Suganthini Ratnam / 2016 நவம்பர் 02 , மு.ப. 07:55 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா
அம்பாறை, அட்டாளைச்சேனைப் பிரதேச செயலாளர் பிரிவில் பெரும்பான்மையினச் சமூகத்தைச் சேர்ந்த விவசாயிகள் சிலரால் அபகரிக்கப்பட்டதாகக் கூறப்படும் ஒலுவில் பொன்னன்வெளிக் காணிக்கண்டம் மற்றும் அஸ்ரப் நகர் காசான்கேணி காணிப் பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுத்தர வேண்டும் என பொன்னன்வெளிக்கண்ட விவசாயிகள் சங்கமும் அஸ்ரப் நகர் காசான்கேணி உரிமையாளர்கள் சங்கமும் வேண்டுகோள் விடுத்துள்ளன.
இது தொடர்பான மகஜரை அட்டாளைச்சேனை உதவிப் பிரதேச செயலாளர் ரீ.ஜே.அதிசயராஜிடம் இன்று புதன்கிழமை அச்சங்கங்கள் இணைந்து கையளித்துள்ளன.
குறித்த மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 'பொன்னன்வெளிக்கண்ட காணிப் பிரச்சினைக்குத் தீர்வு பெற்றுத்தருமாறு கோரி கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டபோதும், அதற்கான தீர்வு இன்னும் கிடைக்கவில்லை.
இதேவேளை, அஸ்ரப் நகர் காசான்கேணிப் பிரதேசத்தில் 69 குடும்பங்களுக்குச் சொந்தமான 150 ஏக்கர் காணியை இராணுவத்தினர்; பிடித்து முகாம் அமைத்துள்ளனர். இக்காணிகளை மீட்டுத்தர வேண்டும் அல்லது அதற்கான நட்டஈட்டைப் பெற்றுத்தர வேண்டும்.
ஆகவே, பொன்னன்வெளிக் கண்ட காணிகள் மற்றும் அஸ்ரப் நகர் காசான்கேணிக் காணிகளை மீளப் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் அல்லது அக்காணிகளுக்கு தற்போதைய பெறுமதியில் நட்டஈடு வழங்கப்பட வேண்டும்.
அம்பாறை மாவட்டத்தில் சிறுபான்மையினச் சமூகங்களின் பல ஏக்கர் காணிகள் அபகரிக்கப்பட்டுள்ளன. இதற்காக அனைத்து விவசாயிகளும் ஒன்றிணைந்து காணி உரிமைக்கான அம்பாறை மாவட்டச் செயலணியை உருவாக்கி எமது போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளோம்.
எங்களின் காணிப்பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும்வரை தளராது பாடுபடத் தயாராக உள்ளோம்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்படி காணிப்பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்கும் வகையில் விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் என அட்டாளைச்சேனை உதவிப் பிரதேச செயலாளர் இதன்போது தெரிவித்தார்.
1 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
5 hours ago
5 hours ago