2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

யாழ். மக்கள் குறித்த விபரங்களை கணினிமயப்படுத்தும் நடவடிக்கையே முன்னெடுப்பு: பிரதி பொலிஸ்மா அதிபர்

Menaka Mookandi   / 2011 ஜூன் 15 , மு.ப. 08:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

யாழ்ப்பாணம் உட்பட வட மாகாணத்தைச் சேர்ந்த பொதுமக்கள் தொடர்பான விபரங்களை கணினி மயப்படுத்தும் நடவடிக்கையொன்று பொலிஸாரால் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

ஏனைய பிரதேசங்களில் கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்டதைப் போன்றே தற்போது வட மாகாணத்தில் இந்த பதிவு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என்று வட மாகாணத்துக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் காமினி சில்வா தமிழ்மிரருக்கு தெரிவித்தார்.

இந்த பதிவு நடவடிக்கையில் இராணுவத்தினர் எவ்விதத்திலும் தொடர்புபடவில்லை. அத்துடன் யாழ். குடாநாட்டில் மாத்திரமன்றி இந்த பதிவு நடவடிக்கை ஏற்கனவே முன்னெடுக்கப்படாத அனைத்து பிரதேசங்களிலும் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது எனத் தெரிவித்த பொலிஸ் மா அதிபர், இந்த நடவடிக்கையினால் பொதுமக்களுக்கு எவ்விதச் சிரமங்களும் ஏற்படுத்தப்படுவதில்லை என்றும் குறிப்பிட்டார்.

யாழ். குடாநாட்டின் பல பிரதேசங்களிலும் இராணுவம் மற்றும் சிவில் உடைகளில் செல்லும் பாதுகாப்பு தரப்பினர் பொதுமக்களைப் பதிவு செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் இதற்காக வீடுகள் மற்றும் பொதுமக்களை புகைப்படம் எடுக்கும் நடவடிக்கையிலும் அவர்கள் ஈடுபட்டுள்ளதால் மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பில் யாழ். கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்கவிடம் தமிழ்மிரர் கேட்ட போது, 'இராணுவத்தினரால் அவ்வாறானதொரு நடவடிக்கை முன்னெடுக்கப்படவில்லை என்றும் இது சில அரசியல் பிரமுகர்களால் பரப்பப்படும்; வதந்தியே' என்றும் குறிப்பிட்டார்.

இதேவேளை, 'இராணுவத்தினர் உட்பட பாதுகாப்பு தரப்பினர்களால் இவ்வாறான பதிவு நடவடிக்கைகள் எவையும் மேற்கொள்ளப்படுவதான முறைப்பாடுகள் எவையும் தனக்கு இதுவரையில் கிடைக்கப்பெறவில்லை' என்று யாழ். அரச அதிபர் இமெல்டா சுகுமார் தமிழ்மிரரிடம் தெரிவித்தார்.

'இருப்பினும், நாடு முழுவதும் பொதுமக்கள் கணக்கெடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில் யாழ்ப்பாணத்திலும் அதற்கான நடவடிக்கைகளில் தானும் தான் சார்ந்த அரச அதிகாரிகளும் ஈடுபட்டு வருவதாக தெரிவித்த அரச அதிபர், இந்த கணக்கெடுப்பு நடவடிக்கைக்கு பொதுமக்களின் புகைப்படங்கள் அவசியப்படாத அதேவேளை, பாதுகாப்பு தரப்பினரின் ஒத்துழைப்பும் இதற்காக ஒருபோதும் பெற்றுக்கொள்ளப்படவில்லை' என்றும் குறிப்பிட்டார்.


இருப்பினும், யாழ். குடாநாட்டின் கோப்பாய், கட்டப்பிராய், கல்வியன்காடு, இருபாலை உள்ளிட்ட பல பிரதேசங்களிலும் இராணுவத்தினரால் பொதுமக்களை பதிவு செய்யும் நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இதனால் பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுப்பதாகவும் பாதிக்கப்பட்ட மக்களால் தன்னிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் தமிழ்மிரரிடம் தெரிவித்தார்.

'சிவில் மற்றும் இராணுவ சீருடைகளில் வருகை தரும் சிலர் அவர்களிடமுள்ள ஆவணப் படிவமொன்றை நிரப்புவதுடன் அதன் பின்னர் வீட்டு வாசலில் இலக்கம் இடப்பட்ட வெள்ளை நிற ஸ்ரிக்கர் ஒன்றையும் ஒட்டிவிட்டுச் செல்கின்றனர். அத்துடன், அவர்களால் பதியப்படும் மக்களும் அவர்களது வீடுகளும் கூட புகைப்படம் எடுக்கப்படுகின்றன என்று பாதிக்கப்பட்ட மக்கள் என்னிடம் முறையிட்டனர்.

ஏற்கனவே இந்த பதிவு நடவடிக்கை தொடர்பில் உயர் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்து பதிவை ரத்து செய்யுமாறு உத்தரவும் பெற்றுக்கொண்டோம். இருப்பினும் மீண்டும் இவ்வாறான பதிவுகள் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்று வருகின்றன. இதற்கு எதிராக மீண்டும் நாம் நீதிமன்றம் செல்லவும் தயாராக உள்ளோம்' என்று அவர் மேலும் தெரிவித்தார். 


  Comments - 0

  • ajan Wednesday, 15 June 2011 11:09 PM

    நல்லாதான் பொய் சொல்லுறாங்க

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X