Freelancer / 2025 டிசெம்பர் 20 , மு.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
பங்களாதேஷில் முக்கிய மாணவர் இயக்கத் தலைவரான ஷெரீப் உஸ்மான் ஹாடி சுட்டுக் கொல்லப்பட்டதை தொடர்ந்து, அங்கு இந்தியாவுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்துள்ளது. இந்து இளைஞர் ஒருவர் கும்பலால் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இந்துக்களை குறிவைத்து கலவரம் பரவுவதால் பதற்றம் அதிகரித்துள்ளது.
பங்களாதேஷ் அரசுக்கு எதிராக மாணவர் அமைப்புகள் கடந்த ஆண்டு நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதையடுத்து, பிரதமர் பதவியில் இருந்து விலகிய ஷேக் ஹசீனா, நாட்டைவிட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். இதை தொடர்ந்து, பொருளாதார நிபுணரான முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டு, செயல்பட்டு வருகிறது.
பங்களாதேஷில் 2026 பெப்ரவரி 12 ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், டாக்கா-8 தொகுதி வேட்பாளராக ஷெரீப் உஸ்மான் ஹாடி (வயது 32) என்ற மாணவர் தலைவர் களமிறங்கினார். இன்கிலாப் மஞ்சா என்ற மாணவர் போராட்டக் குழுவின் மூத்த தலைவரான இவர், கடந்த ஆண்டு மாணவர் போராட்டத்தை வழிநடத்திய முக்கிய தலைவர்களில் ஒருவர்.
இந்நிலையில், டாக்காவில் கடந்த 12 ஆம் திகதி பிரச்சாரத்தை தொடங்கிய இவரை, முகமூடி அணிந்த மர்ம நபர்கள், தலையில் சுட்டனர். இதில் படுகாயம் அடைந்த அவருக்கு டாக்காவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் முன்னேற்றம் இல்லாததால் கடந்த 13 ஆம் திகதி விமானம் மூலம் சிங்கப்பூர் கொண்டு செல்லப்பட்டு, அங்கு உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ஷெரீப் உஸ்மான் ஹாடி நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார்.
இந்த தகவல் வெளியானதை அடுத்து, கொலையாளிகளைக் கைது செய்யக் கோரி டாக்கா உட்பட பல்வேறுபகுதிகளிலும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். பல பகுதிகளில் மாணவர்கள்வன்முறையில் ஈடுபட்டனர். ‘புரோதோம் அலோ’, ‘டெய்லி ஸ்டார்’ ஆகிய நாளிதழ் அலுவலகங்கள் தீவைத்துக் கொளுத்தப்பட்டன. சட்டேகிராம் பகுதியில் உள்ள இந்திய துணைத் தூதரக அலுவலகம் மற்றும் இந்திய துணை தூதரின் வீடு மீது சிலர் கல்வீசி தாக்கினர்.
இந்தியாவுக்கு எதிராகவும், அவாமி லீக் மற்றும் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராகவும் கோஷம் எழுப்பினர். பாதுகாப்புப் படையினர், கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி, அவர்களை தடுத்து நிறுத்தினர். அவாமி லீக் கட்சிக்கு சொந்தமான இடங்கள் மீதும் மாணவர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்துக்களை குறிவைத்தும் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. (a)

9 hours ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
21 Dec 2025