2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

வடக்கு கிழக்கு இணைவு என்பது நடக்க முடியாத காரியமாகும்: எஸ்.நிஜாமுதீன்

Kogilavani   / 2012 செப்டெம்பர் 04 , மு.ப. 09:46 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.எம்.எம். றம்ஸான்)

'விடுதலை போராட்டத்தினால் தமிழ் மக்களால் பெற முடியாமல் போனதை நடைபெறவிருக்கும் கிழக்கு மாகாணசபை தேர்தல் மூலம் பெற்றுக் கொள்ளப் போகின்றோம் என்று தமிழ் கூட்டமைப்பு கூறி வருகின்ற நிலைமையில்,  அதனை செய்து கொடுப்பதற்கு மரம் தனியாக நின்று இந்த தேர்தலில் போராடுகின்றது' என கிழக்கு மாகாணசபை தேர்தல் தொடர்பாக தனது இல்லத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மகாநாட்டில் உரையாற்றிய முன்னாள் பிரதியமைச்சரும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு வேட்பாளருமான எஸ். நிஜாமுதீன் தெரிவித்தார். வடக்கு கிழக்கு இணைவு என்பது இன்று ஒரு நடக்க முடியாத காரியமாகும் எனவும் அவர் கூறினார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

'ஒவ்வொருவரும் தமது கருத்துக்களை தெரிவிப்பதற்கு உகந்த சூழல் உருவாக்கப்பட வேண்டும். எந்தவொரு விடயத்தையும் தெளிவாக கூறுவதற்கு சரியான சந்தர்ப்பம் வழங்கப்படல் வேண்டும். தேர்தல் எனும் போது அந்த தேர்தலிலே ஜனநாயக உரிமைகள் மறுக்கப்படுகின்றமை அரசாங்கத்திற்கு சார்பானவர்களிடமும் அரசுக்கு எதிரானவர்களிடமும் கூடுதலாக இடம்பெற்று வருகின்றன. இது தற்போது உச்ச கட்டத்தை அடைந்திருப்பது போல் தெரிகின்றது. இது குறைந்து போக வேண்டுமேயொழிய அதிகரித்துச் செல்லக் கூடாது.

இந்த கலாசாரத்தை சீரான முறையில் பேணுவதற்கு பத்திரிகையாளர்கள் தமது முழுப்பங்களிப்பையும் வழங்க வேண்டும்.
கிழக்கு மாகாண அரசியலிலே வடக்கு கிழக்கு இணைவு என்பது இன்று ஒரு நடக்க முடியாத காரியமாகும். ஒரு காலத்தில் மறைந்த தலைவர் அஷ்ரப் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை ஆரம்பிக்கின்ற போது இருந்த சூழலல்ல இப்போது இருப்பது. அன்று வட கிழக்கு பிராந்தியத்திலே முஸ்லிம்களுடைய அரசியல் காலகட்டம் கேள்விக்குறியாக இருந்தது. ஐக்கிய தேசியக்கட்சியிலும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியிலும் இலங்கை தமிழரசுக் கட்சியிலும் முஸ்லிம்கள் இருந்தார்கள். இவர்கள் அனைவரையும் ஒன்று திரட்டுவதற்கு மறைந்த தலைவர் கடுமையான பிராயசித்தத்தை மேற்கொண்டிருந்தார்.

அன்று ஒன்று திரட்டப்பட்ட அரசியல் சக்தி 30 வருடமாக இந்த நாட்டில் இடம்பெற்ற கொடிய யுத்த காலத்தில் மிகவும் விரைவாக வளர்ந்தது. இதற்கு இன ரீதியான உணர்வுகளும் உணர்சிகளும் காரணமாக அமைந்திருந்தன. 30 வருடகால யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னர் மீண்டும் முஸ்லிம்களின் அரசியல் பலவீனப்பட்டு போகின்ற நிலைமை காணப்படுகின்றது. முஸ்லிம் தலைமைகளுக்கிடையில் எதிர்கால அரசியில் சம்பந்தமாக தெளிவான சிந்தனையும் விளக்கமும் இல்லாமையேயாகும்.

அந்த தெளிவான சிந்தனையை ஏற்படுத்துவதற்கு எவரும் எந்த விதமான முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை. ஆனால் சாதாரண மக்கள் தேர்தல் வரும் போது மட்டும் எவரிடமிருந்து என்ன வசதிகளைப் பெற்றுக் கொள்,ள முடியுமோ அதற்காக வாக்குப் போடுகின்ற நிலமையொன்று காணப்படுகின்றது. இந்த விடயம் கிழக்கு மாகாணத்தின் தலைவிதியினை மாற்றப் போகின்றது என்பதை மக்கள் இன்னும் அறியாதவர்களாகவே இருக்கின்றனர்.

வடக்கு மாகாணமும் கிழக்கு மாகாணமும் மீண்டும் இணையக்கூடிய நிலைமையொன்று உருவாகுமேயானால், முஸ்லிம் சமூகத்தினுடைய எதிர்கால அரசியல் நடவடிக்கைகளுக்கு மிகவும் பாரிய பின்னடைவு ஏற்படும்.

வடகிழக்கு இணைப்புத்தான் தமிழ் மக்களுடைய அபிலாசை என்றால் தென்கிழக்கு அலகு என்ற ஒன்று முஸ்லிம்களுக்காக  வரையறுக்கப்பட வேண்டும் என்று மறைந்த தலைவர் அஷ்ரப் கூறியிருந்தார். அந்த கொள்கை அப்போதிருந்த சூழ்நிலையில் யதார்த்தமாக தெரிந்த போதும்  இன்று வடக்கும் கிழக்கும் பிரிந்திருக்கின்ற சூழ்நிலையில் தென்கிழக்கு அலகு என்கின்ற ஒன்றை தலைவர் அஷ்ரப் கூட முன்வைத்திருக்க மாட்டார்.

வடக்கும் கிழக்கும் பிரிந்திருக்கின்ற இந்த காலகட்டத்தில் அது நிரந்தரமான பிரிவாக இருக்கின்ற போது மட்டுமே முஸ்லிம்களுடைய அரசியல் இருப்பு 42 வீதமாக அமையும். வட கிழக்கு இணைகின்ற கால கட்டத்தில் 17வீதமாக குறைவடையலாம்.

இது சமூக, அரசியல் மற்றும் கலாசார ரீதியாக மிகவும் பாரதூரமான பாதிப்புகளை ஏற்படுத்தி பாதகமான சூழ்நிலையை உருவாக்கும். இவ்விடயமாக முஸ்லிம் சமூகத்திற்கு எவரும் தெளிவாக கூறவில்லை. அதனை கூறுவதற்கு அரசியல் தலைமைகள் பயப்படுகின்றன. ஏனென்றால் தமது அரசியல் கட்சி மீது மக்கள் வாக்களிப்பதற்கான அந்த நிலைமையை குறைத்து விடுமோ என்று பயப்படுகின்றார்கள்.

நிச்சயமாக வடக்கையும் கிழக்கையும் மீண்டும் இணைக்க வேண்டும் என்ற கோட்பாட்டிலே தமிழ்   கூட்டமைப்பு இன்று அரசியல் நடாத்தி வருகின்றது.

இந்த நாட்டில் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டுவருவதற்கும் முஸ்லிம் சமூகம் அரசியில் ரீதியாக எதிர்காலத்தில் சிறந்த விமோசனத்தை பெறுவதற்கும் பிரிந்து நிற்கும் சகல முஸ்லிம் கட்சிகளும் ஒரே குடையின் கீழ் ஒற்றுமைபடாதவரை முஸ்லிம்கள் பிளவுபட்டு  சின்னாபின்னாபடுவதனை எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது.

அரசாங்கத்தோடு சேர்ந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தேசிய காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகளும் சேர்ந்து நடைபெறப்போகும் கிழக்கு மாகாண சபை தேர்தலில் குதித்திருக்குமேயானால் முஸ்லிம் ஒருவரை முதலமைச்சராக பெறுவததென்பது மிக இலகுவாக நடந்திருக்கும். அத்தோடு கிழக்கு மாகாணம் வடக்கோடு இணைந்து விடுமோ என்ற பயமும் நீங்கியிருக்கும்.

இப்போது வித்தியாசமான அரசியல் சூழ்நிலையொன்று இலங்கையில் தோன்றியுள்ளது. அது சர்வதேச உலகத்தினுடைய அரசியல் அழுத்தங்கள். இந்த விடயத்திலே இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து எந்தவொரு நிலைப்பாட்டிக்கு வரப்போகின்றது என்பதிலே சரியானதொரு தெளிவு இன்னமும் இல்லை. இருந்த போதிலும் வடகிழக்கு இணைப்பிற்கு இவர்கள் ஆதரவளிப்பார்கள் என்றதொரு நிலைமை இருக்கின்றது. இதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இந்த தேர்தலில் தனியாக போட்டியிடுவதென்பது சாதகமான ஒரு சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. இந்த மூன்று முஸ்லிம் கட்சிகளும் ஒன்றாக இணைந்து இந்த தேர்தலில் குதித்திருந்தால் தடுத்திருக்கலாம். ஆனால் அதனை இப்போது செய்ய முடியாத ஒரு நிலை உருவாகியுள்ளது.

எதிர்காலத்தில் தமிழர் கூட்டணியும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசும் இணைந்து ஆட்சியமைக்கக்கூடிய சூழ்நிலையொன்று ஏற்பட்டால் முஸ்லிம் முதலமைச்சர் ஒருவரை வழங்குவதற்கு தமிழர் கூட்டணி முன்வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஸ்ரீங்கா முஸ்லிம் காங்கிரஸ் கேட்பதையெல்லாம் கொடுப்பதற்கு தமிழர் கூட்டணி தயாராக இருக்கின்றது என்றால் கிழக்கு மாகாணம் தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் சொந்தமானது என்று சர்வதேசத்திற்கு காண்பிப்பதுடன் முஸ்லிம்களை பின்னர் பார்த்துக் கொள்ளலாம் என்ற ஒரு நிலைப்பாடாகும். இந்த நிலைப்பாட்டிற்கு கிழக்கு முஸ்லிம்கள் ஆதரவு கொடுக்க முடியுமா என்பதே எனது கருத்தாகும்.

இவை தவிர ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்தில் இருந்து கொண்டுதான் பள்ளிவாசல் மற்றும் இனப்பிரச்சினை தொடர்பாக தொண்டை கிழிய கத்தி வருகின்றனர். அதே நேரத்தில் மன்னாரிலுள்ள முஸ்லிம் மீனவர்களுக்கு எற்பட்ட பிரச்சினையினை இட்டு அமைச்சர் ரிஸாட் பதியுதீன் பேசியபோது அவருக்கு எதிரானவர்கள் அமைச்சருக்கு எதிராக பல்வேறுபட்ட நெருக்கடிகளை கொடுத்துவருவது எல்லோருக்கும் தெரிந்த விடயமாகும். இந்த விடயத்தில் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் இன்னும் மௌனம் சாதிப்பது அவர்களின் அரசியல் இரட்டை வேடத்தை காட்டுகின்றது' என்றார்.


  Comments - 0

  • meenavan Wednesday, 05 September 2012 09:05 AM

    வடக்கு ,கிழக்கு இணைவு என்பது எவ்வாறு நடக்க முடியாது என்று உறுதியாக சொல்கிறீர்களோ அதே போன்றுதான் உங்களுக்கு மாகாண சபை உறுப்பினர் பதவி கிடைப்பதென்பதும் என்பதை நினைவில் கொள்ளவும்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X