2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

ஆலயத்திலிருந்து இராணுவ முகாமை அகற்றுமாறு கோட்டாவுக்கு கடிதம்

Menaka Mookandi   / 2013 செப்டெம்பர் 11 , மு.ப. 07:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகராசா சரவணன்

அக்கரைப்பற்று, கண்ணகிபுரம் ஸ்ரீ முருகன் ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள இராணுவ முகாமை அகற்றி ஆலயத்தையும் அதன் வளாகத்தினையும் மீளப் பெற்றுத்தருமாறு பாதுகாப்பு  அமைச்சின்; செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவிடம் ஆலய பரிபாலன சபையினர் கோரிக்கை விடுத்து அவசர கடிதம் ஒன்றினை அனுப்பிவைத்துள்ளனர்.

இவ்வாறு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாவது,
 
'இவ்வாலயம் கடந்த 1960ஆம் ஆண்டு காலப்பகுதியில் கண்ணகிபுர கிராம அபிவிருத்திச் சங்கத்தலைவர் வெள்ளமுருகர் தலைமையில் காடுகளை வெட்டி ஆலயம் அமைக்கப்பட்டு மக்கள் வழிபட்டு வந்ததுடன்; 1978ஆம் ஆண்டு அமரர் கனகரட்ணம் எம்.பி.யினால் 248 வீடுகள் அமைக்கப்பட்டு மக்களை குடியேற்றப்பட்டு குடியேற்றக்கிராமமானது.

நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையையடுத்து 1990ஆம் ஆண்டு காலப்பகுதியில் வன்செயல் காரணமாக இப்பிரதேச மக்கள் இடம்பெயர்ந்ததையடுத்து இவ்வாலய வளாகத்தினையும் அங்கிருந்த பாடசாலைக்கட்டிடத்தையும்  விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றி முகாம் அமைத்தனர். இதன் பின்னர் இடம்பெயர்ந்த மக்கள் மீண்டும் சொந்த இடத்தில் குடியமர்த்தப்பட்டு  20 வருடங்களுக்கு மேலாக விசேட அதிரடிப்படை முகாம் இயங்கி வந்தது.

கடந்த 2010ஆம் ஆண்டு ஜீலை மாதம் 30ஆம் திகதி விசேட அதிரடிப்படையினர் இம்முகாமை அகற்றி வெளியேறி; ஆலயத்தை மக்களிடம் கையளித்தனர்  இதன் பின்னர் பாலடைந்திருந்த  ஆலயவளாகத்தை  சிரமதானம் செய்து கட்டுமானப் பணிகள்இடம்பெற்றுக் கொண்டிருப்பதுடன் மலையில் 21 அடி உயரம் கொண்ட முருகன் சிலை ஒன்றும் அமைக்கப்பட்டு வழிபாடுகள் இடம்பெற்று வந்தன.

இந்நிலையில் இந்த வருடம் ஏப்ரல் மாதம் 14ஆம் திகதி ஆலய வளாகத்துக்கு  அருகாமையில் உள்ள பாடசாலை கட்டிடத்தில் மீண்டும் இராணுவத்தினர் முகாம் அமைத்ததுடன் ஆலய பரிபாலன சபையினரை இராணுவத்தினர் அழைத்து ஆலய வளாகத்தில் உள்ள கட்டிடத்தினை எமது உயர்பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தருமாறு கேட்டனர். இதனை மக்கள் வழங்க மறுப்பு தெரிவித்தனர்.

இதேவேளை எந்த விதமான அறிவிப்பும் இன்றி மே மாதம் ஆலய வளாகத்தினை சுற்றி வேலிகள் அமைத்து தன்வசமாக்கிக் கொண்டதுடன் ஆலய கட்டுமானப் பணிகளையும் இடைநிறுத்தி கட்டிட பொருட்களையும் அகற்றுமாறு பணித்துள்ளனர்.

எனவே தற்போது சமாதான சூழ்நிலை ஏற்பட்டு மூன்று வருடங்களுக்கு மேலாகின்ற நிலையில் தமிழ் மக்களிடையே நம்பிக்கையை கட்டிஎழுப்ப வேண்டிய இத்தருணத்தில் மீண்டும் ஆலயத்தில் முகாம் அமைக்கப்பட்டு ள்ளமையினால் இந்து மக்கள் இராணுவத்தினர் மீது வெறுப்புணர்வை ஏற்படுத்தக் கூடும்.

ஆகவே அமைக்கப்பட்ட இராணுவ முகாமை எமது ஆலய வளாகத்தில் இருந்து அகற்றி ஆலயத்தினை மக்கள் வழிபாடு செயவதற்கான சூழ்நிலையை உருவாக்கித் தரவேண்டும்' என அக்கோரிக்கை கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Comments - 0

  • VALLARASU. Wednesday, 11 September 2013 03:34 PM

    இது எப்படி இருக்கு தெரியுமா? அம்பை எய்தவனிடம் போய் அம்பை முறையிடுவது,போன்ற கதை...

    Reply : 0       0

    ibnuaboo Saturday, 14 September 2013 12:50 PM

    இன்னுமொரு கதை தெரியுமா. இதற்கு பக்கத்தில் ஒரு முஸ்லிம் கிராமம் இருந்தது. சுற்றிவர தமிழ் பிரதேசங்கள். கடந்த கால பயங்கரவாத அட்டூளியங்களின் போது இங்குவசித்த பல முஸ்லிம்கள் கொல்லப்பட்டும் உடமைகள் அழிக்கப்பட்டும் அவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு இன்று அங்கே அவர்கள் வாழ்ந்த சுவடுகூட இல்லை. எல்லாவற்றுக்கும் காலம் பதில் சொல்லிக்கொண்டே இருக்கிறது..

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X