2024 மார்ச் 28, வியாழக்கிழமை

ஆசிரிய வாண்மைத்துவப் பல்கலைக்கழகம்: அவசியம் உணராதது ஏன்?

Johnsan Bastiampillai   / 2021 ஒக்டோபர் 10 , பி.ப. 03:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-லக்ஸ்மன்

சர்வதேச ரீதியில் அபிவிருத்திப் பொருளாதாரத்தின் விருத்தியை அடிப்படையாகக் கொண்டு சகல துறைகளும் வாண்மைத்துவம் மிக்கதாக மாற்றமடைந்திருக்கின்றன. இச் சூழ்நிலையில் இலங்கை போன்ற வளர்முக நாடுகள், சர்வேதச சந்தைப் போட்டியிலில் வாண்மைத்துவப் போட்டிப் பற்றாக்குறையினை நிவர்த்தி செய்ய முடியாமல் திண்டாடுகின்றமை வெளிக்கிளம்பி நிற்கின்றது.

இத்தகைய சூழ்நிலை காரணமாக, நாட்டினுடைய தேசிய அபிவிருத்தி என்பது பொருளாதாரப் பொறிமுறை மூலோபாயத்தின் வளர்ச்சிப் படிநிலையில் துறைசார் வாண்மைத்துவ செயல்நிலை இன்மையின் பற்றாக்குறையினையே வெளிப்படுத்தி நிற்கின்றது.  இன முரண்பாடுகளும் தொடர்ச்சியான யுத்தமும் சர்வதேச இராஜரீக அணுகுமுறைகளும் எமது நாட்டின் தேசிய இலக்குகளை அடைவதற்கான வீரியமின்மையை நன்கு படம் பிடித்துக் காட்டுகின்றன.

அந்த வகையில், எதிர்கால சந்ததியினரைத் தயார்படுத்தி நிற்கும் ஆசிரிய கல்வி முறைமைகளினதும், அதன் பயிற்சி வழிகாட்டல் நிலைகளினதும் மிக மோசமான பின்னடைவுகளே இலங்கை நாட்டின் இறையாண்மையினையும் அரசியல் கொள்கைகளினையும், பொருளாதார அபிவிருத்தி முறைமைகளினையும், செயற்பாட்டு ரீதியான தளம் நோக்கிய பயணிப்பின் பின்னடைவிற்கான காரணங்களாக முன்வைக்கப்படுகின்றன.

வாண்மைத்துவ சேவைகளை உற்பத்தி செய்தும் அதனை  வளம்படுத்தியும் நிற்கின்ற ஆசிரிய சேவையானது வாண்மைத்துவமின்றிக் காணப்படுவதனால் பல்வேறு பிரதிகூலங்கள் உருவாகின்றன. இந்நிலையில், இலங்கையினுடைய தேசிய அபிலாஷைகளையும் நிறை பொருளாதார உற்பத்தி முறை நோக்கிய செயற்பாட்டு ரீதியான கல்வி முறைமைகளையும்  அதனை உறுதிப்படுத்துகின்றதான நடைமுறை சார் கொள்கை வகுப்பினையும் பயில் வழிப்படுத்தல்கள் மூலம் முன்வைக்கின்ற வாண்மைப் பலம் பொருந்திய எதிர்கால ஆசிரிய படையணி ஒன்றே தேவையாகும். 

கடந்த தேர்தலில் அறுதிப் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிய ஜனாதிபதி கோட்டாபயவின் அதிகார மையத்துக்கு உட்பட்ட அரச அதிகார முறைமையின் கீழ் முன் மொழியப்பட்ட சுபீட்சத்துக்கான எதிர்காலம் என்ற தேர்தலுக்கான வேலைத்திட்டத்திற்கு அமைவாக,  இலங்கையின் பல்துறை சார் உற்பத்திக் கொள்கைகளை அமலாக்குகின்ற, நடைமுறைப்படுத்துகின்ற தேசிய இலக்குகள் நோக்கிய பயணிப்பின் அடிநாதமாக விளங்குகின்ற ஆசிரிய படையணியின் வாண்மைத்துவம்மிக்க செயலொழுங்கின் கட்டுறுதிமிக்க மேற்பார்வை, அவதானிப்பு, செயற்பாட்டு ரீதியான செயன்முறைகள் பலவீனமடைந்துள்ள சூழ்நிலையில் அதனை பக்க விளைவுகளிலிருந்து மீட்டு எடுப்பதற்கான வேலைத்திட்டமாக இலங்கை ஆசிரியர் படைணியை வாண்மைத்துவம் மிகுற்த படையணியாக கட்டியெழுப்புவதற்கான அடிப்படை வேலைத்திட்டம் மிகுந்த செயலூக்கப் பொருத்தப்பாடுடையதாகும்.

அதற்காக தேசிய கல்விக் கல்லூரிகளையும் ஆசிரிய கலாசாலைகளையும் ஆசிரிய மத்திய நிலையங்களையும் ஒன்றிணைத்து அங்கு பணியாற்றுகின்ற இலங்கை ஆசிரிய கல்வியியலாளர் சேவையில் அங்கத்துவம் வகிக்கும் நிரந்தர தொழில் வல்லுநர்களை அடிப்படையாகக் கொண்டு, சுயாதீன கல்விப் பல்கலைக்கழகம் ஒன்றினை ஸ்தாபிப்பதல் முக்கியமானதாகும்.

உலகலாவிய ரீதியில் பல நாடுகள் ஆசிரியர் கல்விக்கான அரச மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களை உயர்வினைத்திறன் கொண்ட நிறுவனங்களாக நிர்வகிக்கின்றன. உலகளாவிய கல்விப் போக்கில், ஆசிரியர் கல்விக்கான தரம் மற்றும் உள்ளீர்ப்பு முறைகள் உயர் தகைமை கொண்டதாக காணப்படுகின்றது. ஆசிரியர் வாண்மைக்கான கல்வித்தரமும் நிறுவனக் கட்டமைப்பும் உயர்நிலைகொண்டதாக உள்ளன. அவை ஆசிரியர்களுக்கான தனித்துவமான கல்வியினை வழங்குகின்றன.  

 இவ்வாறு பல பல்கலைக்கழகங்கள் தனித்துவமான ஆசிரியர் கல்விக்கான பல்கலைக்கழக கல்லூரிகளை உருவாக்கி நிர்வகித்து வருகின்றன. இவ்வாறான புரிதல்கள் வழியில் நாம் எமது நாட்டுக்கான ஆசிரியர்களின் வாண்மைத்துவ நிலைக்கான நிறுவனவாக்கத்தினை உருவாக்க உழைத்தல் அவசியமாகின்றது. 

ஆசிரியர் கல்விக்கான தனிச்சிறப்புமிக்க பல்கலைக்கழகம் என்பது பல நிறுவனக் கட்டமைப்பு கொண்டதாக சிந்திக்கப்பட வேண்டும். அப்போதுதான் கால நீட்சியில் புலமையாளர்களையும் சுதந்திரமான ஆசிரியர்களையும் கல்வி பற்றிய தேடல்களையும் கொண்ட சுதந்திரமான நிறுவனமாக வளர வாய்ப்புண்டு. அந்தவகையில்தான் ஆசிரியர்களுக்கான பல்கலைக்கழகம் ஒன்றின் உருவாக்கம் என்பது நாட்டின் அபிவிருத்திச் சுட்டியில் பெரும் மாற்றங்களை உருவாக்கும்.

இந்தப்பின்புலத்திலே, இலங்கை ஆசிரிய சேவை தாபிதமானது அதன் ஆசிரிய அங்கத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு மீள் கட்டமைப்புச் செய்யப்பட வேண்டியுள்ளது. இந்த வகையில் இந்தமீள் கட்டமைப்புக்கான அச்சாணியாக சர்வதேச  சமூகப் பொருளாதார, அரசியல், அபிவிருத்தி உற்பத்தி முறைகளுக்கு அமைவாக அதன் சவால்களை எதிர் கொள்ளக்கூடிய வகையிலும் எமது தேசத்தின் தேசிய இலக்குகளை அடையக் கூடிய வகையிலும் நாட்டுக்குப் பொருத்தமுடைய சமூகக் பொருளாதார பாரம்பரிய கலை பண்பாட்டு அம்சங்களைப் பேணுகின்றதும் வளங்குகின்றதுமான நற்பிரஜைகள் சார் உற்பத்தி முறைமையினை உற்பத்தி செய்கின்ற முறைமையும் ஆசிரிய வாண்மைத்துவக் கல்வி முன்மொழியப்பட வேண்டும்.

அந்த வகையில் இலங்கையில் இந்தக் கல்வி முன்னெடுப்புக்களை செயற்படுத்தி வருகின்ற ஆசிரிய கல்வியியலாளர் சேவையினரின் புலமை சார் புலமையினை முழுமையாகப்பயன்படுத்தி ஆசிரியர்களுக்கான சுயாதீனப் பல்கலைக்கழகம் ஒன்று அமைக்கப்பட வேண்டிய தேவையுள்ளது.

இந்தஅடிப்படையில் நாட்டினுடைய எதிர்காலம் கருதி கட்டுறுதிமிக்க எதிர்கால சுபீட்சத்துக்கு உதவக்கூடிய வகையில் வளப்பற்றாக்குறையுடன் கல்லூரிகளுக்குள் முடக்கி வைக்கப்பட்டுள்ள ஆசிரிய கல்வியியலாளர் சேவையினையும், அவர்கள் பணிபுரியும் நிறுவனங்களையும் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் கீழ் ஒன்றிணைத்து கல்விக்கான சுயாதீன பல்கலைக்கழகம் உருவாக்குவதன் மூலமே இந்த நாட்டின் தேசிய ஒருமைப்பாடுடையதும் தன்நிறைவுடையதுமான பொருளாதார அபிவிருதி உற்பத்தி முறைகளினையும், நாட்டுக்குத் தேவையான பிரஜைகளையும் உற்பத்திசெய்ய முடியும்.

தேசிய கல்வியியற் கல்லூரிகளை இணைத்து ஆசிரியர் கல்வி பல்கலைக்கழகம் ஒன்றினை ஸ்தாபிப்பதற்கான செயற்படுகள் கடந்த வருடத்தில் ஆரம்பிக்கப்பட்ருந்தாலும் அது அமைச்சரவை அங்கிகார பத்திரம் வரை சென்று, இப்போது அது நடைமுறைப்படுத்தப்படாமை காரணமாக இலங்கை ஆசிரியர் கல்வியியலாளர் சேவை தொழிற்சங்கம்  தொழிற்சங்க நடவடிக்கையை நடத்துகின்ற சூழ்நிலையைத் தோற்றுவித்திருக்கிறது.

இந்தத் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக கல்வியற் கல்லூரிகளிலும் ஆசிரியர் கலாசாலைகளிலும் புதிய மாணவர்களை சேர்த்துக் கொள்ளும் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.  அதே நேரம், இரண்டாம் வருட பயிற்சி ஆசிரியர்களுக்காக நடத்தப்படும் நிகழ்நிலை வகுப்புக்கள், கணிப்பீடுகள், இணைப்பாடவிதான செயற்பாடுகள் நடைபெறவில்லை. அத்துடன், மூன்றாம் வருட மாணவர்களின் கணிப்பீட்டுப் பணிகளிலிருந்து விரிவுரையாளர்கள் விலகியிருக்கிறார்கள். பரீட்சை, புள்ளிகளைப் பெற்றுக் கொடுத்தல், கணிப்பீடு தொடர்பான உரிய நிறுவனங்களுடனான பணிகளும் நடைபெறமாலிருக்கின்றன. 

ஜனாதிபதியின் சுபீட்சமான எதிர்கால நோக்கு கொள்கைப் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்ட தாதியர் கல்வி, ஆசிரியர் கல்விக்கான பல்கலைக்கழகம் ஆகிய இரண்டினை ஸ்தாபிப்பதற்காக பல்கலைக்கழக சட்டமூலத்தை திருத்தி முன்னாள் கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் 2020 டிசம்பரில்  அமைச்சரவை பத்திரம் முன்வைத்து அனுமதியை பெற்றவுடன் விசேட நோக்கங்களுக்கான பல்கலைக்கழகங்களை உருவாக்குவதற்கான சந்தர்ப்பம் உருவாக்கப்பட்டது.

இந்த நிலையில் இந்தச் செயன்முறையினை தடுப்பதற்கான முயற்சிகள் நடைபெறுவதாக அறிய முடிகிறது. தற்போது கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தனக்கு இந்நிலைமை தொடர்பாக தெரியப்படுத்தி, பல கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது. இதற்குள் நடைபெறுகின்ற கலந்துரையாடல்கள், பேச்சுவார்த்தைகள் எதுவும் பயனற்றதாகவே இருந்து வருகின்றன. தற்போது நடைபெற்றுவரும் அதிபர்- ஆசிரியர்களின் போராட்டத்திற்கு எவ்வாறு உந்துதல்கள், ஒத்தாசைகள், ஆதரவுகள் இல்லையோ அதே போன்றே இதிலும் காணப்படுகிறது. அதனை நிவர்த்திக்க வழிகள் தேடப்படவில்லை என்பதே உண்மை.

ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடனத்தை மாற்றத்திற்குள்ளாக்கி கல்வியியற் கல்லூரிகளின் பீடாதிபதிகளினதும் விரிவுரையாளர்களினதும் கருத்துக்களுக்கு இடமளிக்காது இதுவரை கல்வியியற் கல்லூரிகளில் பண்புத்தரம் தொடர்பாக கவனம் செலுத்தாத தேசிய கல்வி நிறுவகத்தின் ஒருசில அதிகாரங்களின் அழுத்தம் காணப்படுவதாகவே கல்வியலாளர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர். இது ஏன் என்பது மாத்திரமே இந்த இடத்தில் கேள்வி.  கல்வி அமைச்சரால் அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பிக்கப்பட்ட விடயத்தை நடைமுறைப்படுத்துவதில் என்ன இடர்பாடு என்பதன் விளக்கமே இதற்குப் பதிலாகும்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X