2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

ரூ.91 இலட்சம் சிகரெட்டுகள் பறிமுதல்: ஒருவர் கைது

Mayu   / 2026 ஏப்ரல் 19 , பி.ப. 01:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

இராமநாதபுரம், புதுமடம் கடற்கரை வழியாக இலங்கைக்குக் கடத்துவதற்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 91 இலட்சம் ரூபா பெறுமதியான 7 இலட்சம் வெளிநாட்டு சிகரெட்டுகளை மெரைன் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர். இக்கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவரைக் கைது செய்துள்ள பொலிஸார், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட வாகனத்தையும் கைப்பற்றியுள்ளனர்.

இராமநாதபுரம் மாவட்டம், உச்சிப்புளி அடுத்துள்ள புதுமடம் கடற்கரை வழியாக நேற்று (18) அதிகாலை ஒரு மணி அளவில், படகு மூலம் இலங்கைக்குக் கடத்தல் பொருட்கள் கொண்டு செல்லப்படவுள்ளதாகப் பொலிஸாருக்குத் இரகசியத் தகவல் கிடைத்தது. இதனடிப்படையில், புதுமடம் மெரைன் பொலிஸாரும் கீழக்கரை சுங்கத்துறை அதிகாரிகளும் இணைந்து கடற்கரைப் பகுதியில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, கடற்கரையோரம் நின்றிருந்த சரக்கு வாகனம் ஒன்றிலிருந்து மூட்டைகளை இறக்கிப் பதுக்கிக் கொண்டிருந்த கும்பலை அதிகாரிகள் சுற்றி வளைத்தனர். அதிகாரிகளைக் கண்டதும் அங்கிருந்த சிலர் தப்பியோடிய நிலையில், ஒருவரை மட்டும் பொலிஸார் மடக்கிப் பிடித்தனர்.

அங்கிருந்த 35 சாக்கு மூட்டைகளைச் சோதனை செய்தபோது, அவற்றில் 7 இலட்சம் வெளிநாட்டு சிகரெட்டுகள் இருப்பது கண்டறியப்பட்டது. இவற்றின் மொத்த மதிப்பு இந்திய மதிப்பில் சுமார் 91 இலட்சம் ரூபா எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசாரணையில், இந்தச் சிகரெட்டுகள் அனைத்தும் இன்று அதிகாலை படகு மூலம் கடல் வழியாக இலங்கைக்குக் கடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது தெரியவந்தது. இதனையடுத்து, புதுமடம் மேற்குத் தெருப் பகுதியைச் சேர்ந்த முருகன் (38) என்பவரைக் கைது செய்த பொலிஸார், பறிமுதல் செய்யப்பட்ட சிகரெட்டுகள் மற்றும் வாகனத்தைச் சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

கைது செய்யப்பட்ட நபரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மெரைன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எஸ்.ஆர்.லெம்பேட்

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .