Thipaan / 2015 டிசெம்பர் 12 , மு.ப. 04:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடந்த ஜனவரி 8ஆம் நாள் நடந்த ஜனாதிபதி தேர்தலை அடுத்து இடம் பெற்ற ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர், இலங்கையில் அதிக சர்ச்சைகளை உருவாக்கியுள்ள நிறுவனம் அவன்ட் காட் என்பதில் சந்தேகமில்லை.
ஆட்சி மாற்றத்தையடுத்து, சில நாட்களில் அவன்ட் காட் நிறுவனத்தின் ஆயுதக் களஞ்சியங்களும், மிதக்கும் ஆயுதக் கப்பல்களும் சோதனையிடப்பட்டன. அங்கிருந்த ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. இது தொடர்பான வழக்குகளும் விசாரணைகளும் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றன.
இந்த விவகாரம் தொடர்பாக முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ஷவும் விசாரணைகளை எதிர்கொண்டு வருகிறார். வேறும் பல முன்னாள் இராணுவ, கடற்படை அதிகாரிகளும் இந்த நிறுவனம் பற்றிய சர்ச்சைகளால் சிக்கல்களில் மாட்டிக் கொண்டிருக்கின்றனர்.
இந்த விசாரணைகளின் போது, பொய்ச்சாட்சியம் அளித்து மாட்டிக் கொண்ட, நிறுவனத்தின் முகாமையாளரான முன்னாள் இராணுவ அதிகாரி மேஜர் ஜெனரல் காமினி ஜெயசுந்தர மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த அவன்ட் காட் விவகாரம் தொடர்பாக ஆரம்பத்தில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கும், இப்போது இந்த விசாரணைகள் செல்லுகின்ற போக்குக்கும் நிறையவே வித்தியாசங்கள் உள்ளன.
இந்த நிறுவனத்தின் ஆயுதங்கள் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்டிருக்கலாம், அவ்வாறு பயன்படுத்த திட்டமிடப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் தான் ஆரம்ப கட்டத்தில் விசாரணைகள் தொடங்கின.
முன்னர் அதிகளவில் பேசப்பட்ட அலரி மாளிகை சதித்திட்டத்தின் ஓர் அங்கமாகவே இந்த ஆயுதக் களஞ்சியங்கள் சந்தேகிக்கப்பட்டன. ஆனால், இந்த விசாரணைகள் கிணறு வெட்டப் பூதம் கிளம்பியது போல, இப்போது புதிய பல விடயங்களை அம்பலப்படுத்தி வருகிறது.
அவன்ட் காட் நிறுவனம், சட்டரீதியாகச் செயற்பட்டதா, இல்லையா? அதன் ஆயுதங்கள் முறையாகப் பெறப்பட்டதா, சட்டவிரோதமாக பயன்படுத்தப்பட்டதா? என்பது உள்ளிட்ட விடயங்களில் இப்போது விசாரணைகள் இடம்பெறுகின்றன. இந்த விடயத்தில், அரசாங்கத்துக்குள்ளேயும் கூட கருத்து முரண்பாடுகள் இருக்கின்றன.
அவன்ட் காட் நிறுவனத்துக்கு ஆதரவாக கருத்து வெளியிட்ட அமைச்சர் திலக் மாரப்பன தனது பதவியை இழக்கும் நிலையும் ஏற்பட்டது. அதுபோலவே, இந்த நிறுவனத்துக்கு ஆதரவாக குரல் கொடுத்த அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ மீது அரசதரப்புக்குள் இருப்பவர்களே கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருதுகின்றனர்.
அவன்ட் காட் நிறுவனத்தை இப்போது அரசாங்கம் கடற்படையிடம் ஒப்படைத்துள்ள நிலையில், இதன் மூலமான வருமானங்களை அந்த நிறுவனம் இழந்து போயிருக்கிறது.
இது, இந்த நிறுவனத்தை செயற்படுத்திய, முன்னாள் படை அதிகாரிகளுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தச் சூழலில் அவன்ட் காட் நிறுவனம் பற்றிய அதிர்ச்சியூட்டும் பல தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
அதாவது இந்த நிறுவனம் அரசியல்வாதிகளையும், ஊடகங்களையும் தனது கைக்குள் போட்டுக் கொண்டு, தப்பிக்க முனைந்திருக்கிறது. இன்னமும் முயற்சிக்கிறது என்ற உண்மை வெளிவரத் தொடங்கியிருக்கிறது. பொதுவாகவே பலம்வாய்ந்த வர்த்தக நிறுவனங்கள், தமது வர்த்த நடவடிக்கைகளுக்கு இடையூறுகள் ஏற்படுவதை தவிர்க்க அரசியல்வாதிகள், ஊடகங்களைத் தமது கைக்குள் வைத்துக் கொள்வது வழக்கம் தான்.
ஆனாலும், அவன்ட் காட் நிறுவனம் அதற்கும் அப்பாலான ஒரு கட்டத்தில் இருக்கிறது என்பதை இப்போது வெளியாகின்ற தகவல்கள் உணரவைக்கின்றன. அதாவது, அரசாங்கத்தின் முடிவுகளைக் கட்டுப்படுத்துகின்ற வகையிலும் ஊடகங்களைக் கட்டப்படுத்துகின்ற வகையிலும் இந்த நிறுவனம் செயற்பட முனைந்துள்ளதா என்ற சந்தேகங்களை எழுப்பியிருக்கிறது.
அவன்ட் காட் நிறுவனத்துக்குச் சார்பாக கருத்து வெளியிட்ட அமைச்சர்கள் இருவர். ஒருவர் திலக் மாரப்பன. அடுத்தவர் விஜேதாஸ ராஜபக்ஷ. இருவருமே தொழில்முறை சட்ட நிபுணர்கள். இவர்கள், நாடாளுமன்றத்தில் அவன்ட் காட் நிறுவனத்தின் செயற்பாடுகள் சட்டபூர்வமானவை என்று தெரிவித்திருந்தனர்.
இதன் காரணமாக, திலக் மாரப்பன தனது அமைச்சர் பதவியை இழக்க நேரிட்டது. அதற்கு மற்றொரு காரணம், அவன்ட் காட் நிறுவனத்தின் சட்ட ஆலோசகராகவும் திலக் மாரப்பன பணியாற்றியிருந்தார். விஜேதாஸ ராஜபக்ஷவும், அந்த நிறுவனத்திடம் இலஞ்சம் பெற்றதாக அரசியல்வாதிகள் பலரும் குற்றம்சாட்டினர். எனினும் அவர் அதனை மறுத்தார்.
இந்தச் சந்தர்ப்பத்தில், அவன்ட் காட் நிறவனத்தின் அதிகாரிகள் தாம் சட்டரீதியாகவே இயங்கியதாகவும், யாருக்கும் இலஞ்சம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் வாதிட்டிருந்தனர்.
அவன்ட் காட் நிறுவனத்துக்கு எதிராக குரல் கொடுப்பவர்களில் முக்கியமான அமைச்சர்கள் மூவர். சம்பிக்க ரணவக்க, அர்ஜுன ரணதுங்க, ராஜித சேனாரத்ன ஆகியோரே அவர்கள்.
அதைவிட அரசுக்கு வெளியே இருந்து ஜேவிபியின் அநுர குமார திசாநாயக்க, ஜனநாயக கட்சியின் சரத் பொன்சேகா ஆகியோர் குரல் எழுப்பி வருகின்றனர். இந்த ஐந்து பேரும் தான், அவன்ட் காட் நிறுவனத்துக்கு எதிரான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று தீவிரமாக வலியுறுத்தி வருகின்றனர்.
இந்தச் சந்தர்ப்பத்தில், அவன்ட் காட் அதிகாரிகள் சிலர் நடத்திய செய்தியாளர் மாநாட்டில், அமைச்சர்கள் சம்பிக்க ரணவக்க, அர்ஜுன ரணதுங்க, ராஜித சேனாரத்ன ஆகியோர் தம்மிடம் இலஞ்சம் கோரியதாகவும் அது கிடைக்காததால் தான், தம்மீது குற்றச்சாட்டுகளை கூறுவதாகவும் புதியதொரு குண்டைத் தூக்கிப் போட்டனர். உடனடியாகவே அவர்கள், தம்மீதான குற்றச்சாட்டை விசாரிக்குமாறு அமைச்சர்கள் மூவரும் பொலிஸ் மா அதிபரை நாடினர்.
அந்த விவகாரம் குறித்தும் விசாரணைகள் நடக்கின்ற நிலையில், சரத் பொன்சேகாவுக்கு தாம் 50 மில்லியன் ரூபாயைக் கொடுத்தாக அவன்ட் காட் நிறுவனம் புதிய குற்றச்சாட்டை சுமத்தியது. அவரது வாகன மற்றும் அலுவலக வாடகையை தாமே செலுத்தியதாகவும் அதற்கு ஆதாரங்கள் உள்ளதாகவும். அவன்ட் காட் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
இதையடுத்து, தன் மீதான குற்றச்சாட்டை நிராகரித்துள்ள சரத் பொன்சேகா, பொய்க்குற்றச்சாட்டை சுமத்திய அவன்ட் காட் மீது ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிலும் முறையிட்டுள்ளார்.
அதேவேளை அவன்ட் காட் நிறுவனம் தமக்கும் இலஞ்சம் வழங்க முன்வந்ததாகவும், நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரே தம்மை அணுகியதாகவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவும் கூறியிருக்கிறார். அவன்ட் காட் விவகாரம் தீவிரமடைந்த போது, அதனை மறைப்பதற்கே தன்னிடம் அந்த நாடாளுமன்ற உறுப்பினர் வந்ததாகவும் சந்திரிகா குறிப்பிட்டிருந்தார்.
அரசியல்வாதிகள் மட்டுமன்றி, ஊடகவியலாளர்கள் பலரையும், இந்த நிறுவனம் தன் கைக்குள் போட்டிருந்ததாகவும், அவன்ட் காட் நிறுவனத்திடம் பணம் வாங்கிய ஊடகவியலாளர்கள் பற்றிய ஆதாரங்கள் தம்மிடம் உள்ளதாகவும் தகவல் வெளியிட்டிருக்கிறார் அநுரகுமார திசாநாயக்க.
இந்த எல்லா சம்பவங்களையும் பார்க்கும் போது, அவன்ட் காட் நிறுவனம், அரசாங்கத்தை ஆட்டிப் படைக்கின்ற ஒன்றாக மாற முனைந்திருப்பதாகவே சந்தேகம் கொள்ள வைக்கிறது. முக்கிய அரசியல்வாதிகளை மடக்கியிருக்கிறது அல்லது மடக்க முனைந்திருக்கிறது. ஊடகவியலாளர்களையும் மடக்கி தமது சார்பில் பேச வைத்திருக்கிறது.
பொதுவாக மிகப்பெரிய வர்த்தக நிறுவனங்கள் இத்தகைய உத்திகளைக் கையாள முனைவது வழக்கம் தான். அரசியல் தலைவர்கள், அமைச்சர்களுக்கு இலஞ்சம் கொடுக்கவில்லை அல்லது கொடுக்க முனையவில்லை என்று இந்த நிறுவனத்தினால் கூற முடியாது.
ஏனென்றால், சரத் பொன்சேகாவுக்கு 50 மில்லியன் ரூபாவைக் கொடுத்ததாகவும், அவரது அலுவலகம், வாகனங்களுக்கு தாமே செலவு செய்ததாகவும் ஒப்புக்கொண்டிருக்கிறது இந்த நிறுவனம்.
எனவே, யாருக்குமே, இலஞ்சம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்று இந்த நிறுவனத்தினால் ஒருபோதும் வாதிட முடியாது. சட்டரீதியாகச் செயற்படும் நிறுவனம் ஒன்று எதற்காக முக்கிய அரசியல்வாதிகளின் காலைப்பிடிக்க வேண்டும், இலஞ்சம் கொடுக்க முனைய வேண்டும்? என்ற கேள்வி இந்தச் சந்தர்ப்பத்தில் எழுவது தவிர்க்க முடியாதது.
உண்மையாகவும் நேர்மையாகவும் அவன்ட் காட் நிறுவனம் செயற்பட்டிருந்தால் இத்தகைய குறுக்கு வழி முயற்சிகளில் இறங்க வேண்டிய தேவை எழுந்திருக்காது. ஆரம்பத்தில் அவன்ட் காட் மீதான நடவடிக்கையை ஓர் அரசியல் பழிவாங்கலாக இருக்குமோ என்று சந்தேகித்தவர்களுக்குக் கூட, இந்த விடயம் உறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிறுவனம் கடந்த 2012ஆம் ஆண்டுக்குப் பின்னர் சம்பாதித்த பணம் பில்லியன் கணக்கான ரூபாயாகும். நாளொன்றுக்கு 3 மில்லியன் ரூபாயை இந்த நிறுவனம் வருமானமாகப் பெற்று வந்தது.
ஆண்டுதோறும் கிடைத்த பெருமளவு வருமானம் தான், அரசாங்கத்தை ஆட்டிப்படைக்கின்ற அளவுக்கு துணிச்சலைக் கொடுத்திருக்கிறது. அவன்ட் காட் நிறுவனம் சட்டரீதியாகவே செயற்படுவதாகவே தம்மை நிரூபித்துக் கொண்டாலும் கூட, சட்டத்தின் பிடியில் இருந்து இலகுவாக தப்பிக்க முடியாது.
சரத் பொன்சேகா தம்மிடம் இலஞ்சம் வாங்கியதாக கூறியுள்ள குற்றச்சாட்டின் மூலம் இலஞ்சம் கொடுத்ததான ஒப்புதல் வாக்குமூலத்தையும் அந்த நிறுவனம் கொடுத்திருக்கிறது.
இது, அவன்ட் கார் நிறுவனம் தனது தலையில் தானே மண் அள்ளிப் போட்டதற்கு சமம். இந்த விடயத்தில் அவன்ட் காட் தனக்குத் தானே புதைகுழியை வெட்டியிருக்கிறது.
4 hours ago
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
8 hours ago
8 hours ago