2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

பேச்சியம்மாள் ஆலய கட்டிடத்தை இராணுவம் உடைத்தமைக்கு கண்டனம்

Super User   / 2013 செப்டெம்பர் 11 , மு.ப. 09:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகராசா சரவணன்

அக்கரைப்பற்று கண்ணகிபுரம் முருகன் மலை ஆலய வளாகத்தில் இருக்கும் பேச்சியம்மாள் ஆலய கட்டிடத்தை இராணுவத்தினர் உடைத்து தன்னிச்சையாக அதனை வேறு இடத்தில் அமைத்துள்ளமை கண்டிக்கத்தக்க விடயமாகும் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ரி.கலையரசன் தெரிவித்தார்.

அத்துடன் இந்து மதத்தினையும் இந்து மக்களையும் இராணுவத்தினர் இழிவுபடுத்தும் செயலாகவே இதனை கருதவேண்டியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

"கடந்த 1990ஆம் ஆண்டு காலப்பகுதியில் இந்த ஆலயத்தின் வளாகத்தில் விசேட அதிரடிப் படை முகாம் அமைக்கப்பட்டு  20 வருடங்களாக செயற்பட்டது. இந்த நிலையில் கடந்த 2010ஆம் ஆண்டு விசேட அதிரடிப் படையினர் அங்கிருந்து முற்றாக விலகி ஆலயத்தை பொதுமக்களிடம் கையளித்தனர்

இந்த வருடம் ஏப்ரல் மாதம் இராணுவத்தினர் பலவந்தமாக ஆலய வளாகத்தில் உட்புகுந்து முகாம் அமைத்து ஆலயத்தின் மலை பகுதிக்கு மட்டும் மக்கள் வழிபட அனுமதித்துள்ளதுடன் ஆலய கட்டுமாணப் பணிகளை இடைநிறுத்தி அங்கிருக்கும் பொருட்களை அகற்றுமாறும் பலவந்தப்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த செப்டம்பர் 2ஆம் திகதி ஆலயத்தின் பரிவாரங்களாக ஆகமமுறைப்படி அமைக்கப்பட்டிருந்த பேச்சியம்மாள் ஆலயத்தினை இராணுவத்தினர் உடைத்து மலையின் கீழ் பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ளமை இந்து மதத்தையும் இந்து மக்களையும் இழிவுபடுத்தும் செயலாகும்.

இன்று இராணுவத்தினர் விகாரை ஒன்றில் முகாம் அமைத்து விகாரையின் சையித்தியை உடைத்து வேறு இடத்தில் கட்டமுடியுமா? எனவே தொடர்ந்தும் தமிழ் மக்கள் மீதும் இந்து மதத்தின் மீதும் அடாவடித்தனம் புரிகின்றனர்.

அத்தோடு 1978ஆம் ஆண்டு மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர் கனகரெட்ணத்தினால் குடியேற்றப்பட்டு மக்கள் இந்த பகுதியில் வாழ்ந்து வரும் நிலையில் ஆலயத்தை விசேட அதிரடி படையின் கட்டியதாகவும் தங்களுக்குச் சொந்தமான இடம் எனவும் இராணுவத்தினர் புதிய வரலாற்றை திரிவுபடுத்தி வருகின்றனர்.

தமிழர்களின் வழிபாட்டிடங்களையும் இன்றும் வழிபட முடியாத நிலையை ஏற்படுத்தி தமிழ் பிரதேசங்களை அபகரித்து சிங்கள மயமாக்கலில் அரசாங்கம் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றது.   இவ்வாறு அரசு தமிழ் மக்களின் நில அபகரிப்பு ஆலய அபகரிப்பு போன்ற நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும்" என்றார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X