2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

கட்டுக்கோப்பான தொழிற்சங்க கட்டமைப்பே அங்கத்தவர்களின் நலன்களை பாதுகாக்கும்: எம்.பி சந்திரகுமார்

Kogilavani   / 2013 மே 20 , மு.ப. 10:38 - 0     - {{hitsCtrl.values.hits}}


சுமித்தி தங்கராசா


'கிளிநொச்சி மாவட்ட முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் சட்டரீதியான பதிவுக்குட்பட்ட கட்டுக்கோப்பன அமைப்பாக இயங்கவேண்டும். அதுவே முச்சக்கரவண்டி உரிமையாளர்களின் நலன்களுக்கு உத்தரவாதமளிக்கும்' என நாடாளுமன்ற உறுப்பினரும் நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான மு.சந்திரகுமார் தெரிவித்துள்ளார். 

கிளிநொச்சி மாவட்ட முச்சக்கரவண்டி உரிமையாளர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடலிலே அவர் இதனை தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

'இன்று கிளிநொச்சி மாவட்டத்தில் 500 இற்கும் அதிகமான முச்சக்கரவண்டிகள் சேவையில் ஈடுபட்டு வருகின்றன.
இவற்றின் சேவைகள் ஒரு சட்ட வரம்புக்குள் இயங்கவேண்டிய தேவை உள்ளது.

அதனடிப்படையிலேயே,  ஒரு முழுமையான அமைப்பு வடிவுக்குள் செல்லவேண்டிய கட்டாயமும் ஏற்பட்டுள்ளது.  சேவையில் ஈடுபடும் தளங்களின் முக்கியத்துவத்தின் அப்படையில் வருமான விகிதமும் மாறுபட வாய்ப்புண்டு. 

மீள்குடியேற்றத்திற்கு பின்னர் கிளிநொச்சி மாவட்டத்தில் இயங்கும் அனைத்து தொழிற்துறைகளும் அமைப்புரீதியான கட்டமைப்பிற்குள் கொண்டுசெல்லப்பட்டுள்ளன.

ஆனால் மீள்குடியேறி மூன்றறை வருடங்களை எட்டுகின்ற நிலையிலும்; முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் மட்டும் கட்டுக்கோப்பான அமைப்பு வடிவமாக பதியப்படாதிருப்பது துரதிஷ்டவசமானது.

இன்று அமைப்பு வடிவைப்பெற்று இயங்குகின்ற ஒவ்வொரு தொழிற்சங்கங்களும் ஆரம்பத்தில் பல சவால்களையும் நெருக்கடிகளையும் எதிர்கொண்டன. ஆனால் காலப்போக்கில் அவை சீர்படுத்தப்பட்ட அமைப்பாக இயங்க ஆரம்பித்துள்ளன.

ஆகவே தொழிற்சங்கங்களின் உருவாக்கமானது குறித்த தொழிலோடு தொடர்புபட்ட அங்கத்தவர்களின் நலன்களுக்காக மட்டுமேயன்றி வேறெந்த முக்கியத்துவத்தையும் அவை கொண்டிருப்பதில்லை.

எனவே இன்று அமைந்துள்ள மிகக்குறுகிய வருமானத் தளங்களை மட்டும் கருத்தில்கொண்டு தொழிற்சங்க செயற்பாடுகளை வரையறுக்காது எதிர்காலத்தில் உருவாக்கம்பெறவுள்ள  வருமான மையங்களை அடிப்படையாகக் கொண்ட சிந்தனைகளுக்கமைவாகவும் முச்சக்கர வண்டி உரிமையாளர்களின் தொழிற்சங்க கட்மைப்புக்கள் அமையவேண்டும' என்றார்.

அத்தோடு முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கத்தை சட்டரீதியான அமைப்பாக பதிவு செய்வதில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பாக  உரிமையாளர்களின் கருத்து வெளிப்பாடுகளினூடாக தெரிந்துகொண்ட அவர், 

மீள்குடியேற்றத்தின் பின்னர் இயங்கிய சங்கங்களின் கணக்கறிக்கைகளை கண்காய்விற்கு உட்படுத்தி புதிய நிர்வாக தெரிவினை மேற்கொள்ள உதவுமாறு கேட்டுக்கொண்ட அங்கத்தவர்களின் கோரிக்கைக்கு அமைவாக அரச கணக்கு ஆய்வாரள்களின் உதவியுடன் கணக்கு ஆய்வினை மேற்கொள்வதற்கான ஏற்படுகளையும் மேற்கொண்டார்.

அத்தோடு பெரும்பான்மையான அங்கத்தவர்களின் பங்குபற்றலுடன் புதிய நிர்வாகத்தினை தெரிவுசெய்கின்ற சந்தர்ப்பத்தில் அச்சங்கத்தினை சட்டரீதியான தொழிற்சங்கப் பதிவுக்கு உட்படுத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள துணைபுரிவதாகவும் அவர் முச்சக்கரவண்டி உரிமையாளர்களுக்கு தெரிவித்தார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X