2025 நவம்பர் 04, செவ்வாய்க்கிழமை

முட்டாள்தனமான பைகளுக்கு முடிவு கட்டவேண்டும்

R.Tharaniya   / 2025 நவம்பர் 03 , பி.ப. 03:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொருட்கள்  கொள்வனவு செய்யும் போது,  குறைந்த அடர்த்தி கொண்ட பொலித்தீன் மற்றும் நேரியல் குறைந்த அடர்த்தி கொண்ட பொலித்தீன்களை,  நுகர்வோருக்கு  இலவசமாக ஒரு விற்பனையாளர் வழங்கக்கூடாது.

அதற்கான வர்த்தமானி அறிவித்தல் நவம்பர் 1ஆம் திகதியன்று வெளியிடப்பட்டு அன்றிலிருந்தே அமுல்படுத்தப்பட்டுள்ளது.

பொதுவாக ‘சில்லி பைகள்’ என்று அழைக்கப்படும் பிளாஸ்டிக் பைகள், வாங்கிய பொருட்களை எடுத்துச் செல்லப் பயன்படுத்தப்படும் ‘கைப்பிடி’ கொண்ட எந்த அளவிலான பைகளாகும் என்றும் வர்த்தமானி அறிவிப்பு தெளிவுபடுத்தியுள்ளது. 

சுற்றுச்சூழல் நீதி மையத்தால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் மனுவில் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்​பை அடுத்தே,  நுகர்வோர் விவகார ஆணையம் ஒரு வர்த்தமானி அறிவிப்பின் மூலம் இந்த உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளது. 

பல்பொருள் அங்காடிகள் வழங்கும் ஒரு பை, இரண்டு கைப்பிடிகள் கொண்ட பைகளை நுகர்வோருக்கு இலவசமாக வழங்கக்கூடாது. எனினும், கடைகள் வழங்கும் இரண்டு கைப்பிடிகள் இல்லாத சிறிய ஷாப்பிங் பைகள் அல்லது சில பல்பொருள் அங்காடிகளில் காய்கறிகள் மற்றும் பழங்களை விநியோகிக்கப் பயன்படுத்தப்படும் கைப்பிடிகள் இல்லாத பைகளுக்கு இந்த உத்தரவு பொருந்தாது.

இதேபோல், துணிக்கடைகள் போன்ற இடங்களால் வழங்கப்படும் பொலிதீன் பைகளை இது பாதிக்காது. பொலித்தீன்களை இலவசமாக வழங்கக்கூடாது என்ற வர்த்தமானி அறிவித்தல் நடைமுறைக்கு வந்த நாளிலும், பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காக, நுகர்வோர் வேறெந்த பைகளையும் எடுத்துச் செல்லவில்லை.

ஒன்றாக, இருந்தாலும் சரி அல்லது இரண்டு, மூன்றாக இருந்தாலும் சரி, காசு கொடுத்து ​பொலித்தீன் பைகளைக் கேட்டுள்ளனர். அதனால்தான், முட்டாள்தனமான பைகள் என கூறுகின்றனர். முன்பெல்லாம் இலவசமாக கொடுத்த முதலாளிகள், தற்போது, சிறிய தொகையை அறவிடுகின்றனர். 

“இது பொலித்தீன் அல்லது ‘சில்லி  பைகளின்’ பயன்பாட்டை குறைக்காது. ஆனால், இது முதலாளிக்கு இன்னும் கொஞ்சம் லாபத்தைத் தரும்” என்று பலரும் சொல்கின்றனர்.

உண்மையில், நுகர்வோர் அனைவரும் துணிப்பைகளை எடுத்துக்கொண்டு செல்வதில்லை. கடமைக்குச் சென்று வீடுதிரும்பு​வோர், வீட்டுக்குத் தேவையான பொருட்களை கொள்வனவு செய்துக்கொண்டு வருகின்றனர்.

இதற்காக ஒவ்வொருநாளும் அந்த பையை எடுத்துக்கொண்டுச் செல்லமுடியாது என்று பலரும் கூறுகின்றனர். எனினும், எதிர்காலத்தில் நம்முடைய சுற்றுச்சூழல் மிகமோசமான முறையில் பாதிப்படைய போகின்றது என்பதையிட்டு, 
பொலித்தீன் பைகளை கொள்வனவு செய்யும் பெரும்பாலானவர்கள் கவலைப்பட்டதாக தெரியவில்லை. 

இறைச்சி உள்ளிட்ட ஈரமான பொருட்களை துணி பைகளில் எடுத்து வருவது சிரமமாகும் எனினும், அந்த துணிப்பைகளின் உள்ளே பொலிதீன் இருக்கும் பைகளை பயன்படுத்தலாம். முட்டாள்தனமான பைகளை தூக்கியெறிந்து அதற்கு முடிவுக்கட்டுவோம். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X