Editorial / 2026 ஏப்ரல் 06 , மு.ப. 10:21 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்கத் தவறினால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் விடுத்த மிரட்டலுக்கு, ஈரான் ஆக்ரோஷமாகப் பதிலடி கொடுத்துள்ளது.
கடந்த பிப்ரவரி 28-ம் திகதி, ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து நடத்திய தாக்குதலில், ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் உயிரிழந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனைத் தொடர்ந்து, மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்கப் படைத்தளங்கள் மற்றும் இஸ்ரேல் மீது ஈரான் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. பதிலுக்கு இஸ்ரேலும் அமெரிக்காவும் ஈரானைத் தாக்கி வருவதால் அப்பகுதியில் போர் மேகம் சூழ்ந்துள்ளது.
போர் சூழல் காரணமாக, கச்சா எண்ணெய் போக்குவரத்திற்கு மிக முக்கியமான ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) பகுதியை ஈரான் மூடியுள்ளது. இதனால் அரபு நாடுகளிலிருந்து மற்ற நாடுகளுக்குக் கப்பல்கள் மூலம் கச்சா எண்ணெய் கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாகச் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்து, உலகப் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் உடனடியாகத் திறக்க வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் விதித்த கெடு இன்றுடன் முடிகிறது. "ஜலசந்தியைத் திறக்காவிட்டால் நரகத்தின் வாசல் திறக்கப்படும்" என்று ஏற்கனவே எச்சரித்திருந்த டிரம்ப், தற்போது ஈரானின் மின் நிலையங்கள் மற்றும் பாலங்கள் மீது தாக்குதல் நடத்தி அவற்றைத் தகர்க்கப்போவதாகப் பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளார்.
அமெரிக்காவின் கெடுவை அடியோடு நிராகரித்த ஈரான், ஜலசந்தியைத் திறக்கப் போவதில்லை என்பதில் உறுதியாக உள்ளது. இது குறித்துப் பேசிய ஈரான் பாராளுமன்ற சபாநாயகர் முகமது காலிபாப் கூறியதாவது:
"ஜனாதிபதி டிரம்பின் பொறுப்பற்ற நடவடிக்கைகளால் ஒட்டுமொத்த பிராந்தியமும் தீக்கிரையாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் கட்டளைகளுக்கு அடிபணிந்து செயல்படும் டிரம்ப், அமெரிக்க மக்களை நரக வேதனையில் தள்ளுகிறார். போரால் எதையும் சாதிக்க முடியாது. ஈரானின் உரிமைகளை மதித்து, இந்த மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதே ஒரே தீர்வாகும்."
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான இந்த மோதல் போக்கு, உலக நாடுகளிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
42 minute ago
51 minute ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
51 minute ago
5 hours ago