2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை

மாற்று முதலீட்டு திட்டங்களில் முதலீட்டாளர்கள் ஆர்வம்

A.P.Mathan   / 2012 டிசெம்பர் 03 , மு.ப. 08:37 - 0     - {{hitsCtrl.values.hits}}


- பங்குச்சந்தை மற்றும் தங்கம், வெள்ளி விலை நிலைவரங்கள்


(ச.சேகர்)

நான்கு நாட்களுக்கு மட்டுமே இடம்பெற்றிருந்த கடந்த வார பங்குச்சந்தை கொடுக்கல் - வாங்கல் நடவடிக்கைகள், தொடர்ந்தும் சரிவை பதிவு செய்திருந்தன. போயா விடுமுறை தினத்தை முன்னிட்டு பங்குச்சந்தை நடவடிக்கைகள் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்றிருக்கவில்லை. வலிந்த விற்பனை நிலை சந்தையில் தொடர்கின்ற நிலையால், பங்குச்சந்தையின் பிரதான சுட்டிகள் சரிவை காண்பித்திருந்தன. குறுகில இலாபம் கருதி தற்போதைய சூழ்நிலையில் பங்குச்சந்தையில் முதலீடுகளை மேற்கொள்ள முடியாது என பங்குமுகவர்கள் கருத்து தெரிவித்திருந்தனர். தங்கத்தின் விலை, நிலையான வைப்புகள் போன்றவற்றின் மீது உறுதி செய்யப்பட்ட உயர் வருமானங்கள் வழங்கப்படுகின்றமையால், முதலீட்டாளர்களின் கவனம் பெருமளவு இந்த முதலீடுகளின் மீது அதிகளவு மேற்கொள்ளப்படுகின்றமையை அவதானிக்க முடிந்தது.    

கடந்த வெள்ளிக்கிழமை பங்குச் சந்தை நடவடிக்கைகள் நிறைவடையும் பொழுது, அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 5351.25 ஆகவும், மிலங்கா விலைச் சுட்டெண் 4868.83 ஆகவும், S&P ஸ்ரீலங்கா 20 சுட்டி 2942.02 ஆகவும் அமைந்திருந்தன.

நவம்பர் 26ஆம் திகதியுடன் ஆரம்பமான கடந்த வாரத்தின் இறுதியில் மொத்த பங்கு புரள்வு பெறுமதியாக ரூ. 2,077,642,323 அமைந்திருந்தது. கடந்த வாரம் மொத்தமாக 17,095 பங்கு கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெற்றன. இதில் உள்நாட்டு கொடுக்கல் வாங்கல்கள் 16,259 ஆகவும் வெளிநாட்டு கொடுக்கல் வாங்கல்கள் 836 ஆகவும் பதிவாகியிருந்தன.

கடந்த வார கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகளில் பிடிஎல், அபான்ஸ் ஃபைனான்சியல், டுனாமிஸ் கெப்பிடல், ஈக்குவிட்டி மற்றும் செலிங்கோ இன்சூரன்ஸ் (வாக்குரிமை) போன்றன முதல் ஐந்து சிறந்த இலாபமீட்டிய பட்டியலிடப்பட்ட கம்பனிகளாக பதிவாகியிருந்தன.

ஈபி கிறிசி, சிலோன் லெதர் (உரிமை பங்குகள்), மேர்க்.சிப்பிங், தங்கரின் மற்றும் சிலோன் பிரின்டர்ஸ் போன்ற நிறுவனங்களின் பங்குகள் அதிகளவு நஷ்டமீட்டியதாக பதிவாகியிருந்தன.



தங்கம் மற்றும் வெள்ளி விலை
கடந்த வாரம் தங்கத்தின் விலை 24 கெரட் பவுணொன்று 58,000.00 ரூபாவை அண்மித்து காணப்பட்டதாக தங்கநகை வட்டாரங்களின் மூலம் அறிய முடிந்தது. 22 கெரட் பவுணொன்று சராசரியாக 53,100 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டிருந்தது. கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இந்தவாரம் தங்கத்தின் விலையில் குறிப்பிடத்தக்களவு மாற்றங்கள் எதுவும் இடம்பெற்றிருக்கவில்லை.

வெள்ளி 1 கிலோகிராமின் சராசரி விலை 1500.00 ரூபாவாக காணப்பட்டதாக சந்தை அறிக்கைகள் தெரிவித்திருந்தன.

நாணய மாற்று விகிதம்
கடந்த வாரம் டொலருக்கு நிகரான ரூபாவின் சராசரி விற்பனை பெறுமதி 131.70 ஆக பதிவாகியிருந்தது. ஐக்கிய இராச்சிய பவுணுக்கு நிகரான சராசரி விற்பனை பெறுமதி 211.74 ஆக காணப்பட்டிருந்தது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .