2025 மே 16, வெள்ளிக்கிழமை

'கிணற்றுத் தவளைக் கொள்கை மாற்றப்பட்டுள்ளது'

George   / 2016 நவம்பர் 17 , மு.ப. 05:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அழகன் கனகராஜ்

"கடந்த ஆட்சியின் போது, உலக நாடுகள் இலங்கையை எதிரியாகவே பார்த்தன. அவ்வாறான சந்தேகத்தை நல்லாட்சி அரசாங்கம் மாற்றியமைத்துள்ளது. கடந்த அரசாங்க காலத்தில் கிணற்றில் இருந்த தவளைபோல காணப்பட்ட இலங்கையின் வெளிவிவகாரக் கொள்கையானது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தலைமையிலான அரசாங்கத்தால் மாற்றப்பட்டுள்ளது" என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்தார்.

2017 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்ட மீதான நான்காவது நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் பைசர் முஸ்தபா மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், "ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம், சர்வதேசத்துடன் தொடர்புகளை ஏற்படுத்தி நாட்டுக்கு சமூக பொருளாதார நன்மைகள் ஏற்படும் வகையிலான கொள்கையைக் கடைப்பிடித்து வருவதாகவும், இதனால் நாட்டை அபிவிருத்திப் பாதையில் முன்கொண்டு செல்லக்கூடியதாக இருக்கின்றது" என அமைச்சர் கூறினார்.

"வடக்கு, கிழக்கில் உள்ளவர்களின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது. எனவேதான் வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் அபிவிருத்தி மற்றும் அப்பகுதிகளில் மேற்கொள்ளப்படும் முதலீடுகளை ஊக்குவிக்கும் வகையிலும் வரவு-செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. சகல அபிவிருத்தியின் ஊடாக சகல இலங்கையர்களுக்கும் பிரதிபலன் கிடைக்கும்.

அபிவிருத்தி பற்றிப் பேசும் போது நாட்டின் சகல பகுதிகளும் ஒரேயளவான அபிவிருத்திகள் முன்னெடுக்கப்பட வேண்டும். ஒரு காலத்தில் மேல்மாகாணத்தில் அபிவிருத்திகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கு அரச தலைவர் மேல்மாகாணத்தைச் சேர்ந்தவராக இருந்தார்.

அதன் பின்னர், தெற்கிலிருந்து அரச தலைவர் தெரிவானபோது தெற்கில் அபிவிருத்திகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், மைத்திரிபால சிறிசேன, அரசாங்கத்தின் காலத்தின் சகல பகுதிகளிலும் சமமான அபிவிருத்திகள் முன்னெடுக்கப்படுகின்றன" என்றார்.

"மக்களுக்கு சிறந்த பிரதிபலன்களைப் பெற்றுக் கொடுப்பதன் ஊடாக வரிச் சுமைகளைப் படிப்படியாகக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்றும் அமைச்சர் மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .