2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

அ.தி.மு.க ஆட்சிக்கு எதிராக உருவாகும் எதிர்ப்பலை

Thipaan   / 2015 டிசெம்பர் 15 , மு.ப. 04:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

மழை வெள்ளம் விட்டாலும் 'மழை அரசியல்' ஓயாது போலிருக்கிறது. இதுவரை 347 பேர் மரணத்துக்குக் காரணமான கனமழை, சென்னை மாநகரத்தின் வீதிகளை சேறும், சகதியுமாக மாற்றி விட்டுப் போயிருக்கிறது. மழை வெள்ளத்தில் சிக்கி மீட்கப்பட்டவர்கள் இதுவரை 17 இலட்சத்தையும் தாண்டி விட்டது.

ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாயம் திருவாரூர், தஞ்சாவூர், நாகபட்டினம் மாவட்டங்களில் பாதிக்கப்பட்டு, அம்மாவட்ட விவசாயிகள் நிர்கதியாகி நிற்கிறார்கள். ஒரு இலட்சம் கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு என்ற பேச்சு தமிழகத்தின் எல்லா திசைகளிலும் ஒலிக்க, தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றின் வெள்ளம் தமிழகத்தின் தென் மாவட்டங்களை மிரட்டி வருகிறது.

அணைகள் பெரும்பாலானவை நிரம்பி வழிகின்றன. பருவமழை இன்னும் முடியாத இந்த நிலையிலேயே இப்படியென்றால், இன்னும் சில வாரங்கள் மழை தொடர்ந்தால் மக்கள் பாதிப்பின் உச்சத்துக்கே போய்விடுவார்களோ என்ற அச்சம் மாநில அரசுக்கு மட்டுமின்றி, மத்திய அரசுக்குமே கூட உருவாகியிருக்கிறது.

இவ்வளவு மோசமான பாதிப்பை உருவாக்கி விட்ட மழை வெள்ளம் பற்றி இப்போது பிரதான எதிர்க்கட்சியான திராவிட முன்னேற்றக் கழகம் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. 'பாதிப்பு மழையால் அல்ல. இது இயற்கை பேரிடரா அல்லது செயற்கை பேரிடரா' என்று கேள்வி எழுப்பியிருக்கிறார் தி.மு.க. தலைவர் கருணாநிதி. அதற்குக் காரணம் சென்னை அருகில் உள்ள செம்பரம்பாக்கம் ஏரி.

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஆதாரங்களாக நான்கு ஏரிகள் இருக்கின்றன. செம்பரம்பாக்கம், பூண்டி, சோழாவரம், ரெட்கில்ஸ் என்று உள்ள நான்கு ஏரிகளும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் போன்ற மாவட்டங்களில் பெய்த கடும் மழையால் பெருகி விட்டது. இவற்றில் செம்பரம்பாக்கம் ஏரியை அரசு உரிய காலத்தில் திறந்து விடவில்லை என்ற குற்றச்சாட்டு இப்போது கிளம்பியிருக்கிறது.

இந்த ஏரி நீரின் கொள்ளளவு 24 அடி. முதல் மழையின் போதே செம்பரம்பாக்கம் ஏரி வேகமாக நிரம்பி விட்டது. இந்த சூழ்நிலையில் செம்பரம்பாக்கம் ஏரி நீரை திறந்து விட வேண்டும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் சொன்னதாகவும், ஆனால் அது பற்றி முடிவு எடுப்பதில் தலைமைச் செயலாளர் தாமதம் செய்து விட்டார் என்றும் தகவல்கள் பறக்கத் தொடங்கின. நவம்பர் 18, 19 ஆகிய திகதிகளில் செம்பரம்பாக்கம் தண்ணீரை சிறுகச் சிறுக திறந்து விட்டிருந்தால், டிசம்பர் 1ஆம் திகதி பெய்த கனமழையின் போது செம்பரம்பாக்கம் ஏரியின் கொள்ளளவு அளவுக்கு அதிகமாகியிருக்காது என்பது பொதுப்பணித்துறை அதிகாரிகளின் கருத்து என்றும் எதிர்கட்சிகள் கூறி வருகின்றன.

முதல் மழையின் போது தண்ணீர் திறந்து விடுவதில் ஏற்பட்ட தாமதம் டிசம்பர் 1ஆம் திகதி பெய்த மழையால் செம்பரம்பாக்கம் ஏரி உடையும் ஆபத்தை எட்டியது.

அதனால் ஏரியிலிருந்து அதிக அளவுக்கு தண்ணீர் திறந்து விட்டதால்தான் சென்னை மாநகரம் நீரில் மூழ்கி இவ்வளவு பெரிய பேரிடரை உருவாக்கி விட்டது என்ற குற்றச்சாட்டுகளை அனைத்து கட்சிகளும் முன் வைக்கின்றன. டிசம்பர் 1ஆம் திகதி மட்டும் சுமார் 65,000 கன அடி நீர், இந்த நான்கு ஏரிகளில் இருந்தும் திறந்து விடப்பட்டது. இதில் முக்கியமாக செம்பரம்பாக்கத்தில் திறந்து விடப்பட்ட தண்ணீர், சென்னை புறநகரை மூழ்கடித்து விட்டது என்ற குற்றச்சாட்டை முதலில் முன் வைத்து 'நீதி விசாரணை நடத்த வேண்டும்' என்று கோரிக்கை வைத்தவர் தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின். அதற்கும் முன்பே மழை வெள்ள சேதங்கள் குறித்து நடிகர் கமல்ஹாசன் 'என் வரி எங்கே போகிறது.

அரசு செயல்படுகிறதா' என்றெல்லாம் காட்டமாக கேள்வி எழுப்ப, பொதுப்பணித்துறை அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் 'கருத்து கந்தசாமி போல் கமல்ஹாசன் பேசக் கூடாது' என்று காட்டசாட்டமாக பதில் கொடுத்தார். நடிகர் கமல்ஹாசனின் பேட்டிக்குப் பின்னர்,  'நீதி விசாரணை வேண்டும்' என்று கேட்டது மு.க.ஸ்டாலின்.

அதற்கு உடனே, 'அரசியல் தலைவராக உருவாக வேண்டும் என்று நினைப்பவர்  விவரம் புரியாமல் பேசுகிறார்' என்று ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்தார் தமிழக மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன். அமைச்சரின் பதில் வந்தவுடன் தி.மு.க. தலைவர் கருணாநிதியே களத்துக்கு வந்தார். 'நடந்தது இயற்கை பேரிடரா அல்லது செயற்கை பேரிடரா' என்று தலைப்பிட்டு ஓர் அறிக்கையை வெளியிட்டார். அதில் 'செம்பரம்பாக்கம் ஏரி திறப்பதில் நடைபெற்றது என்ன என்பது பற்றி விசாரிக்க வேண்டும்' என்றார்.

அடுத்தநாளே யாரும் எதிர்பாராத விதமாக தமிழக ஆளுநரை சந்தித்த தி.மு.க. தலைவர் கருணாநிதி, 'செம்பரம்பாக்கம் ஏரி திறப்பதில் பொறுப்புடன் செயல்படாத தலைமைச் செயலாளர், முதலமைச்சர் உள்ளிட்டவர்கள் மீது Command Responsibility நிர்ணயிக்கும் விதத்தில் பதவியிலிருக்கும் உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவர் தலைமையில் விசாரணை நடத்தப்பட வேண்டும்' என்று ஆளுநர் ரோசய்யாவை சந்தித்து வலியுறுத்தினார்.

இந்த சந்திப்பு தமிழக அரசியலில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் மழை வெள்ள சேதம் என்பது இயற்கையாக வந்தது அல்ல. அது அரசின் தவறான கையாளுதலால் ஏற்பட்டது என்று பிரசாரம்  களை கட்டி எழுந்திருக்கிறது.

எதிர்கட்சியினர், செம்பரம்பாக்கம் ஏரி திறந்ததில் இவ்வளவு பெரிய பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தாலும், இதுவரை முதலமைச்சர் ஜெயலலிதா, பத்திரிகையாளர்களை சந்தித்து இப்பிரச்சினை குறித்து விளக்காதது பலருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. 'பத்திரிகையாளர் சந்திப்பு மட்டும் அல்ல'  இதுவரை அவர், செம்பரம்பாக்கம் ஏரி திறப்பதில் நடைபெற்றது என்ன என்பது பற்றி எந்த அறிக்கையும் கூட விடவில்லை. அதனால் எதிர்கட்சிகளின் குற்றச்சாட்டு வலுப்பெற்று வருகிறது. அ.தி.மு.க அரசு இப்போது நான்கரை ஆண்டுகாலத்தில் நிற்கிறது. இதுவரை அ.தி.மு.கவுக்கு பெரிய அளவில் அதிருப்தி அலைகள் உருவாகவில்லை என்பதுதான் நிலையாக இருந்தது. ஆனால் அது இப்போது மாறி விட்டது.

மழை வெள்ள சேதத்துக்கு என்னதான் நடவடிக்கை எடுத்தாலும், நிவாரணங்கள் வழங்கினாலும், 'செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு' அ.தி.மு.க அரசுக்கு பெரிய கெட்ட பெயரை சம்பாதித்துக் கொடுத்துள்ளது. அதுவும் அதிகாரிகளுக்கு உரிய வழிகாட்டுதல் இல்லாததால் இந்த பேரிடர் ஏற்பட்டு விட்டது என்ற எண்ணம் தமிழக மக்கள் மத்தியில்- மழை பாதித்த பகுதிகளில் மட்டுமல்ல அனைத்துப் பகுதிகளிலும் உருவாகி வருகிறது.

செயல்படாத அரசு என்று எதிர்கட்சிகள் செய்யும் பிரசாரத்துக்கு 'மழை வெள்ள பாதிப்பும்' 'செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு பிரச்சினையும்' மேலும் உரம் போட்டு வருகிறது. அ.தி.மு.கவினரும் சரி, அரசு தரப்பில் உள்ள அதிகாரிகளும் சரி இன்னும் மக்களை நம்ப வைக்கும் அளவிற்கு செம்பரம்பாக்கம் ஏரிப் பிரச்சினையில் உருப்படியான கருத்தை தெரிவிக்க முன் வரவில்லை.

பொதுவாக ஆட்சியிலிருக்கும் கட்சிக்கு 'அதிருப்தி அலை' உருவாக்க ஏதாவது ஒரு பிரச்சினை அந்தக் கட்சி ஆட்சியின் இறுதிக் கட்டத்தில் வெடிக்கும். 1996இல் அ.தி.மு.க ஆட்சியிலிருந்த போது 'வளர்ப்பு மகன் திருமணம்' அப்படியொரு சிக்கலை ஏற்படுத்தியது. 2006 முதல் 2011 வரை தி.மு.க. ஆட்சியிலிருந்த போது '2ஜி அலைக்கற்றை ஊழல்' தி.மு.க.வுக்கு அதிருப்தி அலை உருவாக காரணமாக அமைந்தது.

அதே போல் இப்போது 2011-16 ஆட்சியில் 'செம்பரம்பாக்கம் ஏரி திறப்பும், மழை வெள்ள சேதமும்' அ.தி.மு.க ஆட்சிக்கு அதிருப்தி அலை உருவாக்கும் காரணங்களாக மிக வேகமாக மாறி வருகின்றன. இதுவே, அ.தி.மு.க ஆட்சிக்கு பெரிய சவாலாக இனி எஞ்சியிருக்கும் நான்கு மாதங்களில் இருக்கப் போகிறது.

பெப்ரவரி மாதத்தில் தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்து விடும். அதற்குள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை எப்படி மீட்டு எடுக்கப் போகிறது அ.தி.மு.க அரசு என்பதை வைத்தே அடுத்த ரவுண்ட்டில் நடக்கவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.கவுக்கு வெற்றி இருக்குமா என்பதை உறுதி செய்ய முடியும். ஆனால் இன்றைய திகதியில் 'எதிர்ப்பு வாக்குகள் இல்லாமல் இருந்த அ.தி.மு.க ஆட்சிக்கு எதிர்ப்பு அலையே' உருவாகி விட்டது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X