2025 மே 16, வெள்ளிக்கிழமை

அவைக்கு வந்த நாமல் எம்.பி பவ்வியமாய் செவிமடுத்தார்

Kogilavani   / 2016 ஜூலை 21 , மு.ப. 03:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகலிங்கம் கோபிகிருஷ்ணா

நிதி மோசடிக் குற்றச்சாட்டுகள் காரணமாகக் கைது செய்யப்பட்டு, கடந்த திங்கட்கிழமையன்று பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, நேற்றுப் புதன்கிழமை இடம்பெற்ற சபை அமர்வுகளில் கலந்துகொண்டார்.

வெள்ளை நிற ஆடையுடன், ராஜபக்ஷ குடும்பத்துக்கான அடையாளமான சிவப்புச் சால்வையையும் அணிந்திருந்த அவர், ஏதோவொரு பானத்தை அருந்தியவாறு, அவையில் அமர்ந்திருந்தார்.

அவர் வருகைதந்த பின்னர், அவரை நோக்கித் தேடிச் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவருடன் நீண்டநேரமாக உரையாடிக் கொண்டிருந்தார். சுமார் 10 நிமிடங்களுக்கு மேல் நீடித்த இந்தக் கலந்துரையாடலின் ஆரம்பக் கட்டத்தில், கைகளை ஆட்டி ஆட்டி, கெஹெலிய எம்.பி ஏதோ சொல்லிக் கொண்டிருக்க, அதைச் செவிமடுத்துக் கொண்டிருந்தார் நாமல் எம்.பி. பின்னதாக, இருவரும் கருத்துகளை பரிமாறிக் கொண்டனர்.

அதன் பின்னர், ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ எம்.பி உள்ளிட்ட உறுப்பினர்கள், ஒன்றாக அமர்ந்து கதைத்துக் கொண்டிருந்த இடத்தை நோக்கி நாமல் எம்.பி சென்று, அவர்களுடன் நின்றார். அப்போது இருக்கையில் அமர்ந்திருந்த ஜோன்ஸ்டன் எம்.பி, தனது இருக்கையை அவருக்கு வழங்கிவிட்டு, அவருக்கு அடுத்த இருக்கையில் அமர்ந்து கொண்டார்.

அந்தக் குழுவிலும் தொடர்ச்சியாக உரையாடல்கள் இடம்பெற்றன. ஜோன்ஸ்டன் எம்.பி அமர்ந்திருந்த இருக்கைகுரியவரான விமல் வீரவன்ச எம்.பி, அவைக்குள் மீண்டும் வர, அவருக்கான இடத்தை வழங்கிவிட்டு, நின்றுகொண்டிருந்தார் ஜோன்ஸ்டன் எம்.பி.

பின்னரும் கூட, தனது இருக்கையில் அமராது, அவையில் அங்குமிங்குமாகச் சென்று உரையாடிக் கொண்டிருந்த நாமல் எம்.பி, விளையாட்டுச் சட்டம் தொடர்பான விவாதம் ஆரம்பிக்கப்பட்ட சற்றுநேரத்தில் அவையை விட்டு வெளியேறிவிட்டார்.

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, அவையில் நேற்றுப் புதன்கிழமை சிறப்புரையொன்றை ஆற்றுவார் என்று ஒன்றிணைந்த எதிரணியினர் தெரிவித்திருந்தமை குறிப்பிப்பிடத்தக்கதாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .