2025 மே 16, வெள்ளிக்கிழமை

'குட்டிக் கதை' சொல்லி தேர்தல் வியூகம் வகுத்த ஜெயா

Thipaan   / 2016 பெப்ரவரி 15 , மு.ப. 04:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

'குட்டிக் கதை' சொல்லி, பிரசாரங்கள் தொடங்கி விட்டன. 'அரசியலில் உறவு இல்லை என்று மகனுக்கு பாடம் கற்றுத் தந்த தந்தை' என்று தி.மு.க. தலைவர் கலைஞர் கருணாநிதியை மறைமுகமாக சாடினார் முதலமைச்சர் ஜெயலலிதா. தன் கட்சி அமைச்சர்களில் சிலரின் இல்லத் திருமணத்தை நடத்தி வைத்த ஜெயலலிதா, இது மாதிரி கதை சொல்லி கருத்து விளக்கியது இது புதிதல்ல.

சமீப காலமாகவே ஒவ்வொரு கூட்டத்திலும் ஏதாவது ஒரு கதை சொல்லி கருத்துச் சொல்லும் வழக்கத்தை அவர் மேற்கொண்டிருக்கிறார். முந்தைய காலத்தில் முதல்வராக இருந்த ராஜாஜி கடைப்பிடித்த பழக்கம் இது என்றாலும், இந்த காலத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு எதிராகவே இந்தக் கதைகளை ஜெயலலிதா அவ்வப்போது சொல்லி வருகிறார்.

இந்த முறை சொன்ன கதையின் பின்னணிக் கருத்தில், தி.மு.க.வின் முதல்வர் வேட்பாளர் பிரச்சினையை மையப்படுத்தி பேசியிருக்கிறார். தமிழகம் முழுவதும் 'நமக்கு நாமே' என்று பயணம் மேற்கொண்டு, பல்வேறு தரப்பு மக்களை நேரடியாகச் சந்தித்து வந்தார் மு.க. ஸ்டாலின்.

அந்த சந்திப்பு பெப்ரவரி 12ஆம் திகதி, சென்னை தி.நகரில் நடைபெற்ற வியாபாரிகள் சந்திப்பு மற்றும் பத்திரிகையாளர்கள் சந்திப்புடன் நிறைவு பெற்றது. தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளிலும் உள்ள மக்களை அவர் சந்தித்து, இந்த 'நமக்கு நாமே' பயணத்தை நிறைவு செய்துள்ளார். இதுவரை மற்ற எந்தக் கட்சியிலும் இது போன்ற தொகுதி வாரியாக மக்களை சந்திக்கும்  நிகழ்ச்சியை நடத்தியது இல்லை. அந்த வகையில் 'நமக்கு நாமே' பயணம் மக்கள் மத்தியில் பதிந்து விட்டது. அது மட்டுமின்றி, சென்ற சட்டமன்ற தேர்தல் தோல்வி மற்றும் நாடாளுமன்ற தோல்வி போன்றவற்றால் சோர்ந்து போய் கிடந்த தி.மு.க. தொண்டர்களை உசுப்பி விட்டுள்ளது.

இப்பயணத்தின் மூலம் ஸ்டாலின்தான் தி.மு.க.வின் முதல்வர் வேட்பாளர் என்ற கருத்துருவாக்கம் செய்யப்பட்டது. அனைத்து கட்சியினரும், மக்களும் அடுத்த முதல்வர் வேட்பாளர் ஸ்டாலின்தான் என்ற நிலை உருவாகியது. இந்த சூழ்நிலையில் தி.மு.க.வுடன் கூட்டணிக்கு வரும் கட்சிகள் மற்றும் தமிழக அரசியல் நிலவரம் போன்றவற்றை மனதில் வைத்து தி.மு.க. தலைவர் கருணாநிதியே முதல்வர் வேட்பாளராக இருக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

இப்படியொரு சூழலில்தான் ஸ்டாலின் 'தலைவர் கலைஞர் தலைமையில் தி.மு.க. ஆட்சி அமையும்' என்று 2016 தேர்தல் வியூகத்தை திடீரென்று வெளியிட்டார். ஸ்டாலினின் இந்த அறிவிப்புக்கு பதிலளிக்கும் வகையில்தான் அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் 'குட்டிக் கதை' விளக்கம் அமைந்தது. இந்தக் கதையை அவர் சொல்லுவதற்கு முன்பு நிகழ்ந்த இரு விடயங்கள் தி.மு.க. மீதான தாக்குதலை இவ்வளவு காரசாரமாக தொடுக்க வேண்டிய கட்டாயத்தை அ.தி.மு.கவுக்கு ஏற்படுத்தியது.

முதலில் பா.ஜ.க.வின் முக்கிய தலைவர்களில் ஒருவரான டொக்டர் சுப்ரமணியன் சுவாமி 'தி.மு.க.வில் கருணாநிதி தலைவர் பதவியிலிருந்து விலக வேண்டும். ஸ்டாலின், விஜயகாந்த் ஆகியோர் சேர்ந்து பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்கலாம்' என்ற யோசனையை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

இந்த கருத்து வெளியிடப்பட்ட சில நாட்கள் கழித்து, சென்னைக்கு வந்த வாழும் கலை அமைப்பைச் சேர்ந்த ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார். அதுவும் ஸ்டாலினின் இல்லத்துக்கே சென்று சந்தித்தார். இந்த நிகழ்வுகள் அ.தி.மு.கவை பதற்றமடைய வைத்தது.

ஏனென்றால், இருவருமே மத்தியில் பா.ஜ.க. தலைமையில் உள்ள அரசுக்கு மிக நெருக்கமானவர்கள். இவர்களின் சந்திப்பால் தி.மு.க.வுக்கு ஒரு முக்கியத்துவம், அதுவும் தி.மு.க. பொருளாளராக இருக்கும் மு.க. ஸ்டாலினுக்கு முக்கியத்துவம் கிடைப்பது அ.தி.மு.கவுக்கு வெறுப்பை ஏற்படுத்தி விட்டது.

'ஸ்டாலினை மையமாக வைத்து'ப் பேசிய டொக்டர் சுப்ரமணியன் சுவாமி, அவரை சந்தித்த ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் ஆகியோரின் முயற்சியை முறியடிக்கவே அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதா இப்படி கதை சொன்னார்.  'ஸ்டாலினை முதல்வர் வேட்பாளராக கருணாநிதியே ஒப்புக் கொள்ளவில்லை.

நீங்கள் ஏன் அவரை முன்னிறுத்தி அரசியல் செய்கிறீர்கள்' என்று அந்த இருவருக்கும் விடப்பட்ட செய்தியாகவே முதல்வர் ஜெயலலிதாவின் இந்தக் கதையை எடுத்துக் கொள்ள வேண்டும். அதே நேரத்தில் தேர்தல் நெருங்கும் நேரம். ஏற்கெனவே மக்கள் நலக்கூட்டணியின் சார்பில் வைகோ போன்றவர்கள் பிரசாரத்தை தொடக்கி விட்டார்கள்.

அதே போல் பா.ஜ.க.வின் சார்பிலும் அடுத்த கட்ட கூட்டணி ஏற்பாடுகள் பற்றி விவாதிக்க டெல்லி தலைவர்கள் சென்னைக்கு படையெடுக்கிறார்கள். இந்த பின்னனியில் தேர்தல் களத்தை 'தி.மு.க.வுக்கும், அ.தி.மு.கவுக்கும் இடையில் நடைபெறும் போட்டியாக' கொண்டு செல்ல வேண்டும் என்பதும் அ.தி.மு.க பொதுச் செயலாளரின் நோக்கமாக இருந்திருக்கலாம்.

இதைப் புரிந்து கொண்டுதான் 'ஸ்டாலின் பற்றி கடுமையாக விமர்சித்தார்' ஜெயலலிதா. ஸ்டாலினை விமர்சித்தால் தி.மு.க. தலைவர் கருணாநிதி காட்டாமாக பதில் சொல்வார் என்பது ஜெயலலிதாவுக்கும் தெரியும். அவர் எதிர்பார்த்தது போலவே 'எதிர்த்த வீட்டு சீமாட்டி, இப்படி அப்பா பிள்ளைக்குள் மோதல் வரும் என்று நினைத்து ஏமாந்து போவார்' என்று பதிலடி கொடுத்தார் கலைஞர் கருணாநிதி. ஆகவே, பல முனைகளாக பிளவு பட்டு நின்ற தேர்தல் களம் திடீரென்று இந்த ஓர் அறிக்கையில் 'தி.மு.க.வும், அ.தி.மு.கவுக்கும் இடையில்தான் போட்டி' என்ற இமேஜை உருவாக்கி விட்டது. இதைத்தான் அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதாவும், தி.மு.க. தலைவர் கருணாநிதியும் எதிர்பார்க்கிறார்கள். அதுவே இக்கதையின் பின்னனியில் உருவாகியும் விட்டது.

ஆனால், 'எண்ணையிலும் ஒட்டாமல், பணியாரத்திலும் ஒட்டாமல்' நின்று கொண்டிருப்பது தமிழகத்தில் பா.ஜ.க.தான். அகில இந்திய அளவில் மத்தியில் ஆளுங்கட்சியாக பாரதிய ஜனதா கட்சி இருந்தாலும், தமிழகத்தைப் பொறுத்தவரை அக்கட்சி எதிர்பார்க்கும் பலமும் இல்லை.  கூட்டணியும் இதுவரை இல்லை.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க., பா.ம.க., தே.மு.தி.க. உள்ளிட்ட கட்சிகளின் கூட்டணி மோடி தலைமையில் அமைந்தது. அக்கூட்டணியை நாடாளுமன்ற தேர்தலுக்குப் பின்னர் தக்க வைக்க பா.ஜ.க.வின் டெல்லி தலைமையும் தவறி விட்டது. மாநிலத் தலைமையும் தவறி விட்டது. ஆனால் இப்போது, பழைய நாடாளுமன்ற தேர்தல் கூட்டணியும் பா.ஜ.க.விடம் இல்லை.

புதிதாக அ.தி.மு.கவும், ஏன் தி.மு.க.வும் கூட பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்க யோசிக்கின்றன. இதனால், கூட்டணி கிடைக்காமல் போய் விடுமோ என்ற இக்கட்டான சூழலில் பா.ஜ.க. இருக்கிறது. அதனால்தான் 'நாங்கள் தனித்துப் போவதற்கும் தயார்' என்று மாநில பா.ஜ.க.வின் தலைவரான இல. கணேசன் அறிவித்துள்ளார். அதில் வேறு ஓர் அர்த்தமும் பொதிந்து கிடக்கிறது. விஜயகாந்தை இழுத்து, எப்படியாவது பா.ஜ.க. கூட்டணி அமைத்து விட்டால் அ.தி.மு.கவுக்கு வெற்றி வாய்ப்பு எளிதாக இருக்கும் என்பது அ.தி.மு.க தலைமையின் வியூகம். ஆனால்,பா.ஜ.க.வோ, அ.தி.மு.க தங்களுடன் கூட்டணி வைக்க வில்லை என்றால், நாம் ஏன் அப்படியொரு வியூகத்துக்கு உடன்பட்டு தி.மு.க.வை தோற்கடிக்க வேண்டும் என்ற எண்ணம். இந்த எண்ணத்தை வெளிப்படுத்தும் விதமாகவே இல.கணேசனின் பேட்டி அமைந்திருக்கிறது. ஆகவே இன்றைய அரசியல் சூழ்நிலையில் பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க கூட்டணி வைக்கவில்லை என்றால், தி.மு.க.வின் வெற்றியை தடுக்கும் அல்லது அந்த வெற்றிக்கு முட்டுக்கட்டை ஏற்படுத்தும் எந்த முயற்சியிலும் பா.ஜ.க. ஈடுபடாது என்பதை வெளிப்படுத்தும் விதமாகவே 'தனித்துப் போட்டியிடவும் தயார்' என்று கூறியிருக்கிறார் இல. கணேசன்.

ஆகவே, அ.தி.மு.கவுக்;கும், தி.மு.க.வுக்கும் இடையிலான போட்டியாக தமிழக தேர்தல் களத்தைக் கொண்டு போக அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதாவும், தி.மு.க. தலைவர் கருணாநிதியும் பரஸ்பர அறிக்கைகளை இப்போது விட்டுள்ளார்கள். இனியும் அதிக அறிக்கைகளை விடத் தொடங்குவார்கள். அதே போல் பா.ஜ.க.வுக்கு எப்படி கூட்டணி? யாருடன் தேர்தலை சந்திக்கப் போகிறது என்பது போன்ற விடயங்களுக்கு விடை தேடும் முயற்சியில் பா.ஜ.க. ஈடுபடும்.

அப்போது, இதுவரையுள்ள அ.தி.மு.கவுடனான நட்பை தொடர வேண்டுமா, என்ற முடிவை எடுக்க வேண்டிய நிலைக்கு பா.ஜ.க. தள்ளப்படும். அது பா.ஜ.க.வுக்கும், அ.தி.மு.கவுக்கும் உள்ள டெல்லி உறவை பாதிக்கும் விதத்தில் அமையலாம் என்பதுதான், இன்று 2016 சட்டமன்ற தேர்தல் களத்தில் இருக்கும் வியூகத்தின் வெளிப்பாடு.

அ.தி.மு.க, தி.மு.க., பா.ஜ.க. ஆகிய மூன்று கட்சிகளும் தங்களுக்குள் 'எஜமானர்' யார் என்பதை இன்னும் சில வாரங்களில் அவர்கள் அமைக்கப் போகும் கூட்டணி முடிவு செய்யும். குறிப்பாக மக்கள் நலக் கூட்டணி இப்படியே தேர்தல் வரை தொடருமா, பாட்டாளி மக்கள் கட்சி தனித்தே களத்தில் நிற்குமா, தே.மு.தி.க. தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்குமா- இந்தக் காட்சிகள் தமிழக தேர்தல் திரையரங்கில் தி.மு.க. 'ஹீரோவா' அ.தி.மு.க 'ஹீரோவா' என்பதை வெளிப்படுத்தும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .