.jpg)
ஹட்ச் தனது வாடிக்கையாளர்களுக்கு ரீலோட் மற்றும் கட்டணப்பட்டியல்களை செலுத்தும் நடவடிக்கையை மேலும் இலகுவாக்கும் வகையில், சிங்கர் ஸ்ரீலங்கா நிறுவனத்துடன் உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளது. இதற்கமைவாக நாடளாவிய ரீதியில் காணப்படும் 390க்கும் அதிகமான சிங்கர் காட்சியறைகளின் மூலம் ஹட்ச் வாடிக்கையாளர்கள் தமது கையடக்க தொலைபேசிக்கு ரீலோட் மற்றும் தமது கட்டணப்பட்டியல்களை செலுத்தும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திடும் நிகழ்வு அண்மையில் சிங்கர் ஸ்ரீலங்காவின் தலைமையகத்தில் இடம்பெற்றது. தேசத்தின் முன்னணி நுகர்வோர் பொருட்களை விநியோகிக்கும் சிங்கர் நிறுவனத்துடன் கைச்சாத்திட்டுள்ளதன் மூலம் ஹட்ச் தனது வாடிக்கையாளர் சேவை வலையமைப்பை மேலும் விஸ்தரித்துள்ளது.
ஹட்ச் பிற்கொடுப்பனவு வாடிக்கையாளர்கள் தமது கட்டணப்பட்டியல்களை செலுத்தக்கூடிய வசதியை இந்த உடன்படிக்கையினூடாக பெற்றுள்ளதுடன், முற்கொடுப்பனவு வாடிக்கையாளர்கள் தமது ஹட்ச் கையடக்க தொலைபேசிக்கு இலகுவாக ரீலோட்களை மேற்கொள்ள முடியும். இந்த வசதி நாடு முழுவதுமுள்ள அனைத்து சிங்கர் காட்சியறைகள், சிங்கர் மெகா விற்பனை நிலையங்கள், சிங்கர் ஹோம் விற்பனை நிலையங்கள் மற்றும் சிசில் வேர்ல்ட் விற்பனை நிலையங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
சிங்கர் ஸ்ரீலங்கா நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி அசோக பீரிஸ், ஹட்ச் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி திருகுமார் நடராசா ஆகியோர் இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திருந்தனர். இந்நிகழ்வில் சிங்கர் நிறுவனத்தின் நிதிப்பிரிவின் பணிப்பாளர் பிரியத் சல்காடோ, நிதிச் சேவைகள் பிரிவின் சிரேஷ்ட முகாமையாளர் விரேஷ் கோமஸ், சந்தைப்படுத்தல் பணிப்பாளர் நசீர் மஜீத் மற்றும் விற்பனை பிரிவின் பணிப்பாளர் குமார் சமரசிங்க ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
ஹட்ச் நிறுவனத்திலிருந்து நிதிப் பிரிவின் தலைமை அதிகாரி அஷிஷ் ஷெட்டி, விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் பிரிவின் தலைமை அதிகாரி ரம்சீனா லையி, அலையன்சஸ் மற்றும் உபகரணங்கள் பிரிவின் உதவி பொது முகாமையாளர் ரமேஷ் நோனிஸ் மற்றும் மீள் நிரப்பல் முகாமைத்துவ பிரிவின் உதவி முகாமையாளர் மெல்ரோய் தோமஸ் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்ட பின்னர் சிங்கர் ஸ்ரீலங்கா நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி அசோக பீரிஸ் கருத்து வெளியிடுகையில், 'இரு நிறுவனங்களும் இந்த உடன்படிக்கை வெற்றியளிக்கும் வகையில் அமைந்துள்ளது. எமது வாடிக்கையாளர்களுக்கு இது ஒரு மேலதிக சேவையாகும். வாடிக்கையாளர்கள் சிங்கர் விற்பனை நிலையத்தில் சொப்பிங் மேற்கொள்ளும் அதே வேளையில், ஹட்ச் பட்டியல் கட்டணங்களை செலுத்த முடிவதுடன், ரீலோட்களையும் மேற்கொள்ளலாம்' என்றார்.
ஹட்ச் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி திருகுமார் நடராசா கருத்து தெரிவிக்கையில், 'எமது வாடிக்கையாளர் வலையமைப்புக்கு எமது சேவைகளை விஸ்தரிப்பு செய்வதில் நாம் அதிகளவு கவனம் செலுத்தி வருகிறோம். எமது வாடிக்கையாளர்கள் தமது கொடுப்பனவுகளை மேற்கொள்ளவும், ரீலோட்களை மேற்கொள்ளவும், நாட்டின் நம்பிக்கையை வென்ற வர்த்தக நாமமாக திகழும் சிங்கர் ஸ்ரீலங்காவுடன் உடன்படிக்கையை மேற்கொண்டுள்ளமையையிட்டு நாம் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். எதிர்வரும் காலங்களில் நாம் மேலும் பல அனுகூலங்களை இந்த உடன்படிக்கையின் மூலமாக வாடிக்கையாளர்களுக்கு வழங்க திட்டமிட்டுள்ளோம்' என்றார்.
ஹட்ச் நிறுவனம் இலங்கையில் இரண்டாவது பெரிய 3G புரோட்பாண்ட் வலையமைப்பை தன்னகத்தே கொண்டுள்ளது. நாட்டின் 25 மாவட்டங்களையும் சென்றடையும் வகையில் தனது சேவைகளை வழங்கி வருகிறது. வாடிக்கையாளர்களுக்கு உயர் தரம் வாய்ந்த 3G வலையமைப்பு சேவைகளை வழங்கி வருவதாக கௌரவிக்கப்பட்டுள்ளது.
நவீன 3G/WiFi portable routerகள் வழங்கப்படுவதன் மூலம், வாடிக்கையாளர்கள் தற்போது தமது தொலைக்காட்சி, கணனிகள் மற்றும் கமராக்களை இலகுவாக இணைந்து முழமையான அனுகூலங்களை பெற்றுக் கொள்ளலாம்.