2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

இந்திய வெளியுறவுத்துறையை தி.மு.க. கேட்டுப் பெற வேண்டும்

Menaka Mookandi   / 2014 பெப்ரவரி 18 , மு.ப. 09:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரமாண்டமான மாநாட்டை நடத்தி முடித்திருக்கிறது திராவிட முன்னேற்றக் கழகம்.  "திருப்பு முனை" மாநாடு என்று பெயரிட்டு பெப்ரவரி 15 மற்றும் 16 திகதிகளில் திருச்சி மாநகரை குலுங்க வைத்து விட்டது. எங்கு பார்த்தாலும் இரு வண்ணக் கொடிகள்  (கருப்பு - சிவப்பு), கட்அவுட்கள் என்று வரவேற்பு வளைவுகள் திருச்சியில் திருவிழாக்  கோலம் பூண்டு விட்டது என்றே சொல்ல வேண்டும். "இது போன்ற மாநாட்டை என்  வாழ்நாளில் பார்த்ததில்லை" என்று தி.மு.க. பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகனே சிலாகித்துப் பேசி விட்டார்.

அந்த அளவிற்கு பிரமாண்டமான மாநாடு  தி.மு.க.வின் திருப்பு முனை மாநாடு. இலங்கை தமிழர்களின் மீதான மனித உரிமை  மீறல்களுக்கு சர்வதேச விசாரணை, ஜெனிவாவில் இந்தியாவே முன்னின்று  இப்படியொரு தீர்மானத்தைக் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை, ஈழத்  தமிழர்கள் தங்கள் விருப்பப்படி தங்கள் அதிகாரத்தைப் பெற்றுக்கொள்ள வாக்கெடுப்பு  உள்ளிட்ட பல்வேறு சப்ஜெக்டுகளில் 15 தீர்மானங்களும் தி.மு.க. பத்தாவது மாநில  மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.

இரண்டு நாட்கள் நடைபெற்ற மாநாட்டில் முதல் நாளில் கொடியேற்றத்துடன் மாநாடு  தொடங்கியது. தி.மு.க. தலைவர் கருணாநிதியின் வயதைக் குறிக்கும் வகையில் அது  90 அடி உயரமுள்ள கொடிக் கம்பம். அதில் கலைஞர் கருணாநிதி கொடியேற்றத்தைத்  துவக்கி வைக்க மீதிக் கொடி முழுவதையும் கம்பத்தில் ஏற்றி முடித்தார் அங்கே  நின்றிருந்த தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின்.

மாநாட்டில் பேசிய திராவிடக்  கழகத் தலைவர் கி.வீரமணி இதை தி.மு.க.வை ஸ்டாலினிடம் ஒப்படைத்து விட்டார்  கருணாநிதி என்பது போல் ஒப்பிட்டு உரை நிகழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.  "கொடியின் முதல் ஏற்றத்தைத் துவக்கி வைத்து மீதிக் கொடி முழுவதையும் கொடிக்  கம்பத்தில் ஏற்ற மு.க.ஸ்டாலினுக்கு அனுமதி அளித்தார் கலைஞர். அதில் பல  அர்த்தங்கள் பொதிந்து கிடக்கின்றன" என்றார் சற்று வித்தியாசமாக.

ஏறக்குறைய 42 தலைப்புகளில் மாநாட்டின் இரு தினமும் பல்வேறு தி.மு.க.  முன்னனிப் பிரமுகர்கள் பேசினார்கள். மத்திய இணையமைச்சராக இருந்த எஸ்.எஸ்.  பழனி மாணிக்கம், "மாநிலத்தில் சுயாட்சி. மத்தியில் கூட்டாட்சி தத்துவத்தை  முன்னெடுத்துச் செல்லுகிறோம். இதற்காக மறைந்த முரசொலி மாறன் பாடுபட்டார். தலைவர் கலைஞர் ராஜமன்னார் குழு அமைத்து ஆய்வு செய்தார்" என்றெல்லாம்  சுட்டிக்காட்டினார். நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலுவோ, முரசொலி மாறன் டோகாவில் நடந்த உலக வர்த்தக மாநாட்டில் ஆற்றிய அரும்பணிகளை பட்டியலிட்டார்.

தயாநிதி மாறன் பேசுகையில், "தமிழகத்திற்கு மத்திய அமைச்சராக இருந்து கொண்டு வந்த பல தொழிற்சாலைகள், சாலைகள், ஒரு ரூபாய்க்கு போன்  பேசும் முறை" உள்ளிட்ட தி.மு.க.வின் சாதனைகளை எடுத்துரைத்தார். கவிஞர்  கனிமொழி, "இடஒதுக்கீடு முறை அ.தி.மு.க.வில் எப்படி சிதைக்கப்படுகிறது"  என்பதையும், "சமூக நீதிக்காக போராடும் இயக்கம் தி.மு.க." என்பதையும் விளக்கிப்  பேசினார். "தளபதி ஸ்டாலின் வழியில் வெற்றிகளைக் குவிப்போம்" என்று தயாநிதி மாறனும், கனிமொழியும் மாநாட்டில் பேசியது குறிப்பிடத்தக்கது.

தி.மு.க. துணை பொதுச் செயலாளர் துரைமுருகன், "காவிரியில் இன்று தண்ணீர் வராமல்  விவசாயிகள் கஷ்டப்படுவதற்கு அ.தி.மு.க. அரசு செய்த துரோகமே காரணம்" என்று  கூறி காவிரி விவகாரத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதி மேற்கொண்ட பல்வேறு  நடவடிக்கைகளை விலாவாரியாக விவரித்துப் பேசினார். அவர் தி.மு.க.  அமைச்சரவையில் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்து காவிரிப் பிரச்சினையை  கையாண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தி.மு.க. பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகன், "கலைஞரை மறவாதீர்கள். தி.மு.க.வை மறவாதீர்கள்" என்று உருக்கமாக உரை நிகழ்த்தினார். அது மட்டுமின்றி, தி.மு.க.வின் ஆரம்பகால வரலாற்றை விவரமாக எடுத்துச் சொன்னார். கூட்டணிக் கட்சித் தலைவர்கள் வரிசையில் பேசியவர்களில் விடுதலை சிறுத்தைகளின் கட்சி தலைவர் தொல். திருமாவளவன், "இங்கே சமூக நீதிக் கூட்டணி இருக்கிறது.  ஒடுக்கப்பட்ட மக்கள், பிற்படுத்தப்பட்ட மக்கள், மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள்  அனைவரின் தலைவர்களும் இருக்கிறார்கள். ஆனால் அங்கே அ.தி.மு.க.வில்  தே.மு.தி.க. போய் விட்டது. புதிய தமிழகம் போய் விட்டது.

மனித நேய மக்கள் கட்சி போய் விட்டது. ஆனால் இன்னமும் பத்திரிக்கைகள் அ.தி.மு.க. அணி பலமிக்க அணி என்று எழுதுகிறார்கள். டி.வி.களில் பிரச்சாரம் செய்கிறார்கள். மோடி அலை வீசுவது போலவும், அ.தி.மு.க. அதிக தொகுதிகளில் ஜெயித்துவிடும் என்பது போலவும் பிரச்சாரம் மேற்கொண்டிருக்கிறார்கள். கருத்து கணிப்புகள் என்ற போர்வையில் கருத்து திணிப்பு நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இரண்டு மூன்று மாதங்களுக்கு ஒரு சில பத்திரிக்கைகளை படிக்காதீர்கள். சில சேனல்களை பார்க்காதீர்கள்" என்று ஆலோசனை  வழங்கினார்.

புதிய தமிழகம் கட்சி சார்பில் பேசிய அக்கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, "சட்டமன்றத்தில் ஜனநாயகம் இல்லை. மக்கள் பிரச்சினைகளை பேச முடியவில்லை. தமிழகத்திற்கு வர வேண்டிய தொழில்கள் எல்லாம் ஏன் பெங்களூருக்குப் போகிறது என்று கேட்டால் ஒரே நேரத்தில் பதில் சொல்ல மூன்று நான்கு அமைச்சர்கள் எழுந்து நின்று கொள்கிறார்கள். ஆனாலும் பதில் சொல்வதில்லை." என்று கவலை தெரிவித்த  அவரும், "எங்கள் கட்சிக்கு தென் மாவட்டங்களில் கொத்துக் கொத்தாக வாக்கு வங்கி இருக்கிறது. திருமாவளவனுக்கு வட மாவட்டங்களில் கொத்துக் கொத்தாக வாக்கு வங்கி இருக்கிறது. ஜவஹிருல்லாவிற்கு தமிழகம் முழுவதும் வாக்கு வங்கி இருக்கிறது.

தி.மு.க. தொண்டர்கள் செய்ய வேண்டியதெல்லாம் அரவணைத்து தேர்தல் பணியாற்றினால் போதும். நாற்பதுக்கு நாற்பது இந்த அணிதான் வெற்றி பெறும்" என்று ஆருடம் சொன்னார். அடுத்துப் பேசிய ஜவஹிருல்லா, "சிறுபான்மையினருக்கு மத்திய அரசு பணிகளிலும் இட ஒதுக்கீடு பெற்றுத்தர தி.மு.க. பாடுபட வேண்டும். ரங்கநாத் மிஷ்ரா கமிஷன், சாச்சர் கமிட்டி ரிப்போர்ட் போன்றவற்றை அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அதைவிட முக்கியமாக ஈழத்தமிழர்களின் இன்னல்கள் போக்க,  அவர்களுக்கு எதிரான மனித உரிமைகள் மீறலுக்கு சர்வதேச விசாரணை கேட்க வருகின்ற மத்திய அமைச்சரவையில் எந்த இலாகாவை கேட்டு வாங்கிகிறீர்களோ இல்லையோ இந்திய வெளியுறவு இலாகாவை தி.மு.க. கேட்டு வாங்க வேண்டும்"  என்று கோரிக்கை விடுத்தார்.

பிறகு வீரமணி மைக்கைப் பிடித்தார். அவர் தி.மு.க. பற்றிய வரலாறுகளை சுட்டிக்காட்டினார். "1969இல் அண்ணா மறைந்தவுடன் முதலமைச்சர் பொறுப்பேற்க கலைஞர் தயங்கினார். பெரியார்தான் பொறுப்பே ஏற்றுக் கொள்ளச் சொன்னார்" என்றார். அத்துடன் நிற்கவில்லை அழகிரியை அட்டாக் பண்ணினார். பெரியார் ஒரு  முறை சுட்டிக்காட்டிய, "தலைவர் இருக்கும் போது தலைக்குத் தலை அம்பலம் செய்யக்கூடாது" என்ற கருத்தை படித்துக் காட்டி, அழகிரியை நீக்கியது தி.மு.க.வில் பெரிய பிரச்சினை இல்லை என்பதை வலியுறுத்திப் பேசினார்.

அவர், "சிறிய கட்சி ஒழுங்கு நடவடிக்கையை (அழகிரி நீக்கம்) பெரிதாக்கி தி.மு.க. அஸ்தமனம்  ஆகிவிட்டது என்று ஒரு சில பத்திரிக்கைகள் எழுதுகின்றன. இங்கு இருக்கும் கூட்டத்தைப் பார்த்த பிறகும் உங்களுக்கு எப்படி அப்படி எழுதத் தோன்றுகிறது? நானே இக்கூட்டத்திற்கு மக்கள் வெள்ளத்தை நீந்தி காரில் வர முடியாமல் இறங்கி நான்கு கிலோ மீட்டர் தூரம் நடந்தே வந்திருக்கிறேன். ஆகவே இந்த தி.மு.க. எஃகு கோட்டை. இது அஸ்தமனம் ஆகாது" என்று ஆணித்தரமாக வாதிட்டார்.

இந்த மாநாட்டில் "ஹைலைட் ஸ்பீச்" என்றால் அது தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் மற்றும் தி.மு.க. தலைவர் கருணாநிதி ஆகியோரின் பேச்சுக்கள்தான்.  ஸ்டாலின், "அ.தி.மு.க. அரசு பதவியேற்ற பிறகு சட்டம் ஒழுங்கு சீரழிந்து விட்டது. தொழிற்சாலைகள் ஏதும் வரவில்லை. தி.மு.க. ஆட்சியில் 4-வது இடத்தில் இருந்த  தமிழகம் அ.தி.மு.க. ஆட்சியில் 16 வது இடத்திற்குப் போய் விட்டது." என்று பட்டியலிட்டு அ.தி.மு.க. அரசின் பட்ஜெட் புத்தகங்களை வைத்துக் கொண்டு "இந்த திட்டத்தை அறிவித்தார்கள். இதுவரை செய்யவில்லை" என்று புள்ளிவிரங்களுடன் விளாசித் தள்ளினார். வழக்கத்திற்கு மாறாக இந்த மாநாட்டில் மு.க.ஸ்டாலின்  தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி பற்றி அதிக புள்ளி விவரங்களுடன் பேசியது மேடையில் இருந்த அனைவரது புருவங்களையும் உயர்த்தியது.

நிறைவுரையாற்றிய தி.மு.க. தலைவர் கருணாநிதியின் தாக்குதலும் அ.தி.மு.க. அரசின்  மீதுதான் இருந்தது. "அ.தி.மு.க. ஆட்சி வந்ததும் சமச்சீர் கல்வியை ரத்து செய்தார்கள்" என்று கூறி, அது தொடர்பாக அரசுக்கு வந்த நீதிமன்ற கண்டனங்களை விளக்கினார். பிறகு "பெங்களூர் சொத்துக் குவிப்பு வழக்கில் எந்த மாதிரியெல்லாம் மனுப் போட்டு வழக்கை தாமதப்படுத்துகிறார் ஜெயலலிதா அம்மையார்" என்று கூறி அது தொடர்பான  விஷயங்களை பட்டியலிட்டார். தான் ஏன் "அ.தி.மு.க.வை" அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்று அழைப்பதில்லை என்பதை விலாவாரியாக விவரித்தார்.

இறுதியில் கூட்டணி சப்ஜெக்டிற்கு வந்தார். "இப்போது நம்முடன் ஒரு அணி இருக்கிறது. இதில் வேறு சில கட்சிகளும் சேரலாம். அப்போது இந்த அணி பேரணியாக மாறும்" என்று ஆருடம் சொன்னார். அத்துடன் கூட்டணிக்கான நிபந்தனைகள் என்ன என்பதையும் மறு வரையறை செய்தார். அதாவது " சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றும் கட்சிகளும், மதவெறி அரசு அமையவிடாமல் தடுக்கும் கட்சிகளும் தி.மு.க. அணிக்கு வரலாம்" என்றார்.

கடந்த டிசம்பர் மாதத்தில் நடைபெற்ற தி.மு.க. பொதுக்குழுவில் "காங்கிரஸுடனும்,  பா.ஜ.க.வுடனும் கூட்டணி இல்லை" என்று அறிவித்தார்கள்,. அதைத் தொடர்ந்து திருச்சியில் நடைபெற்ற திருப்புமுனை மாநாட்டிற்கு சென்ற தி.மு.க. தலைவர் கருணாநிதி, "இந்திய ஒற்றுமை, மதசார்பற்ற தன்மை, ஊழலற்ற நிர்வாகம், மற்றவர்களையும் மதிக்கும் அண்ணாவின் கொள்கை" போன்றவற்றை அடிப்படையாக வைத்து பாராளுமன்றத் தேர்தலை தி.மு.க. சந்திக்கும் என்று அறிவித்தார்.

இப்போது அதிலிருந்து இறங்கி வந்து, "சேது சமுத்திரத்திட்டத்தை நிறைவேற்றும் கட்சிகள், மதவெறி அரசு அமைய விடாமல் தடுக்கும் கட்சிகள் கூட்டணிக்கு வரலாம்" என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். ஏற்கனவே தே.மு.தி.க.வுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறரார். அதை வெளிக்காட்டும் விதத்தில்தான் திருச்சியில் "விஜயகாந்த் நல்ல ஸ்டென்ட் நடிகர். அவர் பிடிகொடுக்காமல் இருக்கிறார்" என்று தே.மு.தி.க.வுடன் உள்ள கூட்டணிப் பேச்சுவார்த்தை பற்றிச் சொன்னார்.

விஜயகாந்தை "ஸ்டென்ட் நடிகர்" என்று கூறியதில் சில அர்த்தங்கள் இருக்கிறது. அதாவது தமிழகத்தைப் பொறுத்தவரை தி.மு.க.வும், அ.தி.மு.க.வும்தான் ஹீரோக்கள். ஏனென்றால் அக்கட்சிகளால்தான் வெற்றிக் கூட்டணிக்கு தலைமை தாங்க முடியும். அதே நேரத்தில் விஜயகாந்த் போன்றவர்கள் வைத்துள்ள தே.மு.தி.க. எல்லாம் "ஸ்டென்ட் நடிகர்" போல்தான். ஆகவே தி.மு.க. என்ற ஹீரோவிடம் ஸ்டென்ட் நடிகருக்கு உள்ள அளவில் தொகுதி எண்ணிக்கையைக் கேளுங்கள் என்பதுதான் இந்த கருத்தின் பின்னனியாக எடுத்துக் கொள்ளலாம்.

அதன்படி பார்த்தால் ஏற்கனவே தி.மு.க.விற்கும், தே.மு.தி.க.விற்கும் இடையே தொகுதிப் பங்கீடு குறித்து திரைமறைவில் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது போலவும், அதில் "ஸ்டென்ட்  நடிகருக்கு" உள்ள தொகுதிகளின் எண்ணிக்கையை விட அதிக தொகுதிகளைக் கேட்பது போலவும் தி.மு.க. தலைவரின் இந்த வர்ணனை எடுத்துரைக்கிறது. ஆகவே இந்த புதிய நிபந்தனைகளான சேது சமுத்திரத்திட்டமும், மதவெறி அரசு அமைய விடக்கூடாது என்பதும் தே.மு.தி.க.விற்கு பொருந்துகிறதோ இல்லையோ, காங்கிரஸ் கட்சிக்குத்தான் சாலப்பொருத்தம்.

ஏனென்றால் ஆரம்பித்த சேது சமுத்திரத்திட்டத்தை வட இந்தியாவில் உள்ள இந்துத்துவா வாக்கு வங்கிக்கு அஞ்சி கிடப்பில் போட்டது காங்கிரஸ் கட்சிதான் என்று தி.மு.க. நினைக்கிறது. ஆகவே சேது சமுத்திரத்திட்டத்தை நிறைவேற்ற காங்கிரஸ் உறுதி மேற்கொண்டால் மீண்டும் தி.மு.க.வுடன் அக்கட்சிக்கு கூட்டணி வைக்கும் வாய்ப்பு பிரகாசமாக இருப்பது போல் அமைந்துள்ள திருச்சியில் தி.மு.க. தலைவர்  கருணாநிதியின் பேச்சு. ஏனென்றால் "மதவெறி அரசு அமையக்கூடாது" என்பதுதான் காங்கிரஸின் தேர்தல் கோஷமாகவும் இருக்கிறது.

திருச்சியில் கருணாநிதி இந்தக் கருத்தை வெளியிடுவதற்கு முன்பு, தமிழகத்திற்கு பக்கத்து மாநிலமான கேரளாவில் பேசிய சோனியா காந்தி, "இந்திய ஒற்றுமைக்கு காங்கிரஸ் கட்சி மீண்டும் ஜெயித்து வர வேண்டும்" என்று கூறியது கவனிக்கத்தக்கது. கேரளாவில் சோனியா காந்தியும், திருச்சியில் தி.மு.க. தலைவர் கருணாநிதியும் பேசிய அர்த்தமிக்க உரைகளின் பின்னனியில் மீண்டும் தி.மு.க.- காங்கிரஸ் அணி உருவாகும் சாத்தியக்கூறுகள் இருக்கலாம் என்றே தோன்றுகிறது. அக்கூட்டணியில் தே.மு.தி.க.வும் இடம்பெறுமா என்பதுதான் இப்போதைய எதிர்பார்ப்பு.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .