2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

விளையாட்டுகளில் முன்னணியில் விளங்கும் SLIIT மாணவர்கள்

A.P.Mathan   / 2013 மே 19 , மு.ப. 05:57 - 0     - {{hitsCtrl.values.hits}}


SLIIT விளையாட்டு கழகமானது அண்மையில் மாலபே SLIIT கம்பஸ் வளாகத்தில் விருதுகள் வழங்கும் நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தது. விளையாட்டு துறையில் திறமைகளை வெளிப்படுத்திய ஆண்கள் மற்றும் பெண்களை அடையாளப்படுத்தும் நோக்கில் நடைபெற்ற இவ் வருடாந்த நிகழ்வில் விளையாட்டு நிபுணர்கள், மாணவர்கள், அதிகாரிகள் மற்றும் விசேட விருந்தினர்கள் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.
 
இந்நிகழ்வில் பட்மின்டன், டேபிள் டென்னிஸ், கேரம், கிரிக்கெட், கால்பந்தாட்டம், ரக்பி, கூடைப்பந்தாட்டம், டென்னிஸ், நீச்சல் போட்டிகள், படகோட்டம், வலைப்பந்தாட்டம், வொலிபோல், தடகளம் மற்றும் பேஸ்போல் போன்ற பதினைந்து விளையாட்டுகளில் ஈடுபடுகின்ற 1000 விளையாட்டு வீரர்களிடமிருந்து 133 மாணவர்களிற்கு விருதுகள் வழங்கப்பட்டது.
 
இந்நிகழ்வில் கயானி அனுதாரா பெரேயிராவிற்கு இரண்டு விசேட விருதுகள் வழங்கப்பட்டதுடன், 2012ஆம் ஆண்டுக்கான சிறந்த விளையாட்டு வீராங்கனை மற்றும் 2012ஆம் ஆண்டுக்கான சிறந்த அனைத்து சுற்று மாணவி (விளையாட்டு) ஆகிய விருதுகளும் வழங்கப்பட்டன. 2012ஆம் ஆண்டுக்கான சிறந்த விளையாட்டு வீரர் விருது உமேஷ் அன்தோனி பெர்னான்டோவிற்கு வழங்கப்பட்டது. இந் நிகழ்வின் பிரதம விருந்தினராக மொறட்டுவ பல்கலைக்கழத்தைச் சேர்ந்த Emeritus பேராசிரியர் வில்லி மென்டிஸ் கலந்து கொண்டிருந்தார்.
 
'நாம் எமது மாணவர்களின் விளையாட்டு சாதனைகள் குறித்து பெருமையடைகிறோம்' என SLIIT நிலையத்தின் தலைவர் எஸ்.கருணாரத்ன தெரிவித்தார். மேலும் அவர், 'நாம் மாணவர்களிற்கு தரமான கல்வியை வழங்குவது மாத்திரமன்றி, மாணவர்களின் தனிப்பட்ட திறமைகளை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகளை வழங்குகிறோம்' என்றார்.
 
இது குறித்து கருத்து தெரிவித்த SLIIT நிலையத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரியும், தலைவருமான பேராசிரியர் லலித் கமகே, 'விளையாட்டு போட்டிகளில் ஈடுபடுவதன் ஊடாக கல்வி மற்றும் அறிவுசார் வளர்ச்சிக்கு அவசியமான திறன்களின் அபிவிருத்திக்கு வழிவகுக்கும் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன். விளையாட்டின் மூலம் தன்னம்பிக்கை அதிகரிப்பதுடன், மாணவர்களின் ஆளுமைத்திறன் மூலம் சிறந்த வேலைவாய்ப்பினை பெற்றுக்கொள்வதற்கு வாய்ப்பாக அமையும். இச் சாதனைகள் மூலம் நாட்டின் விளையாட்டு அரங்கில் உயர் கல்வியை வழங்கும் முன்னணி கல்வி நிலையமாக SLIIT விளங்குகிறது என்பது உறுதியாகின்றது' என்றார்.
 
அண்மைக்காலமாக SLIIT கல்வி நிலையமானது விளையாட்டு துறையில் பல சாதனைகளை ஈட்டியுள்ளது. SLIIT கல்வி நிலையமானது அண்மையில் நடைபெற்ற சர்வதேச பட்மின்டன் பல்கலைக்கழக் சம்பியன் தொடரில் ஆண், பெண் பட்மின்டன் பட்டத்தையும், உள்ளக பல்கலைக்கழக கூடைப்பந்தாட்ட போட்டித்தொடரில் ஆண்களுக்கான சாம்பியன் பட்டம், உள்ளக பல்கலைக்கழக டென்னிஸ் சம்பியன் போட்டித்தொடரில் ஆண்களுக்கான டென்னிஸ் சம்பியன் பட்டத்தையும், 7ஆவது மலேசியா Sports Fiesta இல் நடைபெற்ற சர்வதேச பெண்கள் ஒற்றையர் பட்மின்டன் தொடரில் இலங்கை சார்பில் முதற்தடவையாக பங்குபற்றி வெண்கல கிண்ணத்தையும் வென்றது. மேலும் SLIIT மாணவர்கள் மூன்றாம் நிலைக்கல்வி நிறுவனங்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட கிரிக்கெட், ரக்பி மற்றும் கால்பந்தாட்ட போட்டித் தொடர் ஆகியவற்றில் பல விருதுகளை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .