2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

வருடத்தின் இறுதி வார கொடுக்கல் - வாங்கல்கள் சீராக நிறைவு

A.P.Mathan   / 2012 டிசெம்பர் 29 , மு.ப. 05:50 - 0     - {{hitsCtrl.values.hits}}


2012இல் பங்குச்சந்தை – முக்கிய நிகழ்வுகளின் சாராம்சம்

- பங்குச்சந்தை மற்றும் தங்கம், வெள்ளி விலை நிலைவரங்கள்


(ச.சேகர்)

பங்குச்சந்தை கொடுக்கல் வாங்கல்களை பொறுத்தமட்டில் பெருமளவு சரிவுகளையும், சில முக்கிய மைல்கல்களையும் பதிவுசெய்த ஆண்டாக 2012 அமைந்துள்ள நிலையில், வருடத்தின் இறுதி கொடுக்கல் வாங்கல்கள் வாரம் சீராக நிறைவடைந்திருந்தது. 2012ஆம் ஆண்டை பொறுத்தமட்டில் பங்குச்சந்தை வரலாற்றில் சவால்கள் நிறைந்ததாக அமைந்திருந்தது. இலங்கை பொருளாதாரத்தில் மேற்கொள்ளப்பட்டிருந்த மாற்றங்கள், நாணயக் கொள்கைகளில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் போன்றன வருடம் முழுவதும் பங்குச்சந்தையில் செயற்பாடுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தன.

மேலும் தேசிய த ஃபினான்ஸ் கம்பனியின் பங்குகளை தேசிய சேமிப்பு வங்கி கொள்வனவு செய்திருந்தமை முதல், ஊழியர் சேமலாப நிதியத்தின் முதல், பங்குகளில் முதலீடு செய்யப்பட்டிருந்தமை வரையில் குறிப்பிடத்தக்க ஒருசில சர்ச்சைகளும் சந்தையின் செயற்பாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தியிருந்ததுடன், கடன் பத்திரங்கள் வழங்கல், அவிவா என்டிபி நிறுவனத்தின் பங்குகள் ஏஐஏ நிறுவனத்துக்கு கைம்மாற்றப்பட்டிருந்தமை போன்ற சுமூகமான செயற்பாடுகளும் 2012இல் கொழும்பு பங்குச்சந்தையில் நடந்தேறின. அத்துடன் சர்வதேச தரப்படுத்தல்கள் அமைப்பான ஸ்டான்டர்ட் அன்ட் புவர் மூலம், கொழும்பு பங்குச்சந்தையில் புதிய சுட்டியும் அறிமுகம் செய்யப்பட்டிருந்தமையும் விசேட அம்சமாக அமைந்திருந்தது.

கடந்த ஆண்டு மொத்தமாக 21 புதிய பொது பங்கு வழங்கல்களும், அறிமுகங்களும் இடம்பெற்றிருந்தன. அதிகம் சரிவுகளையும், குறிப்பிடத்தக்க மைல் கற்களையும் நிறைந்த ஆண்டாக 2012 கொழும்பு பங்குச்சந்தை கொடுக்கல் வாங்கல்கள் வரலாற்றில் பதிவாகியுள்ளன.

கடந்த வெள்ளிக்கிழமை பங்குச் சந்தை நடவடிக்கைகள் நிறைவடையும் பொழுது, அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 5,607.13 ஆகவும், மிலங்கா விலைச் சுட்டெண் 5120.17 ஆகவும், S&P ஸ்ரீலங்கா 20 சுட்டி 3068.99 ஆகவும் அமைந்திருந்தன. 2012ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் முதல் வாரம் நிறைவில் அனைத்து பங்கு விலைச்சுட்டெண் 5930.52 ஆகவும், மிலங்க விலைச்சுட்டெண் 5083.13 ஆகவும் அமைந்திருந்தன. மேலும் வருடத்தின் முதல் வார நிறைவில் 29,752 பங்கு கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெற்றிருந்ததுடன், மொத்த புரள்வு பெறுமதியாக ரூ. 1,937,655,576 பதிவாகியிருந்தது.

“டிசெம்பர் 24ஆம் திகதியுடன் ஆரம்பமான கடந்த வாரத்தின் இறுதியில் மொத்த பங்கு புரள்வு பெறுமதியாக ரூ. 2,736,744,514 அமைந்திருந்தது. கடந்த வாரம் மொத்தமாக 27,780 பங்கு கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெற்றன. இதில் உள்நாட்டு கொடுக்கல் வாங்கல்கள் 26,379 ஆகவும் வெளிநாட்டு கொடுக்கல் வாங்கல்கள் 1,401 ஆகவும் பதிவாகியிருந்தன. வருட ஆரம்பத்துடன் ஒப்பிடுகையில் சந்தை நிலையில் முன்னேற்றம் காணப்படுவதை குறிப்பிட முடியும்.

கடந்த வார கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகளில் மிரமர், சிலோன் லெதர் (உரிமைப்பங்குகள்-6.30), கலாமசூ, சிலோன் லெதர் (உரிமைப்பங்குகள்-6.00) மற்றும் சிங்க லங்கா போன்றன முதல் ஐந்து சிறந்த இலாபமீட்டிய பட்டியலிடப்பட்ட கம்பனிகளாக பதிவாகியிருந்தன.

நமுனுகுல, ஆர்பிகோ, அபான்ஸ் ஃபினான்சியல்ஸ், சுவிஸ்டெக் மற்றும் என் டி பி கெப்பிட்டல் போன்ற நிறுவனங்களின் பங்குகள் அதிகளவு நஷ்டமீட்டியதாக பதிவாகியிருந்தன.

மலரும் 2013ஆம் ஆண்டு, பங்குச்சந்தையை சேர்ந்த அனைத்து தரப்பினருக்கும், அனைத்து முதலீட்டாளர்களும் இனிதே அமைய தமிழ்மிரரின் வணிக பிரிவு தனது நல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.



தங்கம் மற்றும் வெள்ளி விலை
கடந்த வாரம் தங்கத்தின் விலை 24 கெரட் பவுணொன்று 56,000.00 ரூபாவை அண்மித்து காணப்பட்டதாக தங்கநகை வட்டாரங்களின் மூலம் அறிய முடிந்தது. 22 கெரட் பவுணொன்று சராசரியாக 51,300 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டிருந்தது.

வெள்ளி 1 கிலோகிராமின் சராசரி விலை 1490.00 ரூபாவாக காணப்பட்டதாக சந்தை அறிக்கைகள் தெரிவித்திருந்தன.

நாணய மாற்று விகிதம்
கடந்த வாரம் டொலருக்கு நிகரான ரூபாவின் சராசரி விற்பனை பெறுமதி 128.68 ஆக பதிவாகியிருந்தது. ஐக்கிய இராச்சிய பவுணுக்கு நிகரான சராசரி விற்பனை பெறுமதி 207.69 ஆக காணப்பட்டிருந்தது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .