2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

தமிழர்களிடம் உருப்படியாக இருப்பது கிழக்கு மாகாணசபை மட்டும்தான்: சி.சந்திரகாந்தன்

Menaka Mookandi   / 2012 செப்டெம்பர் 05 , மு.ப. 05:29 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஹனீக் அஹமட்)


'தமிழ் மக்களுக்கு இன்று உருப்படியாக கையில் இருப்பது கிழக்கு மாகாண சபைதான். இதனை சரியாகப் பயன்படுத்தாமல் அழிப்பதற்கு சில கூட்டம் வந்து – ஆணை கேட்கின்றனர். இவர்கள் வெறும் வெற்றுப் பேச்சாளர்கள். இவர்களுடன் இருந்தால் எதுவும் ஆகப்போவதில்லை என்பதனாலேயே கிழக்கு மாகாணசபையைப் பொறுப்பெடுத்தோம். நாங்கள்தான் இந்த மாகாண சபையினை ஆட்சி செய்து காட்டினோம். முன்பு பாரமெடுத்தவர்கள் 18 மாதங்களுடன் ஓடி விட்டார்கள்' என்று கிழக்கு மாகாணசபை தேர்தலில் ஐ.ம.சு.முன்னணி சார்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடுபவரும், முன்னாள் முதலமைச்சருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தெரிவித்தார்.

துறைநீலாவணையில் நேற்று செவ்வாய்கிழமை இரவு – ஐ.ம.சு.முன்னணியில் போட்டியிடும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர்களை ஆதரித்து இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே சந்திரகாந்தன் மேற்கண்டவாறு கூறினார். அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்ளூ

'உணர்சிவசப்படுத்தும் பேச்சுகளால், மக்களை ஏமாற்றி வாக்குகளை கபளீகரம் செய்யும் கூட்டங்களை எதிர்வருகின்ற கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் ஓரங்கட்ட வேண்டும். பாதிக்கப்பட்ட பிரதேசங்களை கடந்த காலங்களில் பல வழிகளிலும் அபிவிருத்தி செய்தோம். இதைச் செய்ய மற்றவர்களால் முடியாது. எங்களால் மாத்திரமே முடிந்தது. இதற்கான பலத்தினை கடவுள் தந்திருக்கின்றார்.

எமது பொருளாதாரம், கல்வி மற்றும் வாழ்வாதாரங்களில் முன்னேற்றுவதற்கு சிந்தித்து செயற்பட வேண்டும். அதற்காக வெற்றிலைச் சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும். தமிழ் தேசியக் கூட்டமைப்பு இதுவரைக்கும் உங்களுக்கு எதையாவது பெற்றுத் தந்திருந்தால், அவர்களுக்கு நீங்கள் வாக்களிக்கலாம். ஆனால் - எதுவும் செய்யவில்லை. தமிழ் மக்களை உணர்ச்சிவசப்படுத்தும் பேச்சுக்களால் ஏமாற்றுகின்றனர். எவ்விதமான அபிவிருத்திகளையும் அவர்கள் செய்ய மாட்டார்கள். நான் முதலமைச்சராக வந்த பிறகு 12 பாடசாலைகளை புதிதாக ஆரம்பித்தேன்.

தமிழ் மக்கள் பல்வேறு வகையான இன்னல்களால் பாதிக்கப்பட்டபோது எட்டியும் பார்க்காத தமிழ் தேசியக் கூட்டமைப்பினர், இந்தக் கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் பிள்ளையானை வீழ்த்த வேண்டும் என்று பேசுகின்றனர். தாங்கள் முதலமைச்சராக வரவேண்டும் என்கிற எண்ணம் அவர்களுக்கு இல்லை. தமிழர்களின் வாக்குகளைச் சிதறடிக்கப் போகின்றார்கள்.

இலங்கையின் நீண்ட அரசியல் வரலாற்றில் யாழ் மேலாதிக்கவாதிகளுக்கு எதிராக எழுந்து நின்று சவால்விடும் தலைமை எங்களிடமே இருக்கின்றது. இதனால்தான், யார் முதலமைச்சராக வந்தாலும் பரவாயில்லை பிள்ளையான் முதலைமைச்சராக வரக்கூடாது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் நயவஞ்சகமாக எண்ணுகின்றனர். என்னையும், எனது உறுப்பினர்களையும் வீழ்த்துவது அவர்களின் இலக்காக இருக்கிறது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் - ஹக்கீமுக்கு தனியலகு கொடுக்கப் போவதாகக் கூறி வருகின்றார். தனியலகு என்றால் என்ன? அவர்களுக்கு நிலத்தினைப் பிரித்துக் கொடுப்பது. பிரித்துக் கொடுத்த பகுதியில் அவரகளின் ஆட்சியமைக்கப்படும். ஏனைய பகுதியிலுள்ள எங்களை வடக்குடன் இணைக்க வேண்டும் என்று கூறுகின்றார்.

வடக்கில் உள்ளவர்கள் இன்னுமின்னும் எம்மை ஆள வேண்டுமா? கிழக்கில் நாம் ஆட்சி நடத்தவில்லையா? மூவினமும் ஒற்றுமையாக ஆளவில்லையா? கிழக்கு மாகாணசபையினை நான் பொறுப்பெடுத்தபோது - பிள்ளையான் இதனை நடத்துவாரா? கிழக்கு மாகாணசபையில் என்ன அதிகாரம் உள்ளது? மட்டக்களப்பான் தலைமைத்துவத்தை ஏற்று நடத்திய சரித்திரங்கள் உள்ளனவா? என்றெல்லாம் பேசினார்கள். இவற்றினையெல்லாம் தாண்டி – கிழக்கு மாகாண சபையினை நாம் திறன்பட நடத்தினோம்.

தமிழ் மக்களுக்கு இன்று உருப்படியாக கையில் இருப்பது இந்த மாகாண சபைதான். இதனை சரியாகப் பயன்படுத்தாமல் அழிப்பதற்கு சில கூட்டம் வந்து – ஆணை கேட்கின்றனர். இவர்கள் வெறும் வெற்றுப் பேச்சாளர்கள். இவர்களுடன் இருந்தால் எதுவும் ஆகப்போவதில்லை என்பதனாலேயே கிழக்கு மாகாணசபையைப் பொறுப்பெடுத்தோம். நாங்கள்தான் இந்த மாகாண சபையினை ஆட்சி செய்து காட்டினோம். முன்பு பாரமெடுத்தவர்கள் 18 மாதங்களுடன் ஓடி விட்டார்கள்.

கிழக்கு மாகாணசபையினை மீண்டும் ஆட்சி செய்யவும், அதனூடாக அபிவிருத்திகளை மேற்கொள்ளவும் இந்தத் தேர்தலில் நாம் போட்டியிடுகின்றோம்.

அறிவுபூர்வமாக சிந்தியுங்கள். தமிழரசுக் கட்சி உருவாக்கப்பட்டதிலிருந்து நாம் வாக்களித்து வந்தோம். அதனால் நீங்கள் அடைந்த நன்மைகள்தான் என்ன? அந்தத் தலைவர்கள் எடுத்த வட்டுக்கோட்டைத் தீர்மானத்தில் தமிழீழப் பிரகடனம் செய்தார்கள். இதனால் என்ன பயன் கிடைத்தது? நமது இளைஞர்களையும் யுவதிகஇயும் இழந்துபோனமை தவிர வேறு எதுவும் எஞ்சவில்லை' என்றார்.

இந்தப் பிரசாரக் கூட்டத்தில் வேட்பாளர் வி. ஸ்ரீதரன் உள்ளிட்ட மேலும் பலரும் உரையாற்றினர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X