2021 ஜூலை 31, சனிக்கிழமை

சிறுவர் துஷ்பிரயோகத்துக்கு எதிராக கடும் சட்டங்கள் தேவை

Princiya Dixci   / 2015 ஒக்டோபர் 06 , மு.ப. 10:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டின் எதிர்காலமான சிறுவர்களைப் பாதுகாக்காவிட்டால் எதிர்காலமே பூஜ்ஜியமாகிவிடும். எனவே, சிறுவர்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கான ஆக்கபூர்வமான திட்டங்களை முன்னெடுப்போம் என ஜனநாயக மக்கள் முன்னணியின் உப- பொதுச் செயலாளரும் மேல் மாகாணசபை உறுப்பினருமான சண்.குகவரதன் தெரிவித்துள்ளார். 

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, 

நாளுக்கு நாள் அதிகரித்துவரும் சிறுவர் துஷ்பிரயோகங்களையும் கொலைகளையும் வேரோடு பிடுங்கியெறிவோம். அதற்காக ஒன்றுபடுவோம். உலக சிறுவர் தினத்தை கோலாகலமாக கொண்டாடுவதும் வாழ்த்துக்களை தெரிவிப்பதும் பரிசுகளை வழங்குவதும் மட்டும் சிறுவர்களை பாதுகாப்பதாக அமையாது. அத்தினத்தன்றே அல்லது அதற்கு அடுத்த நாளே சிறுவர்களுக்கு எதிரான பாலியல் கொடுமை, கொலை செய்திகள் வெளிவருகின்றன. புனிதமாக பூஜிக்க வேண்டிய சிறுமியர்களை பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாக கொலை செய்யும் கீழ்த்தரமான கலாசாரம் நாட்டுக்குள் இன்று தலைவிரித்தாட ஆரம்பித்துள்ளது.

இந்த ஆபத்து நாடு முழுவதும் இன்று வேகமாகப் பரவி வருகின்றது. யுத்தம் முடிந்த பின்னர் கடந்தகால ஆட்சியாளர்களால் வடக்கு, கிழக்கில் திட்டமிட்டு சமுகச் சீரழிவுகள் ஏற்படுத்தப்பட்டன. விசேடமாக வடக்கில் போதைபொருள், மதுக்கடைகள் உட்பட விபசாரம் ஆரம்பிக்கப்பட்டது. இதனால் கலாசார விழுமியங்களோடு வாழ்ந்த வடக்கு சமுகம் இன்று தறிகெட்டுப் போயுள்ளது.

இந்த வருட 6மாத காலத்துக்குள் நாட்டில் சிறுவர்களுக்கு எதிரான துஷ்பிரயோகங்கள் தொடர்பாக 700 முறைப்பாடுகள் கிடைத்திருப்பதாக ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயத்தின் வருடாந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறான குற்றச்செயல்களுக்கு மரணதண்டனை வழங்கவேண்டும் என்ற மக்களின் கோரிக்கை வலுப்பெறத் தொடங்கியது. ஆனாலும் இவ்வாறான கொடூரங்கள் குறைந்தபாடில்லை. 

அரசாங்கம் சிறுவர்களுக்கு எதிரான துஷ்பிரயோகங்களையும் சிறுவர்களை அடிமைகளாக்கி வேலைக்கமர்த்துவதையும் தடுத்து நிறுத்துவதற்கு சாத்தியமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். சிறுவர்களுக்கு எதிரான துஷ்பிரயோகங்களை தடுக்க அதில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு மரணதண்டனையை விட 'வலியை புரிய வைக்கும்' தண்டனைகள் வழங்கப்பட வேண்டும்.

பகிரங்கமாக கசையடிகள், கைகால்களை துண்டித்தல் போன்று உயிருள்ளவரை செய்த தவறை நினைத்து நினைத்து வேதனைப்படும் தண்டனைகள் நாட்டில் அறிமுகப்படுத்தப்பட வேண்டும். ஒரு மனிதன் இன்னொரு மனிதனை வேதனைப்படுத்தும் போது அதன் 'வலி' என்ன என்பதை உணரவேண்டும். அப்போது இது போன்ற கொடூரச் செயல்கள் குறைவடையும். 

எனவே, அரசாங்கம் சட்டங்களை திருத்த வேண்டும். கடுமையான சட்டங்களை அமுல்படுத்த வேண்டும். இதில் தவறில்லை. ஏனென்றால் அஹிம்சையை போதித்த புத்த பகவான் இவ்வாறு போதித்துள்ளார். 'நாட்டின் சட்டம் உயர்ந்தது, அச்சட்டத்தை எவன் ஒருவன் மீறுகிறானோ அவனுக்கு எதிராக அந்நாட்டு சட்டம் அமுல்படுத்தப்படவேண்டும்' எனவே, எதற்கும் தயங்காமல் சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .