2026 மார்ச் 30, திங்கட்கிழமை

மத்திய கிழக்கு பதற்றம்: உச்சத்தில் டொலர்; யென், யூரோ சரிகிறது

Editorial   / 2026 மார்ச் 30 , பி.ப. 02:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றங்கள் மற்றும் ஈரான் - அமெரிக்கா இடையிலான தெளிவற்ற சமிக்ஞைகள் காரணமாக, சர்வதேச சந்தையில் அமெரிக்க டொலரின் மதிப்பு கடந்த 10 மாதங்களில் இல்லாத அளவிற்கு உச்சத்தைத் தொட்டுள்ளது. கடந்த ஜூலை மாதத்திற்குப் பிறகு டொலர் பதிவு செய்த மிகப்பெரிய மாதாந்த உயர்வு இதுவாகும்.
 

உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தில் ஐந்தில் ஒரு பகுதியைத் தீர்மானிக்கும் 'ஹார்முஸ் நீரிணை' (Strait of Hormuz) இப்ப மோதலால் முடங்கியுள்ளமை சந்தையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் விளைவாக 'ப்ரெண்ட்' (Brent) கச்சா எண்ணெய் விலை இந்த மாதத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவு உயர்வைக் கண்டுள்ளது. எண்ணெய் ஏற்றுமதி நாடாக இருப்பதால் அமெரிக்கா இந்த உயர்வால் பாதுகாக்கப்பட்டாலும், ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகள் பெரும் பொருளாதார பாதிப்பை எதிர்கொண்டுள்ளன.
 

ஜப்பானிய யென் மதிப்பு ஒரு டொலருக்கு எதிராக 160 எனும் அபாயகரமான அளவைத் தாண்டியுள்ளது. இது 2024 ஜூலை மாதத்திற்குப் பிறகு பதிவான மிக மோசமான வீழ்ச்சியாகும். இதனைத் தணிக்க ஜப்பானிய மத்திய வங்கி வட்டி விகிதங்களை உயர்த்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மார்ச் மாதத்தில் யூரோவின் மதிப்பு 2.5% வீழ்ச்சியடைந்துள்ளது. இருப்பினும், ஐரோப்பிய மத்திய வங்கி (ECB) வட்டி விகிதங்களை உயர்த்தக்கூடும் என்ற எதிர்பார்ப்பு யூரோவிற்கு ஓரளவுக்கு முட்டுக்கொடுத்துள்ளது.

ஈரானின் புதிய தலைவர்கள் "மிகவும் நிதானமாக" செயல்படுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ள போதிலும், பிராந்தியத்திற்கு கூடுதல் அமெரிக்கப் படைகள் வருகை தந்துள்ளன. அதேவேளை, தங்களை சிறுமைப்படுத்துவதை ஏற்க முடியாது என ஈரான் எச்சரித்துள்ளது. இந்த முரண்பட்ட தகவல்கள் போர் விரைவில் முடிவுக்கு வரும் என்ற நம்பிக்கையைக் குறைத்துள்ளன.

"தற்போதைய சூழலில் டொலர் ஒரு பாதுகாப்பான புகலிடமாக (Safe-haven) மாறியுள்ளது" என பார்க்லேஸ் (Barclays) வங்கி தெரிவித்துள்ளது. மேலும், இந்த வாரம் வெளியாகவுள்ள அமெரிக்க வேலைவாய்ப்பு தரவுகள், அமெரிக்க பெடரல் வங்கியின் அடுத்தகட்ட நகர்வுகளைத் தீர்மானிக்கும் முக்கிய காரணியாக அமையும் என பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .