எதிராகச் செயற்படுவது தொடர்பில், கூட்டமைப்பு ஏதேனும் முடிவுகளை எடுத்துள்ளதா,” என்று, ஊடகவியலாளர்கள் கேள்விகளை எழுப்பினர். அதற்குப் பதிலளித்து கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பில், அவர் மேலும் தெரிவிக்கையில்,
“நடந்து முடிந்த நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில், அரசியல் கைதிகளின் விவகாரங்கள் தொடர்பில் பேசியிருந்தோம். அரசாங்கம் தாம் செய்வதாகக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. சில விடயங்களைச் செய்துள்ளது. ஆனால், ஒரு விடயத்தையும் பூரணமாக முடிக்கவில்லை” என்றார்.
“அதனால் அரசாங்கத்துக்கு ஒரு காலக்கேடு கொடுத்து, அதற்குள் சில விடயங்களைச் செய்யாவிட்டால், வரவு - செலுவுத் திட்டத்துக்கு எதிராகச் செயற்பட வேண்டும் என்ற கருத்து, எங்களில் பலர் மத்தியில் உள்ளது. ஆனால், எந்த விடயங்கள் தொடர்பில் அரசாங்கத்துக்கு நிபந்தனை வைக்க வேண்டும், எந்தக் காலகெடு கொடுக்க வேண்டும் என்பது பற்றிக் கூட்டமைப்பு இன்னமும் தீர்மானங்களை மேற்கொள்ளவில்லை” என்றும் அவர் இதன்போது தெரிவித்தார்.
பாதுகாப்பு அமைச்சு சம்பந்தப்பட்ட கூட்டமொன்று, ஜனாதிபதி தலைமையில் எதிர்வரும் 17ஆம் திகதி நடைபெறவுள்ளது. அந்தக் கூட்டம் முடிவடைந்த பின்னர், ஜனாதிபதி எம்மைச் சந்தித்துப் பேச உள்ளார். அச்சந்திப்பில், தேவை ஏற்பட்டால் சட்ட மா அதிபரையும், நீதி அமைச்சரையும் அழைப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார் என்று தெரிவித்த சுமந்திரன் எம்.பி, “இவர்கள் இருவரையும் அழைப்பது, அன்றைய சந்திப்பின் போது நடைபெறுமா அல்லது மற்றுமொரு தினத்தில் நடைபெறுமா என்று தெரியாது. இந்த வகையில், ஜனாதிபதியுடனான சந்திப்பில் வைத்து, அரசியல் கைதிகளின் விடயம் தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படுமா என்று சொல்ல முடியாது. ஆனால், கூட்டமைப்பு மிக அழுத்தமாகக் கோரிக்கைகளை முன்வைக்கும். அந்தக் கோரிக்கைகள் தொடர்பான தீர்மானம் எவ்வாறு எடுக்கப்படும் என்று, இப்போது கூற முடியாது” என்றார்.
இதேவேளை, அரசியல் கைதிகளின் விடுதலைக்கு சிங்கள மக்களின் ஆதரவைப் பெற்றுக் கொள்வதற்கான வேலைத்திட்டத்தை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னெடுத்துள்ளதாகத் தெரிவித்திருக்கும் எம்.ஏ.சுமந்திரன் எம்.பி, “சிங்கள மக்களின் ஆதரவு பெறப்பட்டால், அரசியல் கைதிகளின் விடுதலை இலகுவடையும்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
“அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டுமெனக் கோரி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், மக்கள் விடுதலை முன்னணியும் (ஜே.வி.பி) சேர்ந்து, எதிர்வரும் 25ஆம் திகதி, கூடுதலான நேரத்தை எடுத்து, சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை ஒன்றை முன்வைக்க உள்ளோம்” என்று தெரிவித்த சுமந்திரன் எம்.பி., “அதற்கு, கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தெற்கிலே உள்ளவர்களுக்கு, அரசியல் கைதிகளின் விவகாரங்களைச் சரியான விதத்தில் எடுத்துச் சொல்ல வேண்டும் என்பதற்காகவே, ஜே.வி.பி.யுடன் சேர்ந்து செய்கின்றோம்” என்றார்.
“குற்றம் புரிந்த நிலையில், தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்களை எந்தத் தண்டனையும் இல்லாமல் விடுவிப்பதற்கு அரசாங்கம் உத்தேசிப்பதாக தீவிர சிங்களக் கட்சிகளும் அமைப்புகளும் பொய்ப் பிரச்சாரத்தை சிங்கள மக்கள் மத்தியில் செய்கின்றார்கள். அவை திருத்தப்பட வேண்டும்” என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
“நீண்ட காலம் தடுப்பில் அவர்கள் உள்ளார்கள் என்றும் வழக்கு முடிந்து தண்டனை கொடுக்கப்பட்டாலும், வழக்கு முடிவதற்கு முன்னரிலிருந்தே அவர்கள் தண்டணை அனுபவித்து வருகின்றார்கள் என்பதை, சிங்கள மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும். இதனாலேயே, இப்படியான ஓர் ஒத்திவைப்புவேளைப் பிரேரணையை முன்வைக்க உள்ளோம்” என்றும், அவர் இதன்போது குறிப்பிட்டார்.
“அரசியல் கைதிகள் எழுதிய கடிதத்தில், தாங்கள் குற்றத்தை ஒப்புக் கொள்வதாகவும், நீண்ட கால தண்டனையை அனுபவித்து வருவதை கருத்திற்கொண்டு, தமக்குப் புனர்வாழ்வு அழித்து விடுதலை செய்யுமாறே கோரியுள்ளார்கள்.
“அந்த உண்மையைச் சரியான விதத்தில் சிங்கள மக்கள் மத்தியில் தெரியப்படுத்தினால், சிங்கள மக்கள் மத்தியிலிருந்து பாரிய ஆதரவு கிடைக்கும். அரசியல் கைதிகளின் நிலைமை தொடர்பில், சிங்கள மக்கள் மத்தியில் சரியான புரிதல் இல்லாத காரணத்தினாலேயே, எதிர்ப்புகள் எழுகின்றன. உண்மை நிலையை அவர்களுக்குத் தெரிவித்தால், நியாயமாகச் சிந்திக்கும் எந்தச் சிங்களவரும், அரசியல் கைதிகள் விடுவிக்கப்படுவதற்கு ஆதரவு தருவார்கள்” என்றார்.
புதிய அரசமைப்புத் திருத்தப் பணிகள் முன்னகர்வதைத் தடுப்பதற்கு, திட்டமிட்டச் செயற்பாடுகள் சில முன்னெடுக்கப்பட்டு வருகின்றதாகக் குற்றஞ்சாட்டியிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன், “அண்மையில் டக்ளஸ் தேவானந்தா எம்.பி எழுப்பிய சர்சையும், அரசமைப்புத் திருத்தத்தையும் குழப்புவதற்கான திட்டமிட்ட சதி வேலையாகவே பார்க்க வேண்டும்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
“எது எவ்வாறிருப்பினும், தடைகளுக்கு மத்தியில் ஆமை வேகத்தில் அரசியல் சீர்திருத்தப் பணிகள் முன்னெடுக்கப்பட்டாலும், நிச்சயம் வெற்றிபெறும். அவ்வாறு வெற்றி பெறாவிட்டால், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து நான் விலகுவேன்” என்றும் அவர் உறுதியளித்தார்.
“அரசமைப்பு விவகாரத்தில் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளோம். நிபுணர்களால் ஒரு வரைபு முன்வைக்கப்பட்டுள்ளது. அந்த வரைபு, 3 மொழிகளில் மொழிப்பெயர்க்கப்பட்டு, அரசமைப்புப் பேரவைக்கு, எதிர்வரும் 25ஆம் திகதி சமர்ப்பிக்கப்படத் தீர்மானிக்கப்பட்டிருந்தது.
“அந்த வரைபு, கடந்த 11ஆம் திகதி வழிநடத்தல் குழுவில் ஆராயப்பட்டது. அதில் சர்சையொன்று ஏற்பட்டது. குறிப்பாக மொழிப்பெயர்ப்புகள் இன்னமும் கிடைக்கவில்லை என்றும் அம்மொழிப்பெயர்ப்பை பெற்று, அதனைச் சரிபார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார்கள்.
“எதிர்வரும் மாதம் 7ஆம் திகதி, மீண்டும் அரசமைப்புப் பேரவை கூடும். அதன்போது, 3 மொழிகளிலும் அந்த வரைபு கையளிக்கப்படும். இது தவிர, 25ஆம் திகதியன்று, வழிநடத்தல் குழு மீண்டும் கூடி இறுதியாக்கப்பட்ட மொழிப்பெயர்ப்புகளை ஆராய்ந்து, அனுமதி வழங்கும் என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
“வழிநடத்தல் குழுவில் நடைபெறும் விடயங்கள் பகிரங்கப்படுத்தப்பட மாட்டாது என்று, எமக்குள் உடன்பாடு ஒன்று இருந்தாலும் கூட, ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, அங்கு நடைபெற்ற விடயங்கள் தொடர்பில் ஓர் அறிக்கையை பத்திரிகைகளுக்கு விடுத்துள்ளார்.
“இதனால், அவர் குறிப்பிட்ட விடயங்கள் தொடர்பில் சில தெளிவுபடுத்தல்களைச் செய்ய வேண்டியுள்ளது. வழிநடத்தல் சந்திப்புகளை நடத்த ஆரம்பித்த நாள்களில் இருந்தே, எப்படியாக நாட்டை வர்ணிப்பது என்பது தொடர்பில் பேசப்பட்ட போது பிரதமர் ஒரு கருத்தை முன்வைத்திருந்தார்.
“யுனிட்டரி ஸ்டேட்” என்று சொல்லப்படும் ஆங்கிலச் சொற்பதத்துக்கு, சிங்களத்தில் “ஏக்கிய ராட்சிய” என்ற தவறான மொழிப்பெயர்ப்பு, 72ஆம் ஆண்டில் இருந்து பயன்படுத்தப்பட்டு வருவதாக, பிரதமர் சொல்லியிருந்தார். “ஏக்கிய ராட்சிய” என்பது “ஒரு நாடு” என்பதைத்தான் குறிக்கின்றதே தவிர, அது ஆட்சி முறையைக் குறிக்கவில்லை என்பதையும் பிரதமர் விளக்கியிருந்தார்.
“பிரதமர் கூறிய விளக்கத்தை நாங்கள் ஏற்றுக் கொண்டதினால் தான், “ஏக்கிய ராட்சிய” என்ற சொற்பதத்தைப் பயன்படுத்தப்பட முடியும் என்ற இணக்கப்பாட்டுக்கு வந்திருந்தோம். ஆனாலும், “ஏக்கிய ராட்சிய” என்பது, நாட்டை மட்டும் குறிப்பது என்றும், அது ஆட்சி முறைமையை குறிப்பதாக அமையாது என்றும் புதிதாக ஒரு வரைவிலக்கணம் எழுதப்பட வேண்டும் என்று கேட்டிருந்தோம்.
“ஏக்கிய ராட்சிய” என்பதற்கான சரியான தமிழ்ச் சொல் என்னவென்று நாங்கள் ஆராய்ந்த போது, “ஒற்றையாட்சி” என்று சொல்லும் போது, அதில் ஆட்சி முறை குறிப்பிடப்படுவதால், அது பொருத்தமற்ற சொல் என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
“நாட்டில் சுயலாபத்தை மட்டும் குறிக்கும் சொல்லாக இது இருக்க வேண்டும். ஆகையால், “யுனிட்டரி ஸ்டேட்” என்ற சொற்பதமோ “ஒற்றையாட்சி” என்ற சொற்பதமோ உபயோகிக்க முடியாது. “ஏக்கிய ராட்சிய” என்பது, நாட்டின் சுபாவத்தைக் குறிப்பது போன்று, அதற்கேற்ற தமிழ்ச் சொல்லையும் கண்டுபிடிக்க வேண்டும் என்றும் தீர்மானித்திருந்தோம்.
“இதன்போது நான், அடுத்த கூட்டத்தில் ஒரு முன்மொழிவைச் செய்திருந்தேன். “ஏக்கிய ராட்சிய”த்துக்குப் பதிலாக, “ஒன்றுபட்ட நாடு” அல்லது “ஒருமித்த நாடு” என்ற சொற்பதத்தைப் பயன்படுத்தலாம் என்று முன்மொழிவு செய்தேன். இதில், “ஒருமித்த நாடு” என்பதைப் பயன்படுத்தலாம் என்று, அதிகமானவர்களால் பிரேரிக்கப்பட்டது.
“இடைக்கால வரைபின் போது, “ஏக்கிய ராட்சிய” சமன் (=) “ஒருமித்த நாடு” என்ற சொற்றொடர், மூன்று மொழிகளிலும் அப்படியே உபயோகிக்கப்பட வேண்டும் என்றும் அதற்கான வரைவிலக்கணம், அந்த உறுப்புரையிலேயே கொடுக்கப்பட வேண்டும். அதற்கான விளக்கமானது, அந்தச் சொற்பதம் ஆட்சி முறைமையை சம்பந்தப்பட்டதாக இல்லாது, நாட்டின் சுபாவத்தைக் குறிப்பதாக அதாவது பிரிக்கப்படாத, பிரிக்க முடியாத ஒரு நாடு என்ற வரைவிலக்கணம் கொடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
“இடைக்கால அறிக்கையை இறுதி செய்யும் போதுதான், டக்ளஸ் தேவானந்தா, “ஒருமித்த நாடு” என்பதற்குப் பதிலாக, “ஒரு நாடு” என்ற சொல் பொருத்தமானது என்றார். இவ்விடயம் தொடர்பில், வழிநடத்தல் குழுவில் உள்ளவர்களிடம் வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.
“அவ்வாக்கெடுப்பில், டக்ளஸ் மட்டும் “ஒரு நாடு” என்றார். ஏனையவர்கள், “ஒருமித்த நாடு” என்பதையே ஆதரித்தனர். இதனடிப்படையில் தான் இடைக்கால அறிக்கையில் “ஒருமித்த நாடு” என்ற சொற்பதம் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், இந்த விடயங்களைப் பகிரங்கமாகத் தெளிவுபடுத்தியுள்ளார்.
“மீண்டும் டக்ளஸ் தேவானந்தா, அந்தச் சர்சையை எழுப்பிய போது, பிரதமர் மீண்டும் அவருக்குத் தெளிவுபடுத்தியிருந்தார். அத்துடன், அவருடைய கருத்தை, அவர் சார்ந்த கட்சியின் நிலைப்பாடாகப் பதிவு செய்வதென்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
“ஒரு நாடு” என்ற சொல்லை உபயோகிப்பதாக இருந்தால், “ஏக்கிய ராட்சிய” என்று சொல்லாமல் நேரடியாக “எக்க ரட்ட” என்ற “ஒரு நாடு” என்ற சொற்பதத்தை உபயோகிக்க வேண்டும் என்பதே என்னுடைய நிலைப்பாடாக உள்ளது.
“அரசமைப்பில், நாட்டின் சுபாவத்தை வர்ணிக்கும் சொற்பதங்கள், பேச்சு வழங்கில் உள்ள சொற்பதங்களாக இல்லாமல், சற்று உயர்ந்த சொற்பதங்களாக இருக்க வேண்டும். இந்த முடிவுகளை நாங்கள் ஏற்கெனவே எடுத்துள்ளோம்.
“ஆனால், தற்போது சிறு குளறுபடி ஏற்பட்டதால், முன்னேற்ற நடவடிக்கையில் சற்று பின்னகர்வு ஏற்பட்டுள்ளது. அரசமைப்பை பிற்போட வைப்பதற்காக, வெவ்வேறு சர்சைகளை வெவ்வேறு தருணங்களில் முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றார்கள்.
“ஆனாலும், அந்தச் சர்சைகளை எவ்வளவு தூரம் ஏற்படுத்துகின்றார்கள் என்று நாங்களும் பொறுத்திருந்துப் பார்ப்போம். டக்ளஸ் தேவானந்தா, அரசமைப்பு நடவடிக்கையைப் பின்னகர்த்துவதற்காகச் செய்யும் திட்டமிட்ட செயற்பாடாகவே எமக்குத் தோன்றுகின்றது” என, சுமந்திரன் எம்.பி மேலும் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
25 minute ago
30 minute ago
43 minute ago