Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Johnsan Bastiampillai / 2022 ஏப்ரல் 10 , பி.ப. 02:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ
கடந்த பல வாரங்களாக எழுதிவந்த ‘ஸ்ரீ லங்கா முதல் சிங்கலே வரை’ தொடரைத் தற்காலிகமாக நிறுத்தி, சமகால நெருக்கடிகளின் பல்பரிமாணம் தொடர்பாக, இப்பந்தி அலசுகிறது.
கடந்த ஒருவார காலத்துக்குள், இலங்கையில் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. அவை வரவேற்கப்பட வேண்டிய மாற்றங்கள். இலங்கையின் இன்றைய நெருக்கடியை, வெறுமனே ஒரு பொருளாதாரப் பிரச்சினையாகப் பார்ப்பது, முழுமையான ஒரு பார்வையாகாது. இது, நான்கு நெருக்கடிகளின் கூட்டு விளைவு. முதலாவது, அரசியல் நெருக்கடி; இரண்டாவது, ஆட்சியியல் - நிர்வாக நெருக்கடி; மூன்றாவது, பொருளாதார நெருக்கடி; நான்காவது, சமூக நெருக்கடி.
ஓன்றோடொன்று பின்னிப்பிணைந்த இந்த நெருக்கடிகள், தனித்தனியாக மிகவும் ஆழமானவை. சுதந்திரத்துக்குப் பிந்தைய பின்கொலனிய தேசக் கட்டுமானத்தோடும் அதன் வளர்ச்சியோடும் நெருக்கமானவை.
இன்று, இலங்கை வேண்டி நிற்பது முற்றுமுழுதான ஒரு கட்டமைப்புசார் மாற்றத்தையாகும். அது சாத்தியப்படாமல், பொருளாதாரப் பிரச்சினைகளுக்கோ ஏனைய பிரச்சினைகளுக்கோ, தீர்வை எட்டமுடியாது. அடிப்படையிலான கட்டமைப்பு மாற்றம் அவசியமானது என்பதை, இரண்டு உதாரணங்களோடு விளக்கலாம்.
முதலாவது, வீட்டுக்குப் போகச்சொல்லி நாடு தழுவிய எதிர்ப்புகள் நடைபெற்று வருகின்ற நிலையிலும், ஜனாதிபதி பதவிவிலக மறுப்பதற்கு வாய்ப்பாக உள்ளது எது என்று நோக்கினால், இலங்கையில் அரச கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ள முறையாகும்.
மக்கள் கருத்துக்குச் செவிசாய்க்காமல், தொடர்ந்தும் அதிகாரக் கதிரையை இறுகிக் கட்டிப் பிடித்திருக்க முடிகின்றது என்கிறபோதே, அடிப்படை ஜனநாயக விழுமியங்கள் இல்லாமலாகி விட்டன. எனவே, அரச கட்டமைப்பில் அடிப்டையான மாற்றங்கள் தவிர்க்க இயலாதவை.
இரண்டாவது, இந்த நெருக்கடியிலும் பயனற்ற, வெற்றுப் பேச்சுகளைப் பேசும் இடமாகவும் பேச்சன்றிச் செயலல்ல என்பதை உறுதிப்படுத்தும் விதமாகவும் பாராளுமன்றம் செயற்படுகிறது.
ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல என்பதை, கடந்த சில நாள்களாக பாராளுமன்றத்தில் நிகழும் நிகழ்ச்சிகள் காட்டுகின்றன.
இவ்விரண்டின் பின்புலத்திலேயே, அரச கட்டமைப்பு சீர்திருத்தங்கள் பற்றிப் பேசியாக வேண்டும். அச்சீர்திருத்தங்கள் இன்றி, இலங்கையில் ஏற்படும் எந்தவொரு மாற்றமும் நீண்ட காலத்துக்கு நிலைக்கவியலாது என்பதோடு மக்களுக்கானதாக அரசு இருப்பதை உறுதி செய்யாது.
கொலனித்துவத்துக்குப் பிந்தைய 75 ஆண்டுகளில், தோல்வியுற்றதும் முழுமையற்றதுமான பல அரச கட்டமைப்புச் சீர்திருத்தத் திட்டங்களை, இலங்கை கண்டுள்ளது. இந்த சீர்திருத்த முயற்சிகளில் சில, தெற்காசியாவில் ஒப்பீட்டளவில், சமூக அமைதியுடன் கூடிய ஜனநாயகத்தின் முன்மாதிரி என்ற நற்பெயரை அனுபவித்தபோது மேற்கொள்ளப்பட்டன.
மற்றவை, இலங்கை அரசியல், உள்நாட்டுப் போர் மற்றும் வன்முறையை நோக்கி ஒரு தீர்க்கமான திருப்பத்தை எடுத்த பின்னர் செய்யப்பட்டவை.
இலங்கை சூழலில், அரச கட்டமைப்பு சீர்திருத்தம் என்பது, பிராந்திய சுயாட்சி மூலம் பெரும்பான்மை மற்றும் சிறுபான்மை இன சமூகங்களுக்கு இடையில், அதிகாரப் பகிர்வுக்கான ஏற்பாடுகளை உருவாக்குவதற்காக அரச கட்டமைப்பை மறுசீரமைப்பதாகும்.
ஆரம்பகால சீர்திருத்த முயற்சிகள் 1958, 1966 இல் முன்னெடுக்கப்பட்டன. இரண்டு சந்தர்ப்பங்களிலும், ஆளும் சிங்கள அரசியல் உயரடுக்கின் தலைவர்கள், தமிழ் அரசியல் உயரடுக்கின் தலைவர்கள் பிராந்திய சுயாட்சிக்கான வரையறுக்கப்பட்ட ஏற்பாடுகளை செயற்படுத்த ஒப்புக்கொண்டனர்.
இனக்கலவரம், உள்நாட்டுப் போராக உருவாவதற்கு முன்னர், இலங்கையின் ‘சமாதான காலத்தில்’ மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் அவை. சிங்கள தேசியவாத தொகுதிகளின் எதிர்ப்புக்கு மத்தியில், இரண்டு முயற்சிகளும் கைவிடப்பட்டன. மற்றவை பின்னர் வந்தன; வன்முறை மற்றும் நீடித்த இன உள்நாட்டுப் போரின் புதிய சூழலில், 1987, 1994-1995, 2000, 2002, 2007-2008, 2015-2016 ஆகியவை சீர்திருத்த தோல்வியின் தொடர்ச்சியான செயற்பாட்டில் முக்கியமான ஆண்டுகள். இந்த வரலாறு, இலங்கையை ஒரு பயனுறுதி வாய்ந்த செயற்றிறன்மிக்க இயங்குநிலை ஜனநாயகமாக உருமாற்றும் செயற்பாடுகள் தொடர்ச்சியாகக் தோல்விகண்டதன் விளைவு என்பதையே நோக்க வேண்டியுள்ளது.
போராக உருமாறிய இனப்பிரச்சினை, அரச கட்டமைப்பு சீர்திருத்தத்தை, அரசியல் ரீதியில் அவசியமாகவும் அதேவேளை சாத்தியமற்றதாகவும் ஆக்கியுள்ளது.
இனப்பிரச்சினை தொடர்பாக, இலங்கையில் மேற்கொள்ளப்படும் அனைத்து அரச கட்டமைப்பு சீர்திருத்த முயற்சிகளில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், அவை பகுதி உயரடுக்குகளிடையே ஒருமித்த கருத்தொன்றை அடையவியலாததன் விளைவுகளாகும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அவை மேலே இருந்து அரச கட்டமைப்பு சீர்திருத்தத்துக்கான பயிற்சிகளாக இருந்தன.
இந்தத் தோல்வியடைந்த அரச கட்டமைப்பு சீர்திருத்த முயற்சிகள் அனைத்திலும் பொதிந்துள்ள ஒரு முக்கிய பாடம் என்னவென்றால், இத்திருத்தங்கள் சாத்தியமாவதற்கு உயரடுக்கின் ஒருமித்த கருத்து, பகுதியாக அல்லது முழுமையாக அவசியமானது.
ஆனால், அது போதுமான நிபந்தனை அல்ல. இலங்கையில் இது சம்பந்தமாக, தீர்க்க முடியாத பிரச்சினை என்னவென்றால், அதிகாரப்பகிர்வு அல்லது கூட்டாட்சிப் பாதையில், அரச கட்டமைப்பு சீர்திருத்தங்களுக்கு, கீழிருந்து கோரிக்கை இல்லாததுதான்.
இலங்கையின் ஒற்றையாட்சி மற்றும் மையப்படுத்தப்பட்ட அரசை மாற்றுவதற்கான மக்கள் கோரிக்கை, ஓர் எதிர்ப்புரட்சி அல்லது வலுவான எதிர்ப்பு வடிவில் இதுவரை வரவில்லை. இப்போதைய மக்கள் கோரிக்கைகள், நேரடியாகவும் மறைமுகமாகவும் கோருவது அரச கட்டமைப்பைச் சீர்திருத்துவது பற்றியேயாகும்.
இலங்கை, இன்று ஒரு திருப்புமுனையில் நிற்கிறது. முதலாவதாக, இன மோதல்களுக்கு இனரீதியான தீர்வுகள் இல்லை. இலங்கை போன்ற பல்லின நாட்டில், அனைவருக்குமான தீர்வுகளே அவசியமானவை.
இரண்டாவதாக, இலங்கையின் பன்மைத்துவ கூட்டாட்சி சமூகத்தின் மூன்று முக்கிய இன சமூகங்களானவை - பிராந்திய, உள்ளூர் மற்றும் பிற சிறுபான்மையினருடன் தீவிர ஒத்துழைப்பில் - சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள் ஆகியோர் அரசியல் ரீதியாக மீண்டும் இணைவது முன்நிபந்தனையாகிறது.
இதுவரை காலம், இன சமூகங்களுக்கு இடையேயான உறவென்பது, ஒரு பலவீனமான கூட்டமைப்பாக இருந்ததோடு, அதன் உறவின் முறிவுக்கு வரலாற்று நிகழ்ச்சி நிரல் காரணமானது. தன்னெழுச்சியான போராட்டங்கள் சமூகங்களிடையே புதிய உறவை முகிழ்த்துள்ளன. இது முன்னேற்றகரமானது. ஜனநாயக அரசியல் உரையாடல் ஒன்றுக்கான வாய்ப்பு உருவாகியுள்ளது. இது சிறுபான்மையினருக்கு ஜனநாயகத்தின் உரிமைகளை விரிவுபடுத்த வேண்டிய அவசியம் குறித்துப் பேசுவதற்கான களத்தை மக்களே ஏற்படுத்தியுள்ளார்கள். இதற்கிடையில், இலங்கை அரசின் சிதைவுப் பாதையைத் தடுத்து நிறுத்த, அரசின் அமைப்புகளை மீண்டும் உருவாக்குவது வரலாற்றுத் தேவையாக மாறியுள்ளது.
பொறுப்பற்ற ஜனாதிபதியுடனும் பாராளுமன்ற உறுப்பினர்களுடனும் காலந்தள்ளும் துர்ப்பாக்கிய நிலைக்கு, இலங்கையர்கள் தள்ளப்பட்டுள்ளார்கள். கடந்த ஒருவார நிகழ்வுகள், சில தெளிவான விடயங்களை எமக்குக் காட்டியுள்ளன. இந்த நெருக்கடியிலிருந்து, இலங்கையர்கள் கற்றுக்கொண்டுள்ள பாடங்களைச் சுருக்கமாக இவ்வாறு வகைப்படுத்தலாம்.
அ. இனத்துவ தேசியவாதத்தால் பொருளாதார பிரச்சினைகளை தீர்க்க முடியாது.
ஆ. வல்லுநர் அரசியல் (Technocratic politics) தீர்வு அல்ல.
இ. பொது நிர்வாகத்தை இராணுவமயமாக்கி உருவாக்கப்பட்ட ‘ஒழுக்கம்’ என்ற தோற்ற மயக்கம், மோசமாக தோல்வியடைந்துள்ளது.
ஈ. வலுவான தலைவரால், நாட்டை வளமான நிலைக்கு கொண்டு செல்ல முடியாது.
உ. ஜனரஞ்சக அரசியல் எப்போதும் பொருளாதார வளர்ச்சியை குழிபறிக்கும்.
இன்று மக்கள் பொருளாதாரப் பிரச்சினைகளின் விளைவால் வீதிக்கு வந்துள்ளார்கள். இந்தப் பொருளாதார நெருக்கடியின் பின்னணியில், நான்கு அடிப்படைக் காரணிகள் மறைந்துள்ளன.
1. இலங்கையானது ஜனநாயகத்தின் சிதைவை மையப்படுத்தியுள்ளது.
2. பொது நிர்வாகத்தின் இராணுவமயமாக்கல் அடிப்படை, அரசாட்சியைக் கேலிக்கூத்தாக்கியுள்ளது.
3. கொள்கைகள் தோல்வி அடைவதன் விளைவுகள் குறித்து, உணர்வற்ற ஓர் அரசாங்கம்.
4. ஏழைகள், பின்தங்கிய மக்களின் பொருளாதார துன்பங்களை எளிதாக்குவதற்கு, பயனுள்ள அரசாங்க தலையீடுகளை செய்ய இயலாத நிலைமை.
இவற்றின் அடிப்படையிலேயே முன்சொன்ன நான்கு நெருக்கடிளை இலங்கை எதிர்நோக்குகிறது. இலங்கை அவ்வப்போது பிச்சைக் கிண்ணத்துடன் நாடு விட்டு நாடு செல்வதைத் தவிர்க்கவேண்டுமாயின், அரசியல், பொருளாதாரக் கட்டமைப்பில் மாற்றங்களைக் கொண்டு வருவதற்கும், தன்னை மறுபரிசீலனை செய்வதற்கும் சற்று நிதானித்து கடுமையாக சிந்திக்க வேண்டும்.
மக்கள் அதிகாரத்தை நோக்கிய இப்போதைய பயணம், இறுதி பயணமாகவும் இருக்கவியலும். விழிப்பாகவும் தெளிவாகவும் இல்லாது போயின், கல்லுளிமங்கர்களோடு ஆயுள்முழுதும் காலம் கழிக்க நேரும். அதற்குப் பயனான பாசிசம் என்ற கொடுந்தண்டனை எம்மை வந்து சேரும்.
35 minute ago
47 minute ago
56 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
47 minute ago
56 minute ago