2025 மே 16, வெள்ளிக்கிழமை

‘பிளவை எதிர்பார்த்தது எதிரணி’

Kogilavani   / 2016 நவம்பர் 17 , மு.ப. 04:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரண்டு பிரதான கட்சிகளும் இணைந்து வரவு - செலவுத் திட்டத்தைத் தயாரிக்கும்போது, தேசிய அரசாங்கத்துக்குள் பிளவு ஏற்படும் என்ற எதிரணியினரின் எதிர்பார்ப்பு தவிடுபொடியாகியிருப்பதாக, வெகுஜன ஊடக மற்றும் நாடாளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர் கயந்த கருணாதிலக, சபையில் தெரிவித்தார்.  

தேசிய அரசாங்கம் 2020ஆம் ஆண்டு வரவு - செலவுத் திட்டத்தை சமர்ப்பித்து அதனையும் வெற்றிகரமாக நிறைவேற்றிய வெற்றிச் செய்தியுடனேயே அடுத்த பொதுத் தேர்தலுக்கு முகங்கொடுக்கும் என்றும் அவர் கூறினார்.  

வரவு - செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான நான்காவது நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இதனைக் கூறினார். வரலாற்றில் முதல் தடவையாக இரண்டு பிரதான கட்சிகள் இணைந்து உருவாக்கிய தேசிய அரசாங்கத்தின் இரண்டாவது வரவு - செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.   

ஒன்றிணைந்த எதிர்க்கட்சி எனக் கூறிக்கொள்ளும் சிறியதொரு குழு, மக்கள் மத்தியில் தமது ஆதரவை தக்கவைத்துக் கொள்வதற்காக வரவு - செலவுத் திட்டத்தை மோசமாக விமர்ச்சித்து வருகிறது. நல்லாட்சி அரசாங்கம் வரவு - செலவுத் திட்டம் சமர்ப்பிக்க முன்னர் புதிய அரசாங்கத்தை அமைத்துக் காட்டுவோம் என்றும் அவர்கள் சவால் விடுத்திருந்தனர்.   

வரவு - செலவுத் திட்டம் தயாரிக்கப்படும்போது தேசிய அரசாங்கத்துக்குள் பிளவு ஏற்படும் என அவர்கள் எதிர்பார்த்திருந்தனர். எனினும் இரு கட்சிகளும் நேரடியாக இணைந்து ஒரு நிலைப்பாட்டில் இருந்து கொண்டு இதனைத் தயாரித்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.   

கடந்த காலங்களில் வரவு - செலவுத் திட்டம் சபையில் சமர்ப்பிக்கப்பட்டால் மக்கள் ஆர்வத்துடன் விவாதங்களை வானொலிகள் மூலம் செவிமடுப்பார்கள். எனினும், இந்த நிலைமையை, கடந்த அரசாங்கம் முழுமையாக இல்லாமல் செய்துவிட்டது. மஹிந்த ராஜபக்‌ஷ நிர்வாகத்தில் முன்வைக்கப்பட்ட வரவு-செலவுத்திட்டத்தில் 63 சதவீதம் ராஜபக்‌ஷ குடும்பத்தின் சுகபோகத்துக்கான ஒதுக்கீடுகளாகக் காணப்பட்டமையே மக்கள் வெறுப்பதற்குக் காரணமாகும்.  

டீசல், பெற்றோல், சமையல் எரிவாயு, அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைத்த, 19ஆவது திருத்தச்சட்டத்தை நிறைவேற்றிய, சுயாதீன ஆணைக்குழுக்களை நியமித்த அரசாங்கத்தின் இரண்டாவது வரவு-செலவுத்திட்டத்தை மக்கள் பெரும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர்.   

அரசியல் வாதிகளுக்கும், இராஜதந்திரிகளுக்குமிடையில் பாரிய வித்தியாசமொன்று உள்ளது. அரசியல்வாதிகள் தேர்தலில் எவ்வாறு வெல்வது என்பது பற்றியே சிந்திப்பார்கள். ஆனால் இராஜதந்திரிகள் அடுத்த பரம்பரையை எப்படி தயார் படுத்துவது என்பது பற்றியே சிந்திப்பார்கள். எனவே அரசாங்கம் இராஜதந்திர ரீதியில் சிந்தித்து எதிர்கால பரம்பரையை தயார்ப்படுத்தும் வகையில் வரவு - செலவுத் திட்டத்தை தயாரித்துள்ளது.  

அரசாங்க வருமானத்தை அதிகரிப்பதற்கான திட்டங்கள் முன்வைக்கப்பட்டுள்ளபோதும், நலன்புரிகளுக்கான ஒதுக்கீடுகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன. அங்கவீனமடைந்த படையினருக்கான கொடுப்பனவுகளுக்காக 34 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த வருடத்தைவிட இது 10 பில்லியன்  ரூபாய் அதிகமாகும். இவ்வாறான நிலையில் அங்கவீனமடைந்த படைவீரர்களை முன்நிறுத்தி தமது அரசியல் தேவைகைள நிறைவேற்ற சிலர் முயற்சிக்கின்றனர் எனவும் அமைச்சர் குற்றஞ்சாட்டினார்.  

மஹிந்த ராஜபக்‌ஷ நிர்வாகம் வெள்ளை யானை வேலைத்திட்டங்கள் பலவற்றை முன்னெடுத்திருந்தது. தாவது விமானம் தரையிறங்காத விமான நிலையம், கப்பல்கள் வராத துறைமுகம், மாநாடுகள் நடத்தப்படாத மாநாட்டு மண்டபம் என்பன ஹம்பாந்தோட்டையில் அமைக்கப்பட்டுள்ளன. எனினும், எமது அரசாங்கம் இவற்றை திறமையாக முன்னெடுத்துச் செல்வதற்கான யோசனைகளை முன்மொழிந்துள்ளது.   

கல்வி மற்றும் உயர்கல்விக்கான ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பாடசாலை மாணவர்களுக்கு 2 இலட்சம் காப்புறுதி வழங்கும் திட்டமொன்று முன்மொழியப்பட்டுள்ளது. இது தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூட உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை. அவ்வாறு உள்ளடக்கியிருந்தால் அரசாங்கத்துக்கு வரும் எம்பிக்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்திருக்கும் என்றார்.  

அரசாங்க சேவையில் உள்ளவர்கள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தனது உரையில் விமர்சித்திருந்தார். தேர்தலில் அரசாங்க அதிகாரிகளுக்கு வழங்குவதாக உறுதியளித்த 2,500 ரூபாயைக்கூட அவர் வழங்கவில்லை. ஆனால் நாம் 10,000 ரூபாயை அதிகரித்துள்ளோம் என்றார்.  

வரவு - செலவுத் திட்டத்தில் ஊடகவியலாளர்களுக்கு வட்டியில்லாக் கடன்திட்டமொன்றுக்கு அரசாங்கம் பணம் ஒதுக்கியுள்ளது. தகவலறியும் சட்டத்தை எதிர்வரும் பெப்ரவரி மாதத்திலிருந்து நடமுறைப்படுத்தப்படும் என்றும் அமைச்சர் மேலும் கூறினார்.  

இந்த அரசாங்கமானது. 2018, 2019 மற்றும் 2020ஆம் ஆண்டுகளுக்கான வரவு-செலவுத்திட்டங்களை வெற்றிகரமாக சமர்ப்பித்துவிட்டே அடுத்த பொதுத் தேர்தலுக்கு முகங்கொடுப்போம் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .