2026 ஏப்ரல் 13, திங்கட்கிழமை

தகவல் தொழில்நுட்ப போட்டியில் வெற்றியீட்டிய ஆசிரியர்களும் மாணவர்களும் கௌரவிப்பு

A.P.Mathan   / 2013 ஏப்ரல் 01 , பி.ப. 01:25 - 0     - {{hitsCtrl.values.hits}}


மைக்ரோசொப்ட் ஸ்ரீலங்கா நிறுவனமும் கல்வி அமைச்சின் அறிவுடைச் சமூகத்திற்கான கல்வி செயற்றிட்டமும் (EKSP) தகவல் தொழில்நுட்பத்தை இலக்காக கொண்டு இணைந்து நடத்திய  Innovative Teachers and Students 2012ஆம் ஆண்டு வெற்றியாளர்களுக்கு பரிசில்களை வழங்கும் வைபவம் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தலைமையில் அண்மையில் நடைபெற்றது.

இப்போட்டி ஊடாக சர்வதேச தரத்துக்கேற்ப இலங்கையின் ஆசிரியர்களினதும் மாணவர்களினதும் தகவல் தொழில்நுட்ப அறிவு மற்றும் படைப்பாற்றல்கள் மதிப்பீடு செய்யப்படுகின்றது. இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினராக மைக்ரோசொப்ட் தென் கிழக்கு ஆசியாவின் பொதுமுகாமையாளர் ஜெமி ஹார்பர் கலந்துகொண்டார்.

85,000 அதிகமான போட்டியாளர்கள் கலந்துகொண்ட இப்போட்டியில் மாகாண ரீதியில் வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கல்வி அமைச்சும் தனியார் துறையினரும் இணைந்து நாட்டில் நடத்தும் மிகப்பெரிய தேசிய தகவல் தொழில்நுட்ப போட்டியாக இது கருதப்படுகின்றது.

இந்த நிகழ்வில் கருத்து தெரிவித்த கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன, இப்போட்டிகளில் வெற்றியீட்டியவர்களில் பெரும்பாலானவர்கள் கிராமப்புற பாடசாலைகளை சேர்ந்த மாணவர்களேயாவர் என்றும் இலங்கை மாணவ சமுதாயத்தின் தகவல் தொழில்நுட்ப அறிவை மேம்படுத்துவதற்காக மைக்ரோசொப்ட் ஸ்ரீலங்கா நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கூறினார். 

தற்போது 35 வீதமாக இருக்கும் இலங்கையின் தகவல் தொழில்நுட்ப அறிவை 2016 ஆம் ஆண்டில் 75வீதமாக அதிகரிப்பதற்காக நாடு தழுவிய ரீதியில் அனைத்து பிரதேச செயலகங்களையும்   உள்ளடக்கி 'மஹிந்தோதய'தகவல் தொழில்நுட்ப கூடங்களை ஆயிரம் பாடசாலைகளில் ஸ்தாபிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டார்.

இதன்போது கருத்து தெரிவித்த மைக்ரோசொப்ட் ஸ்ரீலங்கா , பங்களாதேஷ் நாடுகளின் வதிவிட முகாமையாளர் சிறியான் டி சில்வா விஜயரத்ன, நாம் இரண்டு அடி முன்நோக்கி செல்லும்போது தகவல் தொழில்நுட்பம் 10 அடி முன்நோக்கி செல்கின்றது. அத்துடன் இலங்கையில் தகவல் தொழில்நுட்ப சுனாமி ஏற்பட வேண்டும். இந்த தகவல் தொழில்நுட்ப போட்டியின் வெற்றி தனி ஒருவரையோ ஒரு குழுவையோ அல்ல அனைவரையும் சேருகின்றது என கூறினார்.  

இந்த நிகழ்வில் கருத்து தெரிவித்த ஜெமி ஹார்பர் போட்டியை சிறப்பாக நடத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்தார். மைக்ரோசொப்ட் நிறுவனம் உலகம் முழுவதும் சிறுவர்களின் தகவல் தொழில்நுட்ப அறிவை வளர்த்துக்கொள்ள உதவுதாகவும் இந்நிகழ்ச்சியின் மூலம்  நாட்டின் எதிர்கால சந்ததியினருக்கே அதிக பிரயோசனம் கிடைப்பதாகவும் சுட்டிக்காட்டினார். 

கல்வி அமைச்சின் மேலதிக செயலாளரும் அறிவுடைச் சமூகத்திற்கான கல்வி செயற்றிட்டத்தின் பணிப்பாளருமான அனுர திசாநாயக்க கருத்து தெரிவிக்கையில், தெற்காசியாவின் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் இரண்டாம் நிலை கல்வி சிறந்த நிலையில் உள்ளதாகவும் எனினும் தகவல் தொழில்நுட்ப கல்வியில் இலங்கை மேலும் நீண்டதூரம் பயணிக்க வேண்டிய தேவை உள்ளதாகவும் அதுவே தற்போதைய உலகில் முன்னேறுவதற்கான வழி எனவும் குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .